எது சிறந்த ஆட்சி? கிருஷ்ணர் சொல்லும் பதில்
உலகில் மிக மோசமான விஷயங்களில் ஒன்று தற்பெருமை. நாம் பிறருக்கு ஒரு சிறிய தானம் செய்துவிட்டு நான் இதை செய்து விட்டேன் என்று பலரிடம் பலமுறை பெருமை செய்யும் சூழலில் தான் மக்கள் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி நாம் செய்யும் தற்பெருமை நம்மை எவ்வளவு தாழ்த்திய மனிதனாக ஆக்கும் என பகவான் கிருஷ்ணர் உணர்த்திய கதை ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஒருமுறை கிருஷ்ணர் தர்மரை பார்ப்பதற்கு சென்றிருந்தார். அப்பொழுது தர்மர் ஏழைகளுக்கு தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அதை முடித்துவிட்டு கிருஷ்ணரை சந்தித்த தர்மர் நான் தினமும் தான தர்மம் செய்வதை பற்றி மிக சிறப்பாகவும் உயர்வாகவும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
மேலும், தான் ஒரு சிறந்த மன்னன் என்ற கர்வம் தர்மரிடம் இருப்பதையும் கிருஷ்ணர் அமைதியாக கவனித்துக்கொண்டு இருந்தார்.
தர்மர் தற்பெருமை பேச பேச கிருஷ்ணர் மனதில் இவருக்கு நல்ல பாடம் ஒன்று போதிக்க வேண்டும் என்று விரும்பினார்.
தர்மர் தன் பெருமைகளை பேசிமுடித்த பிறகு, கிருஷ்ணர் தர்மரிடம் நாம் பாதாளலோகம் வரை சென்று வரலாமா? என கேட்க தர்மரும் சரி என்று சொன்னார்.
பிறகு கிருஷ்ணரும் தர்மரும் பாதாளலோகம் சென்றனர். பாதாள லோகத்தில் பலிச்சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.
ஆனால் அங்கு ஆட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதது போல் அமைதியான சூழலில் அந்த பாதாளலோகம் இருப்பதை தர்மர் கவனித்து வந்தார்.
மேலும் மக்கள் எல்லோரும் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்த்த தர்மருக்கு மனதில் சிந்தனைகள் குழப்பங்கள் ஓட ஆரம்பித்தது.
அப்பொழுது பலிச்சக்கரவர்த்தியை கிருஷ்ணரும் தர்மரும் சந்திக்க பலிச் சக்கரவர்த்தியிடம் தர்மர் மிகவும் சிறந்த மனிதர்.
அவர் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு தானம் தர்மம் வழங்குவதில் சிறந்தவர். சிறந்த ஆட்சி நடத்துபவர் என் கிருஷ்ணர் சொல்லிக்கொண்டு இருக்க பலிசக்கரவர்த்தியின் முகம் வாடியது.
பிறகு அவர் தர்மரை பார்த்து. ஆம் !!உண்மையில் நீங்கள் மிக உயர்த்தவர். தான தருமங்கள் எல்லாம் செய்து சிறந்த மனிதனாக இருக்கின்றீர்கள்.
ஆனால், என்னால் தான் என் மக்களுக்கு உதவிகளும் தான தர்மங்கள் செய்முடியவில்லை என சொல்ல. தர்மர் அதிர்ச்சியாக ஏன் என்று கேட்டார்?
அதற்கு பலிச்சக்கரவர்தி எம் மக்கள் எல்லாம் செழிப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
என் ஆட்சியில் ஒரு ஏழைகள் கூட இல்லை. ஆதலால், நான் தானம் செய்தாலும் அவர்கள் வாங்க மறுப்பார்கள் என சொல்ல தர்மர் தலைகுனிந்து விட்டார்.
பிறகு மனதில் அவருடைய ஆட்சி சிறப்பானதாக இல்லை என்பதையும் பலிச்சக்கரவர்தியின் நல்ல குணத்தையும் பார்த்து தன்னையும் அவர் செய்யும் ஆட்சி அமைப்பையும் மாற்றி அமைத்து ஏழைகள் இல்லாத ஆட்சி கொண்டு வர முடிவு செய்தார்.