5 வயது குழந்தைக்கு காட்சி கொடுத்த பெருமாள்
உத்தானபாதன் என்ற மகாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இதில் சுரூசிக்கு உத்தமனும், சுநீதிக்கு துருவன் என்ற மகனும் இருந்தார்கள். உத்தானபாதனுக்கு சுரூசி மீதும் அவனின் மகன் மீதும் மட்டும் தான் பிரியம்.
அதன் காரணமாக, சுநீதியையும் அவளின் மகன் துருவனையும் காட்டிற்கே அனுப்பி விட்டார்கள் என்று லிங்க புராணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு முறை உத்தானபாதன் அவனுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் வேளையில், சுரூசியின் மகன் உத்தமன் தந்தை மடியில் அமர்ந்து இருந்தான்.
அதை பார்த்த துருவன் தானும் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்ற ஆசையில் செல்ல, சுரூசியோ என் வயிற்றில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா? விலகி செல் என்று தள்ளி விட்டாள். அதை பார்த்து கொண்டு இருந்த உத்தானபாதனும் கீழே விழுந்த துருவனை தூக்க வில்லை.
சுரூசியிடம் இவ்வாறு ஒரு குழந்தையை கீழே தள்ளுவது சரி தானோ? என்று எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் அமர்ந்து இருந்தார். நடந்ததை எல்லாம் கவனித்த துருவனுக்கு மிகுந்த கோபமும் வேதனையும் உண்டானது.
அதே வேகத்தில் காட்டிற்கு செல்கின்றான். பிஞ்சு முகம் வாடியதை பார்த்து அவனின் தாய் சுநீதி என்ன ஆயிற்று என்று கேட்கிறாள். குழந்தையையும் நடந்ததை சொல்ல, சுநீதியோ ஆம் துருவா அவர்கள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது சொல்?
நான் பாவம் செய்தவள், பாவம் செய்தவள் வயிற்றில் பிறந்து விட்டு நீயும் பாவத்தையே செய்திருக்க வேண்டும். பாவத்திற்கு பிறந்த நாம் எப்படி துருவா உயர்ந்த பலனை எதிர் பார்க்க முடியும்? அது சரி ஆகாது! என்று அழுது கொண்டே துருவனிடம் சொல்கிறாள்.
அவ்வளவு மன கசப்பான சூழ்நிலையிலும், சுநீதி யாரையும் குறை கூற விரும்பாதவள், பழியை அவள் மீதும் அவள் மகன் மீதும் போட்டு கொண்டாள்.
அதோடு, துருவா பாவ பிறவிகளாக பிறந்த நமக்கு அந்த கோவிந்தனை அடைவதே ஒரே வழி என்று போதித்தாள். பிஞ்சு மனம், தாய் சொல்லை தட்டாத துருவன் காட்டிற்கு புறப்பிடுகின்றான்.
சப்தரிஷிகளும் குழந்தையைப் பார்த்து க்ஷத்ரிய தர்மமான தேஜஸ், கோபம் இரண்டும் இவனுடைய முகத்திலே தெரிகிறதே என்ற ஆச்சரியப்பட்டார்கள்.
துருவனிடம் மகரிஷிகளும், குழந்தாய் உனக்கு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா? தாய் தந்தையிடம் சண்டை போட்டு விட்டு வந்துவிட்டாயா? அல்லது வழி தெரியாமல் பாதை தவறி விட்டாயா? என்று கேட்க, துருவன் நடந்ததை கூறினான்.
நீ உயர்ந்த நிலையை அடைய கோவிந்தனையே சரணடைந்து பூஜிப்பாயாக” என்று மகரிஷிகளும் சொன்னார்கள். நாரதரும் அவ்வாறே சொன்னார். கோவிந்ததனை அடைய வேண்டும் என்று புரிந்து கொண்டு பிஞ்சுக்கு அவனை எவ்வாறு அடையவேண்டும் என்று வழி தெரியவில்லை. வெறும் நாலரை வயது தானே? என்ன செய்வான்?
ஆக, மஹரிஷிகளிடம் அதற்கான வழியை கேட்கின்றான். அதற்கு, மறுக்காமலும் மஹரிஷிகள் மார்பிலே கௌஸ்துப மணியுடன் திவ்ய மங்கள ரூபத்துடன் கூடிய பரமாத்மாவைப் பூஜி என்றார்கள். அதோடு, நாரதரும் துருவன் காதுகளில் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை சொல்லும் படி உபதேசம் செய்தார்.
அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு, துருவன் அந்த கோவிந்தனை அடைந்தே தீருவேன் என்று ஒற்றை குறிக்கோளுடன் யமுனை நதிக்கரைக்குச் சென்று தவம் செய்ய தொடங்குகின்றான்.
முதல் மாதம் பழத்தை மட்டும் சாப்பிட்டுத் தியானம் செய்தான். இரண்டாவது மாதம் இலை, தழை சாப்பிட்டுத் தியானம் செய்தான். மூன்றாவது மாதம் தீர்த்தம் மட்டும் பருகிவிட்டுத் தியானம் செய்தான். நான்காவது மாதம் வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு தியானம் செய்தான்.
ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளாது நின்றுகொண்டு தியானம் செய்தான். நாரத மகரிஷி போன்ற ஆச்சார்யரின் அனுக்கிரகம் ஏற்பட்டதால் துருவன் பெரிய பக்தனாகிவிட்டான். ஒவ்வொரு மாதமும் துருவனுக்குப் படிப்படியாகச் சுத்தி ஏற்பட்டு ஐந்தாவது மாதத்தில் பரப்பிரம்ம ஞானம் திளைக்கின்றான்.
தியானம் செய்ய அந்த வாசுதேவ மூர்த்தியே இதயத்தில் தெரிகின்றார். நாரதரின் உபதேசத்தினால் ஐந்தாவது மாதத்திலேயே பகவானைப் பார்த்துவிட்டது குழந்தை. பிஞ்சு குழந்தையின் ஆழ்ந்த பக்தியாலும் தவத்தாலும் பகவான் துருவனை காண வந்து விட்டார்.
தியானத்தில் ஆழ்ந்து இருந்த துருவன் எதிரே பரமாத்மா வந்து நின்று “துருவா!” என்று அழைத்தார். கண்களை திறந்த துருவனுக்கு ஆச்சரியம். குழந்தையின் நிலையைப் பார்த்த பரமாத்மா தன் இடது கையிலேயிருந்த பாஞ்சஜன்யமாகிற சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தைத் தொட்டார்.
மேலும், பகவான் கைகளில் இருக்கும் சங்கு வேதம் என்றால், சங்கின் நுனி ப்ரணவம். சங்கின் நுனி பட்ட மாத்திரத்தில் மகா ஞானியாகி பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறான் துருவன். “நீ அல்லவோ என்னுள் உட்புகுந்து பேச வைக்கிறாய்” என்று பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறது குழந்தை.
உன் அருள் இல்லாமல் எதுவும் சாத்தியம் ஆகுமா? என்று ஞானத்தில் ஜொலிக்கும் குழந்தையை பார்த்து பரமாத்மாவிற்குப் பரம சந்தோஷம். அதோடு துருவனுக்கு, முப்பத்தாறாயிரம் வருடங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்யவைத்தார்.
மேலும், துருவன் முன் ஜென்மத்தில் பிராமணனாக இருந்தபோது ராஜ்ய பவனத்தைப் பார்த்து ராஜ்ய பரிபாலனம் பண்ண மாட்டோமா என்று ஏங்கியதால், அதையும் நிறைவேற்றி வைத்தார் பரமாத்மா. இதற்கிடையில் சுரூசியும் உத்தமனும் காட்டுத் தீயில் மாண்டு போனார்கள்.
பரமாத்மா துருவனுக்காக நட்சத்திர மண்டலத்தில் உத்தமமான இடத்தை அமைத்துக் கொடுத்தார். புஷ்பக விமானம் வந்து அவனை அழைத்துக்கொண்டு போனது. நம் அம்மாவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று கவலை கொண்டான் துருவன்.
ஆனால், அவனுக்கு முன் ஒரு விமானத்தில் சுநீதி சென்றுகொண்டிருந்தாள். சுநீதிக்கு துருவனால் மிகவும் பெருமை சேர்ந்தது. மேலும், அந்த பரமாத்மா அமைத்துக் கொடுத்த இடத்தில் துருவன் இன்னமும் வீற்றிருக்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அது தான் துருவ நட்சத்திரம்.
ஆக, எப்பேர்ப்பட்ட துன்பம் ஆகினும், இறைவனை சரண் அடைய நம்முடைய கஷ்டங்கள் விலக்கி. நமக்கு இறைவன் மோட்சம் வழங்குவார் என்பது துருவன் கதையில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |