உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்
ஒவ்வொருவர் பிறந்த கிழமை அடிப்படையில் நாம் அதற்குரிய ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்கின்ற பொழுது நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக, எந்த கிழமையில் பிறந்தவர்கள் என்ன பரிகாரங்கள் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. ஞாயிற்றுக்கிழமை:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும்.
அதே போல் இவர்கள் இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். அரசு வழியில் வெற்றி பெற இவர்கள் சூர்ய ஹோரை காலத்தில் முயற்சிகள் செய்தால் பலன் உண்டு.
2. திங்கட்கிழமை:
இவர்கள் அதிகாலையில் தாயை வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று வெள்ளி நிற பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நெய்வேத்தியம் படைப்பது சிறப்பு பெற்றுக் கொடுக்கும்.
இவர்கள் சந்தன நிறம், வெள்ளை ஆகிய ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட வாய்ப்புகளை தேடி கொடுக்கும்.
3. செவ்வாய்:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் அரளி பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபாடு செய்து மாலை பைரவருக்கு துவரம் பருப்பு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் கோபம், எரிச்சல், மனப்பதட்டம் குறையும். சிவப்பு, மஞ்சள், நிற ஆடைகளை இவர்கள் அணியும் பொழுது வெற்றிகள் தேடி வரும்.

4. புதன்:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் துளசி, கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மகாவிஷ்ணுவை சரணடைவது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வாழ்க்கையில் நல்ல உயரத்தை உருவாக்கும். இள நீலம் நிற ஆடைகள் அணிவது இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்.
5. வியாழன்:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
இவர்கள் தங்க நிற ஆடைகளை அணிவது சாதகமான பலனை கொடுக்கும். இவர்கள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் முக்கியமான விஷயங்கள் தொடங்கும் பொழுது அதில் வெற்றி உண்டு.
6. வெள்ளிக்கிழமை:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் மல்லிகை பூக்கள் கொண்டு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபாடு செய்யலாம். இவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது வெற்றி வாய்ப்புகள் பெற்று கொடுக்கும்.
7. சனிக்கிழமை:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ சாற்றி சிவபெருமானை சரண் அடைவது தோஷங்களை போக்கும்.
இவர்கள் ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. அதேபோல் இவர்கள் நீல நிற ஆடைகளை அணிவது நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |