முருகன் கலியுக வரதன் அவனை முழுமையாக நம்பினால் கண்டிப்பாக கைவிடமாட்டார்.அப்படியாக அவர் கோயில்கள் எப்பொழுதும் பெரும்பாலும் மலை மேல் அமைய பெற்று இருப்பதை நாம் பார்க்க முடியும்.மலை கோயில்கள் அதிக அளவில் முருகன் கோயிலாக இருப்பது அவரின் தனி சிறப்பு என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு ஊரில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு பின்னால் மிக பெரிய வரலாறு இருப்பதை நாம் கவனிக்க முடியும்.அந்த வகையில் கொங்கு நாட்டில் அழகான மலையின் அமர்ந்து அனைத்து மக்களின் மனதில் இடம் பிடித்த ஓதிமலை முருகன் கோயிலுக்கும் தனி சிறப்புகள் இருக்கிறது.அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முருகப்பெருமான் வீற்றிருக்கும் மலை கோயில்கள் அனைத்தும் குன்று என்னும் சிறிய மலைகளாகவே இருக்கும். ஆனால் ஓதிமலை முருகப்பெருமான் கோயில் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை ஆகும்.அதாவது இந்த மலை சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்டதாகும்.
இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாம், ஆயிரத்து 800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.
கோயில் வரலாறு
படைப்பு தொழிலின் கடவுளான பிரம்மா சிவபெருமானை காண கைலாயம் சென்ற பொது விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்று விட்டார்.இதனால் சினம் கொண்ட முருக பெருமான் பிரம்மாவை அழைத்து உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் கேட்டார்.
ஆனாள் படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்ம தெய்வன் அர்த்தம் தெரியாமல் நிற்க,அவரை சிறையில் அடைக்குமாறு முருகன் கட்டளையிட்டார்.அதுமட்டும் அல்லாமல் பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை முருகப்பெருமானே மேற்கொண்டார்.
அவ்வாறு முருகன் அவர் தனது படைப்புத் தொழிலை செய்வதற்காக தேர்வு செய்த இடம், இந்த ஓதிமலை என்று தலவரலாறு சொல்கிறது. படைப்புத் தொழிலை செய்து வந்த காரணத்தால், இந்தல முருகப்பெருமானுக்கு, நான்முகனின் நான்கு முகங்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு.
ஐந்து முகத் தோற்றத்தில் அருளும் முருகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் காண முடியாது என்பது, இந்த ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு. முருகப்பெருமான் படைப்பு தொழிலை மேற்கொண்ட பொழுது பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் பாவம் செய்யாத புண்ணிய ஆத்மாவாகவே பிறந்தது.
அதனால் அவர்களை இறப்பு தழுவ முடியாது சூழ்நிலை இருக்க ,இதனால் பூமி மிகவும் பாரமானது.கூட்டலும் கழித்தலுமாக இருக்கும் வாழ்க்கையை போல் தான் பூமியில் ஒன்று கூடினால் ஒன்று இறங்க வேண்டும்.ஆனால் மனிதன் இறப்பிற்கே வழியில்லாமல் வெறும் பிறப்பு மட்டும் இருந்ததால் பூமாதேவிக்கு பாரம் உண்டானது.
இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானாள்.இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால் பூமாதேவி தங்கமாட்டாள் என்று கருதி தெய்வர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சூழ்நிலை புரிந்து சிவபெருமானும் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.அப்படியாக சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான்,இத்திருத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது.
எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்ததாக, காரணப் பெயர் கூறப்படுகிறது. பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஓதி மலைக்கு அருகிலேயே இருக்கிறது. இரும்பறை என்பது மருவி இரும்பொறை என்று அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு
அழகான மலை மேல் வீற்றி இருக்கும் முருகப்பெருமானை காண முதலில் நாம் சுயம்பு விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.ஓதிமலையில் முருகனை காண வந்த ஈசன் தனியாக வந்த காரணத்தால் சிவனுக்கு மட்டும் தனியாக சன்னதி இருக்கிறது.
ஆனால் மலையின் மேல் பகுதியில் காசிவிஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு அருள்கின்றனர்.முருகன் படைப்பு தொழிலை இங்கு மேற்கொண்டதால் பக்தர்கள் தாங்கள் புதியதாக தொடங்க இருக்கும் தொழிலுக்கு இத்தல இறைவனை வந்து வணங்கி தொடங்குகிறார்கள்.
மேலும் வாழ்க்கையில் ஏதேனும் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது தடுமாற்றம் நிகழ்ந்தால் அதை உறுதி செய்ய பக்தர்கள் இங்கு வந்து முருகப்பெருமானிடம் பூ போட்டு கேட்கும் வழக்கமும் இருக்கிறது.
போகருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான்
இக்கோயிலின் வடமேற்கு பகுதியில் போகர் வேள்வி நடத்திய இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் என்ன அதிசயம் என்றால் இங்கு உள்ள மண் வெண்மையான நிறத்தில் இருக்கும். ஆதியில் இந்த மண்ணைத்தான் திருநீறு பிரசாதமாய் கொடுத்து இருக்கின்றனர்.
ஒரு முறை பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலை செய்ய போகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு அவருக்கு பழநிக்கு செல்ல வழி தெரியவில்லை. உடனே ஓதிமலையில் வீற்றி இருக்கும் முருகன் நினைவுக்கு வர, முருகப்பெருமானை நினைத்து வேள்வி ஒன்றை நடத்தினார் போகர்.
தனது பக்தன் போகருக்கு, பழநி திருத்தலம் செல்ல வழிகாட்ட அதிசயத்தை நிகழ்த்தினார் முருகப்பெருமான்.தனது ஆறு தலையிலிருந்து ஒரு தலையைப் பிரித்து, நான்கு கரங்களையும் கொண்டு முருகப்பெருமான் போகர் முன்பு காட்சியளித்து அவரை குமாரப்பாளையம் வரை அழைத்துச்சென்று பின்பு பழநிக்கு வழிகாட்டி விட்டு அங்கேயே குமாரப்பாளையம் முருகனாக அமர்ந்துவிட்டார்.
இதனால்தான் ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார்.எனவே, பழநி மலைக்கு முன்னரே உருவானதுதான் இந்த இரும்பொறை ஓதிஆண்டவர் திருக்கோயில். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும்.
ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். இந்த அமைப்பிற்கு ‘திரிகூடபீடம்’ என்று பெயர்.இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |