முருக வழிபாடு என்பது சங்க காலந்தொட்டு இன்று வரை தமிழகத்தில் பெருவாரியான மக்களால் சிறப்பாக நடைபெறுகிறது. குமரன் / முருகன் / கந்தன் வழிபாடு உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. அண்மையில் தமிழக அரசு பழனியில் நடத்திய முருகன் வழிபாடு பற்றிய கருத்தரங்கம், கண்காட்சி, பொருட்காட்சி ஆகியன மக்களின் பேராதரவைப் பெற்றது.
உலகெங்கிலும் இருந்து வந்த அறிஞர்கள் முருக வழிபாடு பற்றிச் சிறப்புரை ஆற்றினர். சங்க இலக்கியத்தில் நற்றிணையில் முருகு புனைந்து இயன்ற வள்ளி என்று ஒரு தொடர் காணப்படுகின்றது. இது முருகனை மணந்து வாழ்ந்த வள்ளி என்பதைக் குறிக்கின்றது.
முருகனின் மனைவி வள்ளி. கந்தனின் மனைவி தேவயானை. முருகனும் கந்தனும் ஒரே கடவுளாக புனைந்துரைக்கப்பட்டு தெய்வ கதைகள் தோன்றியதும் இருவரும் ஒருவராக கருதப்பட்டனர்.
குறிஞ்சி நிலத்தின் சேயோன்
பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் சேயோன் மேய மைவரை உலகமும் என்கிறது.சேயோன் என்றால் குழந்தைசாமி (குமரன்) மை வரை என்றால் மலை. சேயோன் மலைப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் கடவுள் அல்லது தலைவன் ஆவான். இன்றைக்கும் குன்றுதோறாடும் குமரன் என்று குமர கடவுளை வணங்குகின்றனர்.
அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தவிர எஞ்சிய ஐந்து படை வீடுகளும் மலையோடு தொடர்புடையன. படைவீடு என்றால் படை வீரர்கள் தங்கி இருக்கும் இடம். படைவீடு என்ற பெயர் முருகன் தேவ சேனாதிபதி என்ற கதைகள் உருவான பின்பு இடைக்காலத்தில் தோண்றிற்று.
முருக வழிபாடு என்பது தாயத் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்துத் தோன்றியது. தாய் பெற்றெடுத்த மகன் இளைய குமரன், அழகன், வீரன், என்ற பொருளில் அறிமுகமான முதல் ஆண் தெய்வ வழிபாடு ஆகும்.
கொற்றவை சிறுவ, பழையோள் குழவி என்று நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை முருகனை குறிப்பிடும். முருகியல் என்றால் அழகியல்.
தமிழின் முதல் காதல் திருமணம்
முருகன் வள்ளியை மணந்து வாழ்ந்த கதையை வள்ளி திருமண நாடகங்கள் இன்று வரை கிராமங்களில் நாடகமாக மக்கள் கண்டு களிக்கின்றனர். குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளாக (core concept of hillside literature) கூடலும் கூடல் நிமித்தமும் கூறப்பட்டுள்ளது.
கூடல் என்பது ஆண் பெண் சேர்க்கையைக் குறிக்கின்றது. இன்றைக்கும் தேனிலவு செல்லும் இளம் தம்பதிகள் கொடைக்கானல், ஊட்டி, சிம்லா, குலு மணாலி, ஸ்விட்சர்லாந்து என்று மலைப்பகுதியைக் தான் தெரிவு செய்கின்றனர்.
மலையும் மலை சார்ந்த இடமும் ஆணும் பெண்ணும் மனமகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஏற்ற சுதந்திர பூமி ஆகும். ஜி எல் ஹார்ட் போன்ற பேரறிஞர்கள் முருகன் வள்ளி திருமணம் என்பது பழந்தமிழர் வாழ்வில் திருமணம் முறை பற்றிய சான்றாதாரம் என்பர். இத்திருமணம் களிறு தரு புணர்ச்சி வகையைச் சார்ந்தது.
களிறு தரு புணர்ச்சி
களிறினால் (யானை) ஏற்பட்ட காதலாக வள்ளி முருகன் திருமணம் அமைகின்றது. வள்ளி யானையைக் கண்டு பயந்த போது வீரனான முருகன் அங்கு வந்து அவளைக் காப்பாற்றுகின்றான். காதல் மலர்கின்றது.
யானையாக வந்தது விநாயகர் என்பதும் அவர் தம்பியின் வேண்டுகோளை ஏற்று வந்தார் என்பது பிற்காலத்திய கதை வளர்ச்சி ஆகும்.
பெண்கள் மலையில் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களின் துன்பத்தைத் தீர்த்த ஆணின் மீது காதல் வருவது இயற்கை என்று தொல்காப்பியம் முன்பே கூறிவிட்டது.
வேலன் வழிபாடு
வேலன் வழிபாடு என்பது இன்றுவரை வேல் கம்பு வடிவில், வேல் உருவில் தமிழகக் கிராமங்களில் உள்ளது. வேல் தமிழர்களின் மிகப் பழைய ஆயுதமாகும். வீரர்கள் பொதுநலத்துக்காக உயிர் துறக்கும் போது அவர்களுக்கு சிலை செய்து வழிபடும் பழக்கம் கிடையாது.
அவர்கள் பயன்படுத்திய வேலை நட்டு வைத்து அதற்குப் பூசை செய்வது மரபு. வேல் வழிபாடு வீர வழிபாடாகவே தமிழகத்தில் அறிமுகம் ஆயிற்று. வீரனாகிய முருகன் வழிபாட்டில் வேல் வழிபாடும் இணைந்துவிட்டது.
வேலன் வெறியாட்டு
வீரன் மீது கொள்ளும் காதல் காரணமாக இளம்பெண்கள் நோயுற்று உண்ணாமல் உறங்காமல் தவிக்கும் போது அவர்களுக்கு தாய்மார் பேயை விரட்டும் வேலன் வெறியாட்டுச் சடங்கை நிகழ்த்துவர்.
பெண்ணைப் பிடித்திருக்கும் முருகு என்ற ஆண் பேயை விரட்டும் பரிகாரச் சடங்காக. இச் சடங்கில் இளம் ஆட்டுக்குட்டியை அறுத்து சோறோடு கலந்து அவளைப் பிடித்து இருக்கும் ஆண் பேய்க்கு தூவி விடுவார்கள். பின்பு அது அவளை விட்டு விடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
ஆனால் நோயுற்ற இளம் பெண்ணின் தோழிக்கு மட்டுமே தெரியும் அவள் தன் காதலனைக் காணாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறாள் என்ற ரகசியம்.
வேலன் என்பவன் வீர தெய்வத்தின் சாமியாடியாக மருளாடியாக கோடாங்கி போல பேய் விரட்டுபவனாக இருந்திருக்கிறான் என்ற உண்மை சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிகின்றோம்.
ஆக வேலன் என்பவன் வீரத்தோடும் வீரத்தின் அடையாளமான ஆண் தெய்வத்தோடும் நேரடி தொடர்புடையவன் ஆவான். அவனே மனிதருக்கும் தெய்வத்திற்கும் இடையில் பூசாரி ஆகவும் செயல்படுகின்றான்.
முருகன் என்ற கோட்பாடு
படை வீரன் தங்கியிருக்கும் இடம் படை வீடு. படைகளின் தலைவன் முருகன் என்று முருகனை வழிபட்டு வந்த நிலையில் வடநாட்டிலிருந்து பௌத்த சமண சமயங்கள் தென்னாட்டிற்கு வந்தன. அவர்களுக்கு ஸ்கந்தன் தேவேந்திரனின் தளபதியாக இருந்தான்.
அவனை இங்கு முருகனோடு இணைத்து விட்டனர். பௌத்த சமயம் 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இருந்து கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியபோது அங்கு தேவ சேனாதிபதியையும் எடுத்துச் சென்றனர். அங்கே பௌத்தர்கள் வணங்கும் முருகனுக்கு தேவயானை என்ற மனைவி கிடையாது.
வட இந்தியாவில் ஸ்கந்தன் என்பவன் தேவர்களின் காவலன். எனவே தேவேந்திரன் தேவ அசுரப்போரில் தன்னுடைய தளபதியாக ஸ்கந்தனை அனுப்புகின்றான்.
அங்கு எழுதப்பட்ட ஸ்கந்த புராணத்தில் ஸ்கந்தன் வெற்றி பெற்றதும் தன் மகள் தேவயானையை அவனுக்குப் பரிசாக அளிக்கின்றான். இக்கந்தபுராணம் 16 ஆம் நூற்றாண்டில் இங்குத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் முருகனுக்கும் தேவாசுரப் போருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஆனால் கந்த புராணம் இயற்றப்பட்டதும் இருவரும் ஒன்றாக்கப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் முருகன் தேவயானை திருமணம் நடந்ததாக ஐதீகம். அவர்களின் திருமணக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக செதுக்கினர்.
பங்குனி உத்திரத் திருநாளில் அவர்கள் திருமணம் நடந்ததும் அருகில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மடத்தில் முருகனும் தேவேந்திரன் மகள் தெய்வயானையும் மறு வீட்டுக்கு செல்வர். அங்கு தேவயானைக்குத் தாய் வீட்டு மரியாதைகள் செய்யப்படும்.
இவ்வாறு முருகனின் திருமணம் இங்குள்ள வேளாண் குடியினரின் வாழ்வோடு கலந்துவிட்டது. முருகன் கந்தன் போன்ற தெய்வங்களின் ஒன்றிணைப்பு எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது.
பிற நாடுகளில் முருகன்
ஜப்பானில் முருகனை இதா தென் என்றும். சீனாவில் வியே து ஓ என்றும் அழைக்கின்றனர் இந்நாடுகளில் காணப்படும் முருகன் இந்திரன் கொடுத்த வஜ்ராயுதத்தை படுக்கை வசமாக தனது இரு கைகளில் ஏந்தி இருப்பான்.
ஜப்பானில் புத்தர் கோயில்களில் புத்தருக்கு நேர் எதிரே கந்தனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. சுமத்ரா, ஜாவா, இந்தோனேஷியா, தீவுகளில் புத்தர் கோயில்களில் நகரையும் கந்தனையும் சேர்த்து வணங்குகின்றனர்.
அரேபியாவிலும் கிரேக்கத்திலும் கந்தனை சிக்கந்தர் (ஸ் கந்தா) என்றும் அலெக்சாண்டர் (அல் + எ+ ஸ்கந்தர்) என்ற என்ற பெயரிலும் வழங்கினர். அலெக்ஸ்சாண்டர் கதையில் சுகந்தம் என்பது நறு மனம் என்ற பொருளில் வருகின்றது.
அல் காதர் என்ற பெயரில் பச்சை போர்வை போர்த்தி இருக்கும் சூபிகள் பசுமைக்கும் வளமைக்கும் தெய்வமாக முற்காலத்தில் வழங்கிய வள்ளியை வழிபடும் பிரிவினர் ஆவர். இவர்கள் பாறையில் நின்றாலும் அது பசுமையாகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது
காவல் தெய்வம்
சீனாவிலும் புத்த சமயம் பரவி உள்ள மற்ற நாடுகளிலும் கந்தன் புத்த மடங்களின் காவல் தெய்வம் ஆவான். இவனோடு சேர்ந்து அஷ்ட நாகங்களும் புத்தர் கோயில் பொக்கிஷத்தைக் காவல் காக்கின்றன. மாரன் என்ற ஆசாபாசத்திடம் இருந்து தான் மடங்களையும் கோயில்களையும் பாதுகாக்கும்படி புத்தர் அவனுக்கு கட்டளையிட்டார் என்ற கதையும் அவர்களிடம் பரவி உள்ளது.
முருகனும் நாகரும்
தென்னிந்தியாவில் முருக வழிபாடு இந்திரனோடு இணைக்கப்படாமல் மக்களின் தென்னிந்தியரின் குல (இனம்) தெய்வமான நாகரோடு இணைக்கப்பட்டது. முருகனோடு இருக்கும் மயிலும் இளமை மற்றும் ஆண்மையின் சின்னங்கள்.
மயிலை உக்ர துரகம் என்று அழைப்பர். அருணகிரி நாதர் முருகனை நாகபந்த மயூரா நமோ நம என்று சொல்லி வணங்குவார். மயிலின் கால் அருகில் இன்றும் பெரிய நாகம் ஒன்று இருப்பதைக் காணலாம்.
இதற்குக் கருடனுக்கு அஞ்சிய அஷ்ட நாகங்கள் முருகனிடம் அடைக்கலம் தேடி வந்ததாக புராணக் கதை தோன்றியது.
கர்நாடகாவில்
கர்நாடகாவில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் முருகன் பாம்பு ரூபத்தில் சந்நிதி கொண்டுள்ளார். குக்கி சுப்ரமணியர் கோயில் இருக்கும் குமாரமலையை ஆறு தலை நாகம் பாதுகாக்கிறது. இந்த நாகம் அங்கு சேஷ மலையாக உள்ளது.
கேரளத்தில்
ஐயப்பனுக்கு அடுத்ததாக கேரளாவில் மக்கள் வணங்கும் ஆண் தெய்வம் பழனி மலை முருகன் ஆகும். கேரளத்துக்கு அருள் பாலிக்கும் நோக்கத்துடன் பழனி மலை முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
சுப்பிரமணி
முருகனை பிராமணர்கள் சுப்பிரமணி என்ற பெயரில் வழிபடுகின்றனர். சுப்ரமணி என்ற பெயருக்கு விளக்கம் தரும் பரமாச்சாரியார் 'தெய்வத்தின் குரலி'ல் 'சு பிராமணர் என்றால் நல்ல பிராமணன் சேர்ந்த பிராமணன் பிரம்மம் என்றால் சத்தியமான பரமாத்மா சொரூபம் என்று மாத்திரமே அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் பிரம்ம என்ற பதத்துக்கு இன்னொரு முக்கியமான அர்த்தம் வேதம் என்பது வேதத்தை அனுசரிப்பது அனுஷ்டிப்பது
அதாவது வைதீகம்தான் பிராமணியம் அதை முக்கியமாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் வேதங்களின் பரம தாத்பரியமான பிரம்மமாகிற பரமார்த்த சொரூபமாகவே இருப்பதால் சுப்ரமணியராக இருக்கப்பட்ட மூர்த்தி' என்கிறார். சுப்பிரமணி என்னும் சொல் சுத்தமான மணி அல்லது வெள்ளை நிற மணி என்பதைக் குறிக்கிறது என்று சித்த பாரம்பரியத்தினர் தெரிவிப்பர். விஷுக்தி எனப்படும்.
இதயப் பகுதியின் இடது ஓரத்தில் ஆறு தலை உடைய ஒரு நாடி உண்டு. இதுவே சுப்பிரமணி எனப்படும் என்றும் புருவ மத்தியில் ஆறு பட்டையாகத் தோன்றும்.
ஜோதி மணி தான் சுப்பிரமணி எனரம் கூறுவர். வள்ளலார் 'ஒருமையுடன் எனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' எனத் தொடங்கும் பாடலில் தன் முகத்துய்ய மணி உள்முகச் சைவ மணி/ சண்முகத் தெய்வமணியே என்றார்.
சித்தர்கள் முருகனை குண்டலினி என்ற கருத்தாக்கத்திற்குள் கொண்டு வந்து அப்பழுக்கற்ற தூய மணியாகக் கருதினர். இதை சமஸ்கிருத வடிவில் சுப்பிரமணி என்ற பெயரில் பரமாச்சார்யார் விளக்கினார்.
சிவசக்தி ஐக்கியம்
சரவணபவ என்பது முருகனின் வழிபாட்டுக்குரிய மந்திரம். சஷ்டாச்சாரம் எனப்படும் இந்த ஆறு எழுத்து மந்திரமான ச-ர-வ-ண-ப-வ சரவணபவ என்பதாகும். முருகனின் சக்கரம் அறுகோணச் சக்கரம் ஆகும்.
இந்த அறுகோண சக்கரத்தின் மேல் நோக்கிய முக்கோணம் சிவனையும் கீழ்நோக்கியமுக்கோணம் சக்தியையும் குறிப்பதால் முருகனின் இச்சக்கரம் சிவசக்தி ஐக்கியத்தை எடுத்துக்காட்டுகின்றது என்பது மெய்ஞானம்.
(அடுத்த பகுதியில் இந்து சமயத்தில் முருகனுக்கு உரியவை, வழிபாட்டு முறைகள், பழனி மலை சிலையும் செப்பேடும், திருமணத் தலமான திருப்பரங்குன்றம் …பற்றி காண்போம்)
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |