முருக பக்தர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி என்ன தெரியுமா?
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தண்டாயுதபாணி சுவாமி கோவில்
தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாகும். அன்னை பராசக்தியிடமிருந்து ஞானவேலை முருக பெருமான் பெற்ற திருநாளாக தைப்பூசம் கருதப்படுகிறது.
இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா மிகுந்த பக்தி மற்றும் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சென்று பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களை முடிப்பார்கள்.
இந்த வழிபாட்டின் போது காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், பாதயாத்திரை சென்று வழிபடுதல் போன்ற பல்வேறு விரத முறைகள் இந்த நாளின் நடைபெறும். இந்த தைப்பூசத்தில் குறிப்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக ஆண்டுதோறும் வருவார்கள்.

இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து, கடுமையான விரதங்களை கடைபித்து பல நாட்கள் நடைபயணமாக பழனியை நோக்கி பயணிக்கிறார்கள். பொதுவாக தைப்பூச திருவிழா காலத்தில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்பே பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் முருகனை தரிசிக்க வருகிறார்கள்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல மாவட்டங்களிலிருந்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோயிலை நோக்கி பாதயாத்திரையாக போய் வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சுவாமி தரிசனத்திற்காக கட்டண தரிசன வரிசை மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கட்டண தரிசன முறை ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.