கோலாகலமாக நடந்த திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது.
இங்குதான் முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி வெளிப்பிரகாரமான வள்ளி தேவஸ்தான திருமண மண்டபம், சஷ்டி மண்டபங்களில் குண்டம் மற்றும் வேதிகை சார்ந்த 75 யாகசாலை அமைக்கப்பட்டது.
கடந்த 10ஆம் திகதி முதல் தொடர்ந்து 4 நாட்களில் கோவில் சிவாச்சாரியார்கள் மூலமாக 7 கால யாகவேள்வி நடந்தது.
மேலும் 7 பெண்கள் உள்பட 85 ஒதுவார் மூர்த்திகளால் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை, தமிழ் வேதபாராயணம் நடந்தது.
இதனையடுத்து இன்று மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க யாகசாலையில் இருந்து தங்கம், வெள்ளி கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
முருகப்பெருமானின் தாய், தந்தையரான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அருள்பார்வையில் பரிவார மூர்த்திகள், கோவிலின் ராஜகோபுரம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |