மீனாட்சி அம்மனுக்கு ஏன் ஒவ்வொரு வருஷமும் பட்டாபிஷேகம் நடக்கிறது தெரியுமா?
உலகை ஆளக்கூடிய தெய்வமாக அன்னை மீனாட்சி அம்மன் இருக்கிறாள். எந்த ஒரு இன்னல்கள் என்றாலும் "தாயே" என்று அவள் காலடிகளை சரணடைய பக்தர்களின் துன்பத்தை நொடி பொழுதில் தீர்த்து வைப்பாள் அன்னை. அது மட்டுமல்லாமல் வேகம், விவேகம், அன்பு, கருணை என்று எல்லாவற்றையும் வாரி வழங்கக் கூடிய தாயாக அன்னை இருக்கின்றாள்.
மதுரை மாநகரில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி அம்மனின் திருமேனி வேறெங்கும் காணக் கிடைக்காத பேரழகு கொண்டதாகும். மேலும், ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனுக்கு எட்டு கால பூஜை நடைபெறுகிறது. இந்த எட்டு கால பூஜையில் அம்பிகை ஒவ்வொரு கோலத்திலும் மக்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

அதாவது திருவனந்தல் பூஜை தொடங்கி அர்த்த ஜாம பூஜை வரை எட்டுகாலங்களில் அன்னை மஹா ஷோடசி, பாலா, புவனை, கௌரி, சியாமளை, பஞ்சதசி, மாதங்கி, ஷோடசி ஆகிய எட்டு திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மேலும், எட்டு திருக்கோலங்களில் காட்சி கொடுக்கக்கூடிய அன்னை மதுரையின் பேரரசி என்பதால் அவளுக்கு நடக்கக்கூடிய அபிஷேகத்தை யாராலும் தரிசிக்க முடியாது. அன்னையை அபிஷேக அலங்காரங்கள் முடிந்து திரை விலகிய பிறகே அவளை தரிசனம் செய்ய முடியும். அப்படியாக, சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மதுரை மாநகரில் விழா கோலமாக நடைபெறும்.
அதில் திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள் அன்னை திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை மதுரையின் அரசியாக முடி சூட்டப்பட்டு பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

சித்திரை திருவிழாவில் எட்டாவது நாள் அன்று விசேஷ அபிஷேகங்களும் பூஜைகளும் முடிந்த பிறகு பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார்.
பிறகுபட்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். அன்னைக்கு முடி சூட்டுவதற்கு ராயர் கிரீடம் என்கின்ற வைர கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டு வரப்படும் அதனுடன் செங்கோலும் கொண்டு வரப்படும். அற்புதமான நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பார்கள்.
பிறகு, சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி கிரீடம் சூட்டி செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சி அம்மனுக்கே உரிய வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் சாற்றப்படும். சிறப்பாக பட்டாபிஷேக வைப்பவம் நடந்து முடிந்த பிறகு அன்னை நான்கு வீதிகளிலும் பவனி உலா வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.

மதுரை மாநகரமே மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேக வைபவத்தன்று பெருமை கொள்வார்கள. அப்படியாக மீனாட்சி அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் பட்டாபிஷேகம் நடப்பதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
அதாவது அந்த காலங்களில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது அப்பொழுது மக்கள் தங்களுடைய குறையை மன்னரிடம் எடுத்துச் செல்லும் பொழுது அவர் அதை தீர்த்து வைப்பார் என்பது பழங்கால மக்களிடம் உள்ள நம்பிக்கை.
அதேபோல் நம்மை காப்பதற்கு நம்முடைய குறைகளை நீக்குவதற்கும் துன்பத்தில் இருந்து விடுதலை கொடுப்பதற்கும் அன்னையாகவும் அரசியாகவும் நம்மை ஆளக்கூடிய தெய்வமாகவும் மீனாட்சியம்மன் இருக்கின்றாள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை விழாவின்போது மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது.
முக்கிய நிகழ்வாக மட்டும் அல்லாமல் பெண்களை பெருமைப்படுத்தக்கூடிய ஒரு வைபவமாகவே நிகழ்கிறது. குறிப்பாக, பெண் சக்தியை போற்றக்கூடிய இந்த வைபவம் போல வேற பெண் தெய்வத்திற்கும் இல்லாத தனி சிறப்பு. இத்தனை சக்தி வாய்த்த அன்னை மீனாட்சியை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுதல் வைத்தாலே அன்னை அதை உடனடியாக தீர்த்து வைப்பாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |