2025 கேதார கௌரி விரதம்: பெண்கள் இதை செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்
விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கேதார கௌரி விரதம் இருக்கிறது. இந்த விரதத்தை பெண்கள் தவறாமல் கடைபிடிப்பார்கள். அதாவது திருமணம் ஆன பெண்களாக இருந்தால் தங்களின் கணவன் குடும்பத்தின் நலன் கருதியும், திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் தங்களுக்கு விரைவில் நல்ல கணவன் கிடைத்து திருமணம் நடைபெற வேண்டியும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
மேலும், அன்னை பார்வதி தேவி இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரியாத வரம் வேண்டி கடைபிடித்த வரம் தான் இந்த கேதார கௌரி விரதம். இவ்வாறு அன்னை பார்வதி தேவியின் வேண்டுதலில் சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர் உடலில் ஒரு பாகத்தையே அன்னைக்கு கொடுத்து அவரின்றி சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவமும் இல்லை என்று கணவன் மனைவியின் உறவை உணர்த்தினார்.
ஆக, கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க கட்டாயம் இந்த விரதம் இருப்பது அவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். மேலும், அன்னை பார்வதி தேவி ஐயனை நோக்கி இருந்த விரதங்களில் இந்த விரதம் மிக முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த விரதம் ஆகும். ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படுகிறது.
இந்த உலகத்தில் புனிதமான உறவுகளில் கணவன் மனைவி உறவு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதாவது இவ்வளவு பெரிய உலகத்தில் தங்களுக்கு குடும்பம் என்று ஒரு உலகம் அமைத்து அதில் தலைவன் தலைவியாக ஆட்சி செய்து வாழந்து வாழக்கூடிய அற்புதமான உறவாகும் இந்த கணவன் மனைவி உறவு.
அப்படியாக, அந்த உறவில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சரியாக பாதியாக எந்த ஒரு ஆணவமும், கோபமும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்து விட்டால் அவர்கள் உலகத்தில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இருவரும் சேர்ந்து போராடி வென்று விடலாம். இதை தான் பல புராணங்களும் பல வகையில் நமக்கு எடுத்துரைக்கிறது.
மேலும், ஸகந்த புராணப்படி பார்வதி தேவியின் 21 நாள் விரதம் இந்த நாளில் தான் சிவன் பாதி சக்தி பாதி என்று ஒன்று இணைந்ததாக சொல்கிறார்கள். அந்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.
இந்த நாளில் வீடுகளில் குடும்பத்துடன் வீடுகளில் பூஜை செய்தும் விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தால் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆதலால் குடும்பத்தில் நிம்மதி வேண்டும் என்றால் கணவன் மனைவி அங்கு விட்டுக்கொடுத்து வாழக்கூடிய பக்குவம் பெற வேண்டும். அதற்கு முதலில் தங்களின் துணையை நேசிக்க வேண்டும். ஆக, இவ்வாறு துணையை நேசித்து வாழ தொடங்கும் பொழுது மகாலக்ஷ்மி மனம் மகிழ்ந்து அனைத்து ஐஸ்வரியங்களையும் வழங்குகிறாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







