தலைமுறை தோஷம் விலக வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த அம்மன்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கோயில்கள் சிறப்பாக இருக்கும்.பொதுவாக மிக முக்கியமான கோயில்கள் அதன் வரலாறுகளை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.ஆனால் நமக்கும் தெரியாத பல வரலாற்று சிறப்பு மிக்க சக்தி வாய்ந்த கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது.
அதை நாம் அந்த இடங்களுக்கு சென்று இருந்தாலும் அந்த கோயிலின் விவரம் தெரியாத காரணத்தால் அந்த கோயில்களை பார்க்க தவறிருப்போம்.அந்த வகையில் சேலம் சென்றால் அந்த மாவட்டத்தில் அமைய பெற்று உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
1.அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில்,சேலம்
அம்மன் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பது தெரிந்தது.அப்படியாக சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் அமைந்து உள்ளது. இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு.
மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் இருக்கின்றன.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.இந்த கம்பீரமான காட்சியை பார்ப்பதற்கே மெய் சிலிர்த்து போகும்.
இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை விலகி பரம்பரையில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும்,பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிப்பு குண்டானவர்கள் இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகும்.
குறிப்பாக ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள்,நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் இவர்கள் மேச்சேரி பத்ரகாளியம்மனை ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட தோஷம் விலகி நல்வாழ்வு அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையால் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் அவர்களுக்கு அந்த நோய் குணமாகும் என்பதும் நம்பிக்கை.மிக முக்கியமாக நாம் வளர்க்கும் கால்நடைகள் ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.
இடம்
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் மேச்சேரி,- 636453, சேலம் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 05.30 மணிக்கு முதல் இரவு 08.00 மணி வரை
2.அருள்மிகு அழகிரிநாதசுவாமி திருக்கோயில், கோட்டை
நான்கு புறமும் மலைகள் சூழ்ந்து இருக்க வியக்கத்தக்க கலைநுட்பங்களோடு சிறந்து விளங்கும் சிற்பக்கலைகளோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு அழகிரிநாதசுவாமி.சேலத்தில் மிகவும் பிரபலமான வைணவ திருத்தலத்தில் இக்கோயிலும் ஒன்று.
இக்கோயிலை அருள்மிகு அழகிரிநாதர் கோயில் என்றும் கோட்டைப்பெருமாள் திருக்கோயில் என்றும் அழைக்கின்றனர். சேலம் மாநகரில் திருமணி முத்தாற்றின் மேற்கு கரையில் இருக்கிறது இந்த ஆயிரமாண்டு பழமைவாய்ந்த கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில்.
கி.பி.12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அதன் பிறகு, சோழ வம்சத்தை சேர்ந்த ராஜகேசரி வர்மனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோயில் திருமதில், பாளையக்காரர்களால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோயிலில் ஆதிவேணுகோபாலநாதன், நின்ற கோலத்தில் அழகிரிநாதராக அருள்பாலித்து வருகிறார்.இதேபோல் சுந்தரவல்லி தாயார் பத்மாசனத்தில் தனிச்சன்னதியில் யோகவடிவில் அமர்ந்து அருள்பாலிப்பதும் வியப்பு.கோயிலின் சிறப்பாக கண்ணாடி மாளிகையும் இங்கு உள்ளது.
சொர்க்கவாசல் திறப்பின் போது மட்டுமே இந்த அறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு சிறப்பான பூஜைகள் கொண்டு கோயிலே விழா கோலமாக காணப்படும். குறிப்பாக சனிக்கிழமைகளில் இன்னும் விஷேசமாக இருக்கும்.
மேலும், மார்கழி மாதம் நடக்கும் பகல் பத்து, இராப்பத்து நிகழ்வில் கலந்து கொள்ள பல மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவார்கள்.
இன்னும் கூடுதல் சிறப்பாக ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பல ஆயிரம் மக்கள் சுவாமி தரிசிப்பது குறிப்பிடத்தக்கது.
இடம்
அருள்மிகு அழகிரிநாதசுவாமி திருக்கோயில், கோட்டை, சேலம் - 636001, சேலம் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை , மாலை 5 மணி முதல் 9 மணி வரை
3.அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,பேளூர்
இக்கோயில் சுமார் 1062 ஆண்டுகள் பழமையானது ஆகும்.இங்கு இறைவன் தான்தோன்றீஸ்வரர் (சுயம்பு) தர்மசம்வர்த்தினி ஆவர்.இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகருக்கு மிகவும் விசேஷமானவர்.அதாவது அவருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் இங்கு வழிபாடு செய்தால் உத்தியோக உயர்வு, விவசாய செழிப்பு, கல்வி, செல்வம் ஞானம் ஆகியவை இத்தலத்து இறைவனை வணங்கினால் கிடைக்கும் என்று இத்தலத்து பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
அடுத்தபடியாக பெரும்பாலான பக்தர்கள் சொல்லுவது இக்கோயிலுக்கு வந்தால் மனசலனகள் எல்லாம் விலகி அவர்களுக்கு ஒரு வகையான மன நிம்மதி கிடைக்கிறது என்று சொல்லுகின்றனர்.வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட அவர் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது.
வசிஷ்ட முனிவரது யாக சாலையில் பொருந்திய விபூதியானது மேனியில் பட்டால் மதிக்கத்தக்க செல்வம் பெருகும்.
இடம்
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், 26, அயோத்தியாபட்டினம், பேளூர் கீழக்காடு ரோடு, பேளூர், பாரதி நகர், சேலம் மாவட்டம். தமிழ்நாடு 63 61 04
வழிபாட்டு நேரம்
காலை 6.00மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
4.அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்,சேலம்
சேலம் நகருக்கு நடுவில் சுகவனேஸ்வரர் சுவாமி கோயில் கிழக்குமுகமாக அமைந்துள்ளது.மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு இருப்பது ஆச்சிரயம் தரக்கூடிய விஷயம்.ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது.
இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று.கிருதயுகத்தில் தேவர்களுடைய பாவத்தைப் போக்கியதால் இத்தலத்திற்கு பாபநாசம் என்றும், எம்பெருமானுக்கு பாபநாசர் என்றும் பெயர்.
இறைவன் நாமம் சுகவனேஸ்வரர் இறைவி திருநாமம் சுவர்ணாம்பிகை, மரகதவல்லி, பச்சைவல்லி என்னும் திருப்பெயர்கள் கொண்டு இருக்கின்றனர்.சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம்.
அழகிய கிளி முகங் கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது.இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். நவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர்.
இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும். நவகிரஹக சக்தி மேல் தளத்தில் பல்லி,உடும்பு உருவங்கள் உள்ளன.பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம்.
இடம்
அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
5.அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,சேலம்
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.
இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். அம்மாப்பேட்டை, மாரியம்மன் செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன் சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன் குகை, மாரியம்மன் அன்னதானப்பட்டி, மாரியம்மன் பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள்.
சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இடம்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,636001-சேலம்
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை , மாலை 5 மணி முதல் 9 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |