விநாயகர் வரலாறும் வழிபாடும்
இந்து சமயத்தில் விநாயகருக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற சமயங்களிலும் உண்டு. எல்லா தரப்பு மக்களின் அன்புக்கும் பாத்திரமானவர் விநாயகர் அல்லது பிள்ளையார் ஆகும்
தோப்பு கரணம் (brain yoga)
பிள்ளையாரின் தோற்றம் சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரக்கூடியது. பொதுவாகவே சிறுவர்களுக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும். யானை முகம் கொண்ட கடவுள் என்று கூறும் போது அவர்களின் மனங்கவரும் வடிவமாக திகழ்கின்றது. அவர் முன் நின்று தோப்புக் கரணம் போடுவதும் சிறுவர்களுக்கு விருப்பமானது. இதை brain yoga என்பர்.
விலங்கு முகமும் மனித உடம்பும்
விருப்பமான விலங்குருவமும் மனித உருவமும் இணைந்து ஒரு உருவத்தை கற்பனை செய்து பார்ப்பதை ஜூ மார்ஃபிசம் (zoomorphism) என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். மனிதனை விலங்கு முகமும் மனித உருவம் கொண்ட கடவுள் ஜூ மார்ஃபிசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆவார் உலகெங்கும் இத்தகைய கடவுளர் உருவங்கள் நிறைய காணப்படுகின்றன.
இந்தியாவில் பிள்ளையார், நந்தியம்பெருமான், கருடாழ்வார், அனுமன், ஹயக்ரீவர், சுக முனிவர், (மகிஷாசுரன் அசுரன்) போன்றோர் விலங்கு + மனித உருவங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்கும் தெயவங்கள் ஆவர் இத் தெய்வ உருவங்களில் விலங்குகளின் பண்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த விலங்கினை போல் பண்புடையவ ஒரு மனிதர் (முரட்டுக்காளை, சிங்கப் பெண்ணே) அல்லது தெய்வம் அனைத்து நாடுகளிலும் புழக்கத்தில் உள்ளது.
இந்து சமயத்தில் விநாயகர் வழிபாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தோன்றியது என்று ஒரு நம்பிக்கை நிலவினாலும் வேதகாலக் கடவுளரில் விநாயகர் இடம்பெறாவிட்டாலும் வேதனத்தில் யானை முகத்தானைப் பற்றி ஓரிரு குறிப்புகள் உண்டு என்கின்றனர்.
அறிவின் குறியீடு - யானை
ஆசீவக சமயம் தமிழ் மண்ணில் தோன்றிய ஆதி மதம் ஆகும். இச் சமயம் கணக்கு, வானவியல், அறிவியல் அடிப்படையில் தோன்றியது. இதில் கர்ம வினை பற்றிய நம்பிக்கை இல்லை. நடப்பது யாவும் தற்செயலாக நடப்பவை தானே தவிர கர்ம வினை காரணமாக நடப்பவை அல்ல என்ற கருத்துடன் இச்சமயம் விரிவாகப் பரவி வந்தது.
அப்போது ஞானத்தின் குறியீடாக ஆசிவகர் யானையை வைத்திருந்தனர். ஆசிவகசமயம் வடக்கு நோக்கி விரிவாக பரந்த போது அங்குப் புத்த சமயத்தினைப் பின்பற்றி வந்த அசோக மாமன்னர் ஆசிவகத்தின் வேகமான பரவலைத் தடுப்பதற்காக ஆசிவகரின் தலைக்கு ஆயிரம் பொன் என்று அறிவித்தார்.
உடனே 18 ஆயிரம் பேர் தலைகள் தரையில் உருண்டன. ஆசிவகரின் தலையை வெட்டி எறிந்தவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்பட்டது.
இத்துடன் ஆசிவகம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. நாட்டை விட்டு ஓடிப் போன சிலர் சித்தர்களாக காடுகளில் மறைந்து வாழ்ந்தனர்.
முதல் யானை கோயில்
பௌத்த சமயம் வீறு கொண்டு பரவி வந்தது தன்னுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இனி போர் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்த இடத்தில் அசோகர் புத்தருக்காக ஒரு கோவில் கட்ட விரும்பினார். புத்தரின் உருவம் பற்றி அவருக்கு ஒரு தெளிவில்லை.
அதனால் அவர் புத்தரின் தாய் மாயாதேவியின் கனவில் வயிற்றிலிருந்து வெளிவந்த வெள்ளை யானை வடிவில் கௌதம புத்தருக்கு ஒரு சிலை ஒரிசாவில் அமைத்தார்.
இதன்பிறகு வந்த யானை முகமும் மனித உருவம் கொண்ட சிலையைப் பல இடங்களில் வடித்தனர் பவுத்தர்கள் யானை முகக் கடவுளை மகாபைனி என்றனர்.
குகைக் கோவில்களில் பிள்ளையார்
தென்னகத்தில் பல்லவ மன்னர்கள் முதன்முதலில் இறை உருவங்களை குகைகளில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கினர். பிள்ளையார், நரசிம்மர், மகிஷாசுரனைக் கொல்லும் துர்க்கை போன்ற உருவங்கள் குகைகளில் செதுக்கப்பட்டன.
முற்காலப் பாண்டியர் காலத்தில் மதுரைப் பகுதியில் ஏராளமான குகைகளில் பிள்ளையார் உருவம் செதுக்கப்பட்டது. இவ்வகை பிள்ளையார்கள் பாசம் அங்குசம் போன்ற கருவிகளை கையில் ஏந்தி இருப்பதில்லை.
மனித உருவில் யானைத் தலையுடன் காணப்படுவதால் இரண்டு கைகள் மட்டுமே உண்டு. பிள்ளையார்பட்டி, குன்னத்தூர், அரிட்டாபட்டி போன்ற இடங்களில் காணப்படும் பிள்ளையார்களை குகை வடிவங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இவை ஏழாம் நுற்றாண்டைச் சேர்ந்த ஆதிகாலத்துப் பிள்ளையார்கள் ஆகும்.
கன்னிமூலை கணபதி
பல்லவர்களுக்கு அடுத்துத் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சோழர்கள் கற்களைக் கொண்டு கோயில் கட்டுமானங்களை எழுப்பினர் கி பி பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் சிவன் கோயிலில் பிரகாரத் தெய்வமாகக் பிள்ளையாரை வைத்தனர். ஜேஷ்டா தேவி இருந்த கன்னி மூலையில் பிள்ளையாருக்கு வழங்கப்பட்டது.
அன்று முதல் அவர் கன்னி மூலை கணபதி ஆனார். ஜேஷ்டா தேவி வழிபாடு மறைந்தது.
உமாசுதன் விநாயகன்
கடவுள் எதிர்ப்புச் சமயங்களாக தோன்றி பின்னர் போதி சத்துவர்களையும் தீர்த்தங்கரர்களையும் தெய்வமாக வணங்கும் போக்கினை அடைந்த சமண பௌத்த மதங்கள் துறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த தமிழகத்தில் செல்வாக்கிழந்தன.
சைவ சமயம் பேரெழுச்சி கண்ட போது மக்களின் மனம் கவர்ந்த பிள்ளையாரை சைவ சமயத்திற்கு மாறிய மக்கள் தொடர்ந்து கும்பிட்டனர்.
அவரைப் பார்வதி தேவியின் மகனாக ஏற்றுக் கொண்டனர். இக்காலகட்டத்தில் விநாயகர் புராணமும் இயற்றப்பட்டது.
இன்றைக்கு இருக்கும்ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் விஜயநகரப் பேரரசு ஆட்சி தோன்றிய பிறகு அவர்களின் பிரதிநிதிகளாக நாகம நாயக்கன் விஸ்வநாத நாயக்கன் போன்றோர் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தினர்.
அப்போது இங்கு சம்ஸ்கிருத அறிஞர்கள் அரசனின் ஆதரவைப் பெற்றனர். அவர்கள் வடமொழியில் இருந்த பல புராணங்களைத் தமிழில் மொழிபெயர்த்தனர். ஹாலாஸ்ய புராணத்தின் மொழிபெயர்ப்பான திருவிளையாடல் புராணமும் கந்தபுராணமும் தமிழுக்கு அறிமுகம் ஆயின.
இபுராணக் கதைகளைக் கொண்டு தமிழ்த் திரை உலகில் ஏ.பி. நாகராஜன் இயக்கிய திருவிளையாடலும் கந்தன் கருணையும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இக்கதைகள் தெய்வக் கதைகளாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.
அய்யனார் கோயில்
யானை ஆசிவகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற யானை வடிவம் அய்யனார் (பின்னர் சாஸ்தா) வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் கோயில்களின் வாசலில் வாகனமாக நிறுத்தப்பட்டது கௌதம புத்தர் பிறக்கும் முன்பு அவர் தாயார் தன் வயிற்றில் ஒரு வெள்ளை யானை புகுந்ததாகக் கனவு கண்டார். எனவே வெள்ளை யானை என்பது கௌதம புத்தருக்குப் பதிலியாகப் (substitute) போற்றப்பட்டது.
யானை தலை
உமாதேவி குளித்துக் கொண்டிருக்கும் போது யாரையும் உள்ளே வரவிட வேண்டாம் என்று சொல்லி தன் அழுக்கைத் திரட்டி பிள்ளையார் பிடித்து வைத்து அவனை ' மகனே, என் வாயிலில் காவலாக இரு' என்றார். சிவபெருமான் வந்து உமாதேவியைப் பார்க்க வேண்டும் என்று கூறிய போது பிள்ளையார் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை. உடனே அவர் அவனது தலையை வெட்டிவிட்டார்.
குளித்துவிட்டு வெளியே வந்த உமாதேவியிடம் 'இப்பிள்ளை யார்?' என்று சிவபெருமான் கேட்டார். உமாதேவி 'என் மகன்' என்றாள். உண்மை தெரிந்ததும் 'வடக்கே தலை வைத்துப் படுத்திருக்கும் மனிதரோ விலங்கோ பறவையோ இருந்தால் அதன் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு வா' என்று தன் சிவகனங்களுக்கு ஆணை இட்டார். வடக்கே தலை வைத்து ஒரு யானை படுத்திருந்ததால் அதன் தலையை வெட்டி வந்தனர்.
சிவபெருமான் கீழே கிடந்த குழந்தையின் தலையில் ஓ ஒட்ட வைத்தார். அதன் பிறகு அவர் விநாயகன் என்று அழைக்கப்ட்டு சிவனின் மகனாகப் போற்றப்பட்டார். இக்கதை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஒரு புராணக் கதை ஆகும்
விநாயகா விக்னேஸ்வரா
உலகில் முதலில் தோன்ற சமயமான ஆசிவகத்தின் முதல் கடவுள் யானை அல்லது விநாயகர் என்பதால் அவரை எந்த ஒரு நற்செயல் தொடங்குவதற்கு முன்பும் மூலக்கடவுளாகக் கொண்டு வணங்கி பின்பு தொடங்குவது தென்னகத்தின் வழிபாட்டு மரபாகிவிட்டது.
முதல் தெய்வம் என்பதால் அவரே சிறந்த தெய்வம் என்ற பொருளில் விநாயகர் என்றும் தெய்வம்/ சிவ கணங்களின் தலைவன் என்பதால் கணபதி என்றும் தடைகளையும் சிக்கல்களையும் தகர்ப்பதால் விக்னேஸ்வரன் என்றும் பல பெயர்களால் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
எனினும் பிள்ளையார் என்ற பெயரே சிறுவர்களும் பெரியவர்களும் விரும்பி அழைக்கும் பெயராக விளங்குகின்றது.
வெளிநாடுகளில் விநாயகர்
பௌத்த சமயம் இந்தியாவை விட்டு சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம், போன்ற நாடுகளுக்குப் பரவியபோது அங்கே இந்திரன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பிரமன் போன்ற கடவுளரையும் சேர்த்தே கொண்டு போயினர்.
அதிர்ஷ்ட சின்னமாகப் போற்றப்பட்ட இரட்டை யானை பின்னர் கஜலட்சுமி ஆக உருமாறி எல்லா அம்மன், தாயார் சந்நிதிகளிலும் வாயிலின் அதிர்ஷ்ட தேவதையாக இடம் பெற்றது. நம் ஊர் கோவில்களிலும் இரட்டை விநாயகர் இருக்கும் கோவில்கள் சிறப்புடைய கோவில்களாக போற்றப்படுகின்றன.
ஜப்பானில் காங்கி தென்
ஜப்பானில் விநாயகரை காங்கி தென் என்ற பெயரில் வணங்குகின்றனர். அங்கு திசைகளின் காவலராக இவரை கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் வணங்கி வருகின்றனர். ஜப்பானில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் வழிபடப்படுகின்றார்.
பெரிய கடவுள் என்ற பெயரில் தாயி ஷோ தென் என்றும் அழைக்கப்படுகின்றார். தாயி என்றால் பெரிய என்று பொருள். தமிழ் மரபில் முருகன் வள்ளியை இணைத்து வைத்த யானையான விநாயகரை ஜப்பானிலும் இளம் காதலரை இணைத்து வைக்கும் தெய்வமாக வழிபடுகின்றனர்.
திபெத்தில் கணேஷினி
திபெத் நாட்டில் விநாயகரை பெண் வடிவில் கணேசினி என்ற பெயரில் நெற்றியில் பிறை சந்திரன் திலகமிட்டு வழிபடுகின்றனர். கம்போடியா நாட்டில் ஒற்றைத் தந்தத்துடன் மூன்று கண்கள் கொண்டவராக கையில் கமண்டலமும் திருவோடும் ஏந்திய பிராஹ்கணேஷ் என்ற பெயரில் யானை முகக் கடவுளை வழிபடுகின்றனர்.
ஜாவாவில் மொட்டைத் தலையுடன்
ஜாவா தீவுகளில் இவர் போதிசத்துவர் வடிவில் மொட்டைத் தலையும் உடையாத தந்தமும் கொண்டு ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தியாக உருவாகி இருப்பதாக நம்புகின்றனர். இவர் கையில் மண்டையோடும் எலும்பு மாலையும் கோடரியும் கரண்டியும் கொண்டுள்ளார்.
எகிப்தில் சொர்க்கவாசலின்
சாவியுடன் எகிப்து நாட்டில் போர் மற்றும் அமைதியின் கடவுளாக சொர்க்கவாசலைத் திறக்கும் சாவியைக் கையில் வைத்திருப்பவராக யானை முகக் கடவுளை வழிபடுகின்றனர். நேபாளத்தில் விநாயகருக்கு இரண்டு மூஞ்சூறு வாகனங்கள் உண்டு. இங்கே புத்தர் தன் சீடரான ஆனந்தனுக்கு கணபதி ஹிருதயம் என்ற மந்திரத்தை அருளினார் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் நாகம் குடை பிடிக்க ஆறு கைகளைக் கொண்ட விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.
காணாபத்தியம்
வடக்கே குப்த மன்னர்களின் காலத்தில் வேதங்களின் செல்வாக்கு இந்தியாவில் குறைய தொடங்கியது. நிகமம் மறைந்து ஆகமம் செல்வாக்குப் பெற்றது. கி.பி. எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டில் கணபதி வழிபாடு காணாபத்தியம் என்ற பெயரில் பெரும் செல்வாக்கைப் பெறறது.
வெள்ளை யானை
புத்த சமயத்தில் கௌதம புத்தருக்குத் திருமுழுக்கு செய்த இந்திரனுக்கும் சாஸ்தா எனப்படும் புத்தருக்கும் வாகனமாக யானை வாகனம் இடம்பெற்றது. இதுவே பின்னர் அய்யனார் கோவில்களாக மாறின. இந்த யானை ஐராவதம் எனப்படும் வெள்ளை யானை ஆகும்.இதுவே வைதீக சமயத்தில் யானை முகம் கொண்ட விநாயகர் கடவுளாக மாற்றம் பெற்றது.
சமண சமயத்தில் விநாயகருக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லாவிட்டாலும் கணங்களின் அதிபதியான கணபதியாக இவர் குபேரன் செய்கின்ற சில செயல்களைச் செய்பவராகப் போற்றப்படுகிறார். தும்பிக்கை ஆழ்வார் வைணவ சமயத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்ற பெயரில் விநாயக வணக்கம் நடைபெறுகிறது.
பனிரெண்டாம் நூற்றாண்டில் ஹேமச்சந்திரன் எழுதிய அபிதான சிந்தாமணியில் முதன் முதலாக 5 முகம் கொண்டஹேரம்ப கணபதியை, விக்னேஷா, விநாயகா என்று பெயர்களில் வழிபடுவதைக் காண்கிறோம்.
தேவேந்திரப் பிள்ளையயார்
இந்திரன், வெள்ளை யானை, யானை முக கடவுள் ஆகியன் ஒன்றோடு ஒன்று வரலாற்றுத் தொடர்பும் வழிபாட்டுத் தொடர்பும் உடையன. தேவேந்திரனும் பிள்ளையாரும் இணைந்த ஒரே வடிவமாக தேவேந்திரப் பிள்ளையாரை தமிழகத்தில் வழிபடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அறுவடை முடிந்ததும் வயலில் குழுமி தேவேந்திர குல வேளாளப் பெண்கள் சாணியில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். இதற்குப் பெயர் தேவேந்திர பிள்ளையார்.
வளர்பிறை காலத்தில் நடக்கும் இவ்வழிபாட்டில் வயல் இருந்த இடத்தில் பச்சைப் பந்தலிட்டு அதற்குள் ஒரு சிறுமியை நிலாப் பெண் என்று சொல்லி அமர வைப்பர். தேவேந்திரன் பற்றிய பாடல்களை பாடி கும்மி கொட்டுவர்.
பின்பு இரவில் மேலதாளங்களுடன் நிலாப் பெண்ணை தேவேந்திர பிள்ளையாருக்குத் திருமணம் முடித்து வைப்பார்கள். இச்சடங்கு இந்திர விழா கொண்டாடுவதற்கு முந்தைய தொடக்க காலச் சடங்காக இருக்கலாம்.
இந்திர விழா பங்குனி பௌர்ணமி முதல் சித்ரா பௌர்ணமி வரை நடைபெற்றதாக சிலப்பதிகாரம் மூலம் அறிகின்றோம். தேவேந்திரப் பிள்ளையார் திருமணம் வேளாண் மரபின்ரின் வளமைச் சடங்கு ஆகும். பிள்ளையாரின் வரலாறும் வழிபாடும் தொகுப்பின் எஞ்சும். விரிப்பின் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |