சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் குன்றக்குடி முருகன் கோவில் அமைந்துள்ளது.
பிள்ளையார்பட்டியில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருப்பதால் பிள்ளையார்பட்டிக்குச் செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள குன்றக்குடி முருகன் கோவிலுக்கும் சென்று இறைவனை தரிசித்து வருவதைக் காணலாம். குன்றக்குடி மலை மயில் வடிவில் காணப்படுவதால் இம்மலைக்கு மயில்மலை, அரச வனம், கிருஷ்ண நகரம், சிகண்டி மலை, மயூர கிரி, என்று பல பெயர்கள் உண்டு.
மருது பாண்டியரின் திருப்பணிகள்
1780ல் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த பெரிய மருது பாண்டியருக்கு முதுகில் ராஜபிளவை ஏற்பட்டது. அப்போது அவரைச் சந்திக்க வந்த காடன் செட்டியார் குன்றக்குடி முருகன் கோவிலின் விபூதியை அந்த பிளவையில் பூசவும் பிளவை சுகமாகிவிட்டது.
நோய் குணமடையவும் மனம் மகிழ்ந்த பெரிய மருது குன்றக்குடி முருகன் கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்தார். தான் அடிக்கடி அங்கு வந்து தங்கிய இறைவனை வழிபட தனக்கென்று ஒரு அரண்மனையும் கோயிலின் அருகினில் கட்டினார்.
கோவிலுக்குத் தென் திசையில் தீர்த்தக் குளத்தைச் சரி செய்து படித்துறைகள் அமைத்தார். சுற்றிலும் தென்னை மரங்கள் வைத்து அப் பகுதியை குளிர்ச்சியாக மாற்றினார். இன்றும் அவருடைய பெயரால் அந்த ஊருணி மருதாவூருணி எனப்படுகின்றது.
மூலவர் சந்நிதிக்கு முன்பு மயில் மண்டபமும் உற்சவர் சன்னதி முன்பு அலங்கார மண்டபமும் எழுப்பினார். ராஜகோபுரமும் கட்டினார். அதன் அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்ற எழுத்துக்களை பொறித்து உற்சவமூர்த்திக்குத் தங்க கவசமும் செய்து சாத்தினார்.
உற்சவத்துக்குத் தேர் செய்து கொடுத்தார். தைப்பூச நன்னாளன்று தேர்த் திருவிழா மருது பாண்டியரின் பெயரால் நடந்து வருகிறது. தனக்கு விபூதி பூசிக் குணமளித்த காடன் செட்டியார் பெயரிலும் ஒரு மண்டகப்படி கட்டிக் கொடுத்தார்.அன்னதானச் சத்திரமும் கட்டினார்.
கதை
மயில் மலை
குன்றக்குடி மலை முருகனின் சாபம் பெற்றதால் மயில் மலையாகக் காட்சியளிக்கின்றது. இதற்கென்று ஒரு கதையும் வழங்குகின்றது ஒருமுறை முருகனைப் பார்க்க திருமாலும் பிரம்மனும் வந்தார்கள். அவர்கள் ஏறி வந்த கருடனும் அன்னப் பறவையும் முருகனின் அரண்மனை வாயிலில் நின்றன.
அங்கிருந்த மயில் விநாச காலே விபரீத புத்தி என்ற கருத்துக்கு இணங்க அடுத்தவரின் பேச்சை கேட்டு சரியாக ஆராயாமல் கருடனையும் அன்னத்தையும் உண்டு விட்டது. முருகனைப் பார்த்துவிட்டு வெளியே வந்த திருமாலும் பிரம்மனும் தங்கள் வாகனங்களைக் காணாமல் திகைத்து நின்றனர்.
முருகனிடம் முறையிட்டனர். முருகன் மயிலின் சதியை உணர்ந்து அவற்றைத் திரும்ப கொடுக்குமாறு பணித்தார். கருடனும் அன்னமும் திரும்பக் கிடைத்ததன. திருமாலும் பிரம்மனும் கிளம்பிச் சென்றனர். முருகன் மயிலை பூலோகத்திற்கு போய் மலையாக கிட என்று சபித்தார்.
'ஐயா அறியாமல் செய்துவிட்டேன் என் பாவத்திற்கு பிராயச்சித்தம் வழங்குங்கள்' என்ற மயில் கேட்கவும் 'நான் குன்றக்குடிக்கு வந்து உனக்கு சாப விமோசனம் தருவேன்' என்றார். ஒரு நன்னாளில் முருகன் குன்றக்குடிக்கு வந்ததும் மலையை மீண்டும் மயிலாக மாற்றினார். மயில் வந்த பிறகும் கூட அந்த மலை மயில் வடிவிலேயே இருந்தது. முருகன் அந்த மலையின் உச்சியில் கோயில் கொண்டு அருளினார்.
கருவறை நாதர்
குன்றக்குடி குகைக் கோவிலில் கருவறையில் முருகன் ஒரே கல்லில் மயில் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். மூலமூர்த்தமும் திருவாச்சியும் ஒரே கல்லில் அமைந்துள்ளது. அருகில் வள்ளியின் தெய்வானையும் தனித்தனி கற்களில் மைலில் அமர்ந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளனர்.
இக்கோலம் வேறெந்த கோயிலிலும் காண கிடைக்காத கோலம் ஆகும். இங்குக் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் மூலவரின் பெயர் சண்முக நாதர். ஆறுமுகங்களுடன் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கின்றார். மயிலின் மீது அமர்ந்து வலது காலை மடித்து இடது காலைத் தொங்க விட்டுள்ளார்.
குன்றக்குடி கருவறை நாதருக்கு
செட்டி முருகன், குன்றை ஊரன், குன்றை உடையான், மயூர கிரி நாதன், மயில் கலை கந்தன், குன்றை முருகன், தேனாறுடையான் என்று பல பெயர்கள் உள்ளன. இம் முருகனை சூரியன், நாரதர், விசுவாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் ஆகியோர் வணங்கி வரம் பெற்றதாக தல புராணக் கதை குறிப்பிடுகின்றது.
பாண்டவர்களும் அகத்தியரும் வந்து வணங்கியதாகவும் கதைகள் உள்ளன. அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலும் பாம்பன் சுவாமிகள் தன்னுடைய பக்திப் பாடல்களிலும் குன்றக்குடி முருகனைச் சிறப்பித்துள்ளனர்.
படிக்கட்டுகள்
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு மேலே ஏறி செல்ல 149 படிகள் உள்ளன. பக்தர்கள் இளைப்பாறும் வகையில் பல மண்டபங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் இருக்கும் இக்கோவில் ஒரே திருச்சுற்று மட்டுமே உள்ளது.
சிவன் சன்னதி
மலையின் அடிவாரத்தில் சிவபெருமானுக்குத் தனிக் குடவரை கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் பெயர் தேனாற்று நாதராகும். தேனாற்றுநாதர் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர். இவரை அகத்திய முனிவர் வணங்கி வழிபட்டார் என்று தல புராணக் கதை கூறுகின்றது. அம்மன் அழகம்மை என்றும் அருள் சக்தி என்றும் அழைக்கபடுகின்றார்.
உபசன்னதிகள்
மலையைக் கீழ் இருந்து மேல் நோக்கிப் பார்க்கும்போது அது மயில் தோகை விரித்து இருப்பது போல தோன்றுவதால் அதன் கீழே இருக்கும் விநாயகப் பெருமானுக்கு தோகையடி விநாயகர் என்று பெயர். அவரை வணங்கிய பின்பு மலையேறிச் சென்று முருகனை தரிசிக்க வேண்டும்.
இதற்கு சற்று அருகில் வல்லப கணபதிக்கு தனி சன்னதி உண்டு. அங்கு அவர் தேவியுடன் காட்சி அளிக்கின்றார். முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் இடும்பனுக்கும் தனிச் சன்னதி உள்ளது. 17 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட கோயில் என்பதால் கந்த புராணத்தில் வரும் வீரபாகுவுக்கும் ஒரு தனி சன்னதி உண்டு.
கோயிலுக்குள் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ண கணபதி, பைரவர், நடராஜர் ஆகியோரர் உள்ளனர். காசி விஸ்வநாதரும் விசாலாட்சியும் தனிச் சன்னதியில் உள்ளனர். ஈசான்ய மூலையில் நவகிரக சந்நிதியும் உள்ளது.
மருதுபாண்டியர் கட்டிய அலங்கார மண்டபத்தில் அவர்களின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. அடுத்த மயில் மண்டபத்தில் கொடிமரமும் பலிபீடமும் உள்ளது இக்கோவிலின் தலவிருட்சம் அரச மரமாகும் இப்பகுதி முன்பு அரசு வனம் என்று அழைக்கப்பட்டது. இத் தலத்தின் தீர்த்தம் தேனாறு எனப்படுகிறது. எனவே இங்கு எழுந்தருளியிருக்கும்.
இக்கதை இம்மலைப் பகுதி சமண பௌத்தர்கள் வாழ்ந்த இம்மலைப் பகுதியில் சமணர்களின் கட்டு படுக்கைகள் காணப்படுகின்றன பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. பாண்டியர் கட்டிய ராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
விழாக்கள் மற்ற முருகன் கோவில்களைப் போலவே குன்றக்குடி முருகன் கோவிலிலும் வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
சித்திரை மாதம் பால் பெருக்கு விழாவும் ஆனியில் மகாபிஷேகமும் ஆடியில் திருப்பணி பூஜையும் ஆவணி மாதம் புட்டுத் திருவிழாவும் புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழாவும் ஐப்பசியில் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரமும் கார்த்திகையில் திருக்கார்த்திகையும் விமரிசையாக இக்கோவிலில் நடைபெறுகின்றன.
திருமணத் திருத்தலம்
குன்றக்குடி மலையில் சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையோடு இணைந்து காட்சி அளிப்பதால் இத்தலத்தில் திருமணம் செய்யும் மணமக்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். எனவே இம்மலை கோயில் திருமணத் திருத்தலமாக அமைகின்றது.
நோய் தீர்க்கும் மருத்துவத்தலம்
மருது பாண்டியரின் நோய் குணமானதால் இம் முருகனுக்கு நோயை குணமாக்கும் சக்தி உண்டு. கலிங்க நாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கியதாக ஒரு கதை நிலவுகின்றது. இதனாலும் இத்தலம் மருத்துவ திருத்தலம் ஆகும்.
நேர்த்திக்கடன்கள்
குன்றக்குடி முருகன் கோவிலில் சில வித்தியாசமான நேர்த்திக்கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்று கும்பிடு தண்டம் என்பதாகும். கோயிலைச் சுற்றி தொடர்ந்து கும்பிட்டு விழுந்து கொண்டே வர வேண்டும்.
அடிப்பிரதட்சனம்
அடி பிரதட்சணம் என்பது அடி மேல் அடி வைத்து கோவிலைச் சுற்றி வருவதாகும். அங்கப்பிரதட்சணமும் உண்டு. ஆண்கள் இங்கு அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். பெண்களின் மார்பு மண்ணில் படக்கூடாது என்ற காரணத்தினால் அங்கப் பிரதட்சணம் செய்வதில்லை. அவர்கள் அடிப்பிரதட்சண நேர்த்திக்கடன் மட்டும் நிறைவேற்றுகின்றனர்.
காவடி
பால்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி போன்ற காவடிகள் எடுத்து வந்தும் பால்குடம் எடுத்து வந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். பங்குனி உத்தரத்தன்றும் தைப்பூசத்தன்றும் செட்டியார் இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர் காவடி எடுத்து வருகின்றனர். 'குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் … ' என்ற பழமொழி குன்றக்குடி காவடியின் மதிப்பை உணர்த்த வல்லது.
கோட்டை காவடி
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு விவசாயிகள் தங்கள் முதல் விளைச்சலை காணிக்கையாக செலுத்துகின்றனர். வைக்கோல் விரித்து அதில் நெல்லைக் கொட்டி பொதிந்து திரித்துக் கட்டிக் கொண்டு வந்து கோவிலுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர்.
இந்த நெல் பொதிக்குக் 'கோட்டை' என்று பெயர். மதுரை அழகர் கோவிலிலும் இத்தகைய கோட்டையைத் தலையில் சுமந்தபடி பக்தர்கள் கொண்டு போய் கோவிலில் காணிக்கை செலுத்துவர். குன்றக்குடி முருகன் கோவிலில் இதனை 'கோட்டை காவடி' என்று அழைக்கின்றனர். இச்சிறப்பு இக்கோவிலுக்கு மட்டுமே உண்டு.
தத்து கொடுத்தல்
காரைக்குடி பகுதியில் பல கோவில்களில் குழந்தைகளைத் தத்து கொடுத்து வாங்கும் முறை காணப்படுகின்றது. செட்டியார் சமுதாயத்தில் வாரிசு இல்லாதவர்கள் உறவினர்களின் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் உள்ளது.
தங்கள் குழந்தைகளுக்கு ஆயுள் தோஷம் இருந்தால் அல்லது பிள்ளைகளால் பெற்றோருக்கு தோஷம் இருந்தால் இக்கோவிலில் குழந்தையை முருகனுக்குத் தத்தாகக் கொடுத்து விடுகின்றனர். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், குன்றக்குடி முருகன் கோவில் போன்ற கோவில்களுக்கு தத்துக் கொடுத்த பின்பு இறைவனுக்குரிய அக் குழந்தையை குழந்தையின் பெற்றோர் வளர்ப்பு பெற்றோர் போல இருந்து வளர்க்கின்றனர். குழந்தை கோயிலுக்குரிய குழந்தையாகவே இவர்களிடம் வளர்கின்றது. இதனால் குழந்தைக்குரிய தோஷங்கள் பெற்றோரையும் குழந்தையையும் தாக்காது.
வெள்ளி உறுப்பு காணிக்கை
மேலும் நோய் வந்தவர்கள் நோய் தீர வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டிக்கொண்டு எந்த உறுப்பில் நோய் வந்ததோ அந்த உறுப்பை வெள்ளியில் செய்து வாங்கி உண்டியலில் செலுத்துகின்றனர்.
உப்பும் மிளகும்
கோயில் தீர்த்தத்திலும் இடும்பன் சன்னதியிலும் பக்தர்கள் உப்பும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்துகின்றனர். உப்பு கரைவது போல பக்தர்களின் தோல் நோய் காணாமல் போய்விடும் .
அரிசி தூவுதல்
பறவைகளுக்கு உணவிட வேண்டும் என்ற காரணத்திற்காக அரிசி கொண்டு வந்து மலைப் படிகளில் ஏறும் போது தூவிச் செல்கின்றனர் இந்த நேர்த்திக்கடன் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
வேள்வி & அர்ச்சனை
குன்றக்குடி முருகன் கோவிலில் வேள்வி நடத்துவதாகவும் சிறப்பு அர்ச்சனை செய்வதாகவும் நேர்ந்து கொள்கின்றனர். தங்களுடைய நேர்ச்சை நிறைவேறியதும் சண்முகார்ச்சனை மற்றும் சண்முக வேள்வி நடத்துகின்றனர்.
குன்றக்குடி கோயில் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு திருமணம் நடைபெறவும் நோய் தீரவும் உதவுகின்றது.
முன் வரலாறு
குன்றக்குடி மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கற் படுக்கைகள் உள்ளன. சமணர்கள் கழுவேற்றத்துக்குப் பின்பு இவர்கள் இங்கிருந்து போயிருக்கலாம் அல்லது சைவத்துக்கு மாறியிருக்கலாம். சமனர்கள் வருவதற்கு முன்பு அரிட்டாபட்டி, குன்றக்குடி, அய்யனார்குளம் பாண்டிகோயில் மற்றும் ஏரி, குளங்களுக்கு அருகே உள்ள அய்யனார் கோயில்கள் என பௌத்த செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது.
சமன பௌத்தர்கள் மலைகளில் வசித்ததற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. பௌத்தர்கள் கௌதமர் ஞானோதயம் பெற்ற அரச மரங்களை வளர்த்தனர். வளர்க்கும்படி பொது மக்களையும் ஊக்குவித்தனர். குன்றக்குடியும் பௌத்தர்கள் வாழ்ந்த அரசவனம் ஆகும்.
பௌத்தர்கள் இம்மலையின் அடிவாரத்தில் மருத்துவ சேவை செய்துள்ளனர் என்பதை இக்கோயிலின் மருத்துவ நேர்ச்சைகள் உணர்த்துகின்றன. பௌத்தர்கள் மனிதர்களுக்கு மட்டும் அல்லாது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் செய்த சேவையின் தொடர்ச்சியாகவே பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுப்பதும் பறவைகளுக்கு உணவு தானியம் கொடுப்பதும் எறும்புகளுக்கு அரிஷிமாவில் கோலம் போடுவதும் தொடர்கின்றன. இதன் மிச்ச சொச்சமாகவே குன்றக்குடியில் படி ஏறும்போது அரிசி தூவுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |