யார் நல்லவர்கள்?யார் கெட்டவர்கள்?கிருஷ்ணர் சொன்ன பதில்
இந்த உலகில் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று ஒவ்வொரு மனதையும் சந்தர்ப்பம் பொறுத்தே அமைகிறது.அவர்களை கால சூழ்நிலைகள் தான் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும்.
என்னதான் அவர் அவர் பொறுத்து சில நியதிகள் இருந்தாலும்,நியாயம் அநியாயம் அவர் அவருக்கு ஏற்ப வகுத்து கொண்டாலும் உலக தராசில் பொதுவான நியாயம் என்று ஒன்று இருக்கும்.
அது தான் எப்பொழுதும் ஜெயிக்கும்.அதன் அடிப்படையில் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்ப்போம்.
தர்மத்தின் தலைவன் பகவான் கிருஷ்ணன் ஒரு நாள் தருமனையும், துரியோதனனையும் தன்னருகே அழைத்து உங்கள் இருவருக்கும் ஒரு வேலை தரப் போகிறேன்.அதை நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.
இருவரும் அவை என்னவென்று சொல்லுங்கள் என்று கிருஷ்ணரை கேட்ட பொழுது,
கிருஷ்ணர் "தருமா, நீ இன்று மாலைக்குள் ஒரு கெட்ட மனிதனை என்னிடம் அழைத்து வா" என்றார் .
பிறகு துரியோதனனை பார்த்து " துரியோதனா, நீ இன்று மாலைக்குள் ஒரேயொரு நல்ல மனிதனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்து" என்றார்
இருவரும் பகவான் கிருஷ்ணர் சொன்ன படி புறப்பட்டார்கள். மாலையும் ஆனது. இருவருமே யாரையும் அழைக்காமல் வெறுங்கையோடு வந்து கிருஷ்ணன் முன்னால் நின்றார்கள்.
கிருஷ்ணர் "என்ன ஆயிற்று ஏன் யாரையும் அழைத்து வரவில்லை?" என்று கேட்க
துரியோதனன் "கண்ணா.உலகம் மிகவும் மோசமாகி விட்டது. ஒருவர் கூட நல்லவராக இல்லை.நானும் நாள் முழுக்க தேடிப் பார்த்து விட்டேன்" என்றான்
பிறகு "நீ சொல் தருமா" என்று கேட்டார் கிருஷ்ணன்.
"கண்ணா.. உலகம் எவ்வளவு அழகானது! நான் கண்ட மனிதர்கள் எல்லாம் அத்தனை நல்லவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதேனுமொரு நல்ல குணம் இருக்கிறது. கெட்டவர்கள் என யாருமே இல்லை" என்றான் தருமன்.
கண்ணன் சிரித்தபடி சொன்னான் "தருமா, துரியோதனா உங்கள் கண்கள் வழியே இந்த உலகை பார்க்கும் பொழுது உங்கள் மன எண்ணங்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
துரியோதனன் மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்துள்ளதால் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் கெட்டவர்களாகவே தெரிந்தார்கள்.
அதனால் அவனால் ஒரு நல்லவனைக் கூட கூட்டி வர முடியவில்லை! ஆனால் தருமனோ, தனது மனம் முழுக்க நல்ல எண்ணங்களை கொண்டவனாதலால், பார்க்கும் மனிதர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அதனால் தான் ஒரு கெட்டவன் கூட அவன் கண்ணில் படவில்லை!
எனவே, இவ்வுலகை நாம் பார்க்கும் பார்வைகள் அனைத்துமே நம் குணத்தை பொறுத்தது தான்! நல்ல எண்ணம் கொண்டவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணி ஏமாந்து போவது இதனால்தான்!
எனவே, கவலை வேண்டாம்.பாரதப் போரில் கடைசியில் வென்றது தருமனே!
தர்மம் எப்பொழுதும் வெல்லும் என்பதற்கு உலகில் பல சாட்சிகள் இருக்கிறது.
ஓம் நமோ நாராயணாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |