ஆயுளை அதிகரிக்கும் சனிக்கிழமை சனிபகவானின் சக்தி வாய்ந்த விரத வழிபாடு
இந்த உலகத்தில் தன்னலம் அற்று செயல்படக்கூடிய கிரகங்கள் எந்த மனிதனைப் பார்த்தும் பொறாமை கொள்வதும், இரக்கம் காட்டுவதோ இல்லை. அவர் அவர் செய்த முன்வினைப்பயனால் அவர்கள் அனுபவித்தாக வேண்டியதை கட்டாயம் அனுபவித்து ஆகவேண்டும் என்று அவர்கள் வேலையை சரியாக செய்வார்கள்.
அதிலும் கிரகங்களில் குறிப்பாக, நீதிமானாக இருக்கக்கூடியவர் சனீஸ்வர பகவான். இவர் மனிதர்கள் செய்யும் பாவபுண்ணிய கணக்குகளை சரியாக கணக்கிட்டு அதை அவர்களுக்கே திரும்ப வழங்கக்கூடியவர்.
மனிதன் ஆடும் ஆட்டம் எல்லாம் நொடி பொழுதில் அடக்கி பாடம் கற்பித்து கொடுக்கக்கூடியவர். இவருக்கு சுதர்சன எந்திர வழிபாடு செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால், இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பிடியில் இருந்து விலகி செல்வார்கள்.
அப்படியாக, இந்த விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலையில் குளித்து வீட்டின் பூஜை அறைகளை சுத்தம் செய்து அங்கு அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
சனி பகவானின் அம்சம் கொண்டவர் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி. அவர் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும்.
மேலும், இந்த விரதம் இருப்பவர்கள் நீல நிற உடைகளை அணிவது சிறந்த பலன் கொடுக்கும். பிறகு நெய் தீபங்கள் ஏற்றி, தூபம் போட்டு சனி பகவானுக்கு உரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். அதோடு, காலையில் சிறிது உணவை காகங்களுக்கு படைக்க வேண்டும். முடிந்தவர்கள் கட்டாயம் மாலை நேரத்தில் பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சார்த்தி வழிபாடு செய்யலாம்.
பிறகு, மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் நம்மால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் தான் ஒரு மனிதனுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கக்கூடிய அயுள்காரனாக இருக்கிறார். எனவே யார் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து சனிபகவானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சனியின் அருளால் நீண்ட நாட்கள் வாழும் ஆயுள் பெறுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |