சகல நோய்களையும் குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் கோயில் பிரசாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் மீது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடியுள்ளனர். இத்தகைய சிறப்பு மிகுந்த இந்த சிவத்தலமானது ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக கூறப்படுகிறது.
இந்த சிவத்தலத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது. பில்லி, சூனியம் வைக்கப்படிருந்தால் இந்த தலத்தில் கால் வைத்ததுமே நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலின் முழு வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
மயிலாடுதுறைக்கும் சீர்காழிக்கும் இடையில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் சீர்காழியை அடுத்துள்ளது. இந்த கோயில் இருக்கும் ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாடகை வண்டி வசதிகளும் உள்ளன.
தல சிறப்பு 1:
வைத்தீஸ்வரன் தலம் அமைந்துள்ள இடத்திற்கு புள்ளிருக்குவேளூர் என்ற பெயரும் உள்ளது. "புள்' என்றால் பறவை. ஜடாயு என்னும் பறவை ராஜனும், ரிக்வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், சூர் என்ற சூரியதேவனும் இத்தல இறைவனை வழிபட்டதால் இவ்வூருக்கு புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் உருவானதாக வரலாறு கூறுகிறது.
தல சிறப்பு 2:
இத்தலத்தில் அமைந்துள்ள கோயிலுக்கும் ஒரு பெரும் சிறப்புள்ளது. குளக்கரையில் சதாநந்த முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, குளத்தில் வாழ்ந்து வந்த தவளையை பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.
அதைப்பார்த்த சதாநந்த முனிவர், பாம்பும் தவளையும் இத்தலக் குளத்தில் வாழக்கூடாதென்று சாபம் விடுத்தார். அன்றைய நாள் முதல் இந்தக் குளத்தில் பாம்புகள், தவளைகள் வாழ்வதே இல்லையென்று ஊர்மக்கள் பெரும் பரவசத்துடன் கூறுகின்றனர்.
தல சிறப்பு 3:
சிவபெருமானை விட்டு உமாதேவியார் நீங்கியிருந்த காலத்தில், சிவபெருமான் யோகநிலையில் இருந்தார். அப்போது அவரது நெற்றிகண்ணிலிருந்து விழுந்த வியர்வைத் துளியில் இருந்து ஒரு குழந்தை உருவானது. அந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து மங்களன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள்.
அந்த குழந்தை வளர்ந்த பின்னர் சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆரம்பித்தார். தவயோகநிலையில் இருக்கும்போது அவர் மீது தீப்பிழம்பு கொழுந்து விட்டெரிந்தது. இதனால் வெண்குஷ்ட நோய் உருவானது. அப்போது ஒலித்த அசரீரி குரல், "இளைஞனே, வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள குளத்தில் ஒரு மண்டலம் நீராடி, இறைவனை வழிபட்டால் உனது நோய் குணமாகும்' எனக் கூறியது.
அதன்படி மங்களன் இங்குவந்து சித்திரக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். சிவனது அம்சத்தில் உருவான அங்காரகனின் நோயைத் தீர்பதற்காக பார்வதிதேவி தைலப் பாத்திரத்தில் சஞ்சீவி வேர்களையும் வில்வ மரத்தடி மண்ணையும் கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்க, அதை அவர் அரைத்து மருந்தாக்கி வைத்தியர் உருவில் மங்களன் உடலில் பூசினார்.
அந்த நொடியே மங்களனுக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோய் குணமானது. மங்களனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான், அவரை நவகிரகங்களில் மூன்றாவது கிரகமாக அமைய வரமளித்தார். அவரே நவகிரகங்களுள் செவ்வாய் கிரகமாக அருள்பாலிக்கிறார்.
தல சிறப்பு 4:
வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமரன் என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார். முருகன் தனது படைகளுடன் சூரபத்மனை எதிர்த்து போர் செய்த போது படை வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு இங்குள்ள வைத்தியநாத சுவாமியும், தையல் நாயகியுமே வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது.
தல சிறப்பு 5:
ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்ற ராவணனுடன் போரிட்டு மாண்டு போன ஜடாயுவிற்கு ராமனும், லட்சுமணனும் இங்கு ஈமக்கிரியைகள் செய்ததாகவும் மக்களால் கூறப்படுகிறது. இங்கு ராமர், லட்சுமணருக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த தலமானது நாடி ஜோதிடத்திற்கு மிகவும் புகழ்பெற்ற தலமாகும்.
தல அமைப்பு:
பொதுவாகக் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன், இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஐந்து கோபுரங்களும், நவகிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். பொதுவாக கோயில்களில் நவகிரகங்கள் திசைமாறியிருக்கும்.
ஆனால் இங்கே நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. சோமாஸ்கந்தர், அங்காரகன்(செவ்வாய்), துர்க்கை, தட்சிணாமூர்த்தி, தன்வந்தரி, சூர்யன், ஜடாயு ஆகியோருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலில் தைலத்தை கையில் ஏந்திய படி நின்ற கோலத்தில், தெற்கு பார்த்து அம்பாள் தையல் நாயகி அருள்பாலிக்கிறார். தையல் நாயகியின் சன்னதி குளத்தையும், தல விருட்சத்தையும் பார்த்தபடி இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
பிரசாதம்:
பிரசாதமாக திருநீரும், திருச்சந்தன உருண்டை அல்லது திருச்சாந்து உருண்டை ஆகியன வழங்கப்படுகின்றன. இவைகள் ஹோம குண்டத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த பிரசாதம் நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. சந்தனம், குங்குமம் கலந்து வழங்கப்படும் ஒரு வகை பிரசாதமும் ஒரு வகை மருந்து எனக் கூறப்படுகிறது.
4,448 நோய்களைத் தீர்க்கும் சித்த மருத்துவத்தைக் கண்டுபிடித்த சித்தர்களின் தலைமைப் பீடமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. பக்தர்களின் பலவகை நோய்களைத் தீர்ப்பதற்கு புற்றுமண், அபிஷேகத் தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி, வேப்பிலை (இக்கோவிலின் தல விருட்சம் வேம்பு) ஆகியவற்றைக் கலந்து திருச்சாந்து உருண்டை தயாரித்து வழங்கப்படுகிறது.
இதை உண்பவர்கள் எத்தகைய நோய்களிலிருந்தும் குணமடைந்து வருகிறார்கள். வெண்குஷ்ட நோய்க்கு சிறந்த நிவாரணமாக இம்மருந்து உள்ளது என்பது இங்குவந்து வழிபடுபவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல் :
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிளகு, வெல்லத்துடன் உப்பு கலந்து சித்தாமிர்த குளத்தில் வைத்து நோய் தீர வேண்டி வழிபடுகிறார்கள். அதையே கடவுளுக்கும் படைக்கிறார்கள். நோய் தீர்ந்தவர்கள் உண்டயலில் வெள்ளி தட்டு, மோதிரங்கள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தலத்தின் திருக்குளத்தில் வெல்லத்தை கரைப்பதாலும் நோய்கள் குணமாகும் என மக்கள் நம்புகின்றனர். கோயிலில் அமைந்துள்ள கற்பக விநாயகர் பக்தர்களின் அனைத்துவிதமான கோரிக்கையையும் நிறைவேற்றும் சக்திகொண்டவராக விளங்குகிறார்.
அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் சன்னதியில் செவ்வாய் தோஷ நிவர்த்திப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள முருகப் பெருமானுக்கு அர்த்தசாம பூஜையின்போது புனுகு, சந்தனம், பச்சைக் கற்பூரம், எலுமிச்சை, பன்னீர் புஷ்பம், பால், பால்சாதம் ஆகியவற்றைக் கொண்டு விஷே பூஜைகள் செய்யப்படுவது சிறப்பு.
இத்தல அம்மனான தையல்நாயகியை வழிபடுவதால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்ட தோஷம் நீங்கும்.
வழிபாட்டு நேரம்:
இந்த கோயிலில் ஆறுகால பூஜை சிறப்புடன் நடைபெறுகிறது. காலை 6.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும்.
ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயிலில் குடமுழுக்கு செய்வது மரபாக உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |