சிவபெருமானை போல் தலையில் பிறைசூடிய பெருமாள் காட்சி கொடுக்கும் இடம் எங்கு தெரியுமா
பித்தா பிறை சூடி என்று சிவபெருமானை தான் பார்த்திருப்போம். ஆனால், பெருமாள் இங்கு தலையில் பிறை சூடி மக்களுக்கு காட்சி கொடுக்கிறார். அவர் எங்கு இருக்கிறார் என்று பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைச்சங்காடு என்ற பகுதியில் பெருமாள் தலையில் பிறை சூடி நாண்மதியப்பெருமாளாக காட்சி கொடுக்கிறார்.
இந்த கோயில் திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். மேலும் 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 25வது திவ்ய தேச தலமாக விளங்குகிறது. தலைச்சங்க நாண்மதியத்துள்ளான், தலைச்சங்க பெருமாள் என்றும், உற்சவர் வெண்சுடர்ப் பெருமாள் என்றும் தாயார் தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லி, சௌந்தரவல்லி என்னும் திருப்பெயர்களில் இங்கு வழிபாடு செய்யப்படுகிறார்கள்.
மேலும், இந்த கோயில் அமையப்பெற்று இருக்கும் ஊருக்கு ஒரு பெயர்க்காரணம் இருக்கிறது. அதாவது, ஒரு காலத்தில் இந்த கோயிலை சுற்றிலும் சங்கு பூக்கள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டன. பிறகு அந்த பூக்கள் அங்கு சுற்றி இருக்க கூடிய கோயில்களுக்கு அனுப்பப்பட்டது.
அதனால் அந்த ஊர் தலை சங்காடு என சேர்த்து தலைச்சங்காடு என்று பெயர் பெற்றது. ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது அதிலிருந்து மகாலட்சுமி தேவிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன் என்றும், அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.
பிறகு அவர் தேவ குருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றார். ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து ராஜ சுய யாகம் செய்யும் பொழுது தேவகுருவின் மனைவி தாரையும் வர, சந்திரனும் தாரையும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினர்.
அதிர்ச்சி அடைந்த குரு, திருமாலிடம் முறையிட சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாது என்றும் அவருக்கு குஷ்டநோய் வரும்படி சாபம் கொடுத்தார். திருமால் கூறியபடி குருவிடமவரது மனைவியை ஒப்படைத்தார் சந்திரன்.
அதோடு சேர்த்து வேறொரு தவறும் செய்து விடுகிறார். அதாவது தக்கனுடைய 27 மகள்களையும் சந்திரன் திருமணம் செய்து கொண்டு 27 மனைவிகளிடமும் ஒரே போல் அன்பு செலுத்துவதாக வாக்கு கொடுத்த சந்திரன், காலப்போக்கில் ரோகினியிடம் மட்டுமே மிகுந்த அன்புடன் இருந்ததால் மற்ற மனைவிகள் அவர்களது தந்தையிடம் முறையிட்டார்கள்.
அதை கேட்ட தக்கன் மிகுந்த கோபம் அடைந்து சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார். இதனால் முழு சந்திரன் தேயத் தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது.
திருமாலிடம் சென்று தன் குறையை கூறி சாப விமோசனம் கேட்க பெருமாள் தலைச்சங்க நாண்மதியம், ஸ்ரீரங்கம், திரு இந்தளூர் ஆகிய மூன்று தலங்களுக்கும் சென்று குளத்தில் நீராடி வழிபட சாபம் நீங்கும் என்று அருளினார்.
அதனை தொடர்ந்து சந்திரன் மூன்று தலங்களுக்கு வந்து குளத்தில் நீராடி திருமாலை வழிபட சந்திரனுக்கு ஏற்பட்ட சாபமும் தோஷமும் நோயும் விலகியது. திருமால் சந்திரனுக்கு காட்சி கொடுத்தது மட்டும் அல்லாமல் சந்திரனை தலையில் சூடிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இத்தலத்தில் சிவனைப் போன்று பிறைசூடி காட்சி கொடுக்கின்றார் பெருமாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |