மன கவலைகள் விலக ஒருமுறை இந்த நரசிம்மரை தரிசித்து வாருங்கள்
வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் சோழிங்கர் நல்லூர் அமைந்துள்ளது. சோழிங்கபுரத்துக்கு கிழக்கே அமைந்துள்ள இரண்டு சிறு குன்றுகளின் மீது யோக நரசிம்மர் மற்றும் யோகா ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன.
இத்திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் 65 ஆவது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் சோழிங்கநல்லூர் அதிகச் சிறப்பு வாய்ந்தது. காரணம், இவ்வூர் காஞ்சிபுரத்துக்கும் திருப்பதிக்கும் இடையில் உள்ள திவ்யதேசமாகும்.
மலைக்கோயில்
யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு 1300 படிகள் ஏறி செல்ல வேண்டும். ரோப் கார் வசதி உண்டு. ஆஞ்சநேயர் கோவிலுக்கு 460 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் என்றும் யோகா ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுகிறார். மலை அடிவாரத்தில் ஒரு கோவில் உள்ளது. அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் பக்தவத்சலப் பெருமாள். இவரே உற்சவமூர்த்தியும் ஆவார்.
திருக்கடிகை
பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இவ்வூரைத் திருக்கடிகை என்று நான்கு பாசுரங்களில் போற்றியுள்ளனர். இங்கு வைணவக் திருத்தலம் வருவதற்கு முன்பு காஞ்சிக் கடிகை போல் இங்கும் ஒரு பௌத்தக் கடிகை (பல்கலைக்கழகம்) இருந்துள்ளது. அதுவே திருக்கடிகை என்று போற்றப்பட்டது.
கோயில் அமைப்பு
யோக நரசிம்மர் கோவிலின் விமானம் சிம்ம கோஷ்டாக்ரதி விமானம் ஆகும். நரசிம்மர் கோவில் இன்றைக்கு பிரபலமாக இருந்தாலும் கூட இங்கு ஏற்கனவே ஒரு சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் கோயிலும் விஷ்ணுவுக்குரிய ஒரு கோவிலும் உள்ளன.
பெருமாளும் தாயாரும்
யோக நரசிம்மர் கோவில் மலை மீது உள்ளது அந்த மலைக்கு ஏறிச் செல்ல 1300 படிக்கட்டுகள் உள்ளன ரோப் கார் வழியாகவும் உதவியோடும் போகலாம். நரசிம்மருக்கு சாளக்கிராமம் பதிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தவல்லி
தாயாரின் பெயர் அமிர்தவல்லி நாச்சியார் ஆகும். அமிர்தவல்லி நாச்சியாரின் விக்ரகத்தை குபேரன் பிரதிஷ்டை செய்தார். அமிர்தவல்லி அல்லது லட்சுமி தேவி கிழக்கு நோக்கி தன்னுடைய சன்னதியில் அருள் பாலிக்கின்றார். வைணவ மரபிற்கு ஏற்ப இங்கும் முதலில் அமிர்தவல்லி தாயாரைத் தரிசித்த பின்பே யோக நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்.
மலைக்கோயில் அமைப்பு
மலையின் அடிவாரத்திற்கும் கோயிலின் நுழைவாயிலுக்கும் இடையே மலை மீது ஏறிச் செல்பவர்கள் அமர்ந்து இளைப்பாறிச் செல்ல ஏழு மண்டபங்கள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. அதன் உச்சியில் ஏழு கலசங்கள் உள்ளன. பலி பீடமும் கொடிக்கம்பமும் உள்ளது. கோயில் கருவறையின் முன்பு நான்கு தூண்கள் கொண்ட துவாத சாரதான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சக்கரை கனி
பெருமாளுக்கு நேர் எதிரே கருடாழ்வார் என்ற பெரிய திருவடி காட்சியளிக்கின்றார். நரசிம்மர் யோக நிலையில் இருப்பதனால் இங்கு அமைதியான மனநிலையில் காணப்படுகின்றார். எனவே இறைவனைப் போற்றிய ஆழ்வார் இவரை அக்கார கனி என்று அழைத்தார். அக்காரம் என்றால் சக்கரை சர்க்கரை கனி என்றால் இனிப்பு மிகுந்த கனி என்ற பொருள்.
கதை 1
ஊர்ப் பெயர் வரலாறு
சோளிங்கநல்லூர் என்பது சோழசிங்கநல்லூர் என்றும் சோழலிங்கநல்லூர் என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. சோழன் ஒருவன் இங்கு சிவலிங்கத்தை நிறுவி சோழேஸ்வரன் என்ற கோவிலைக் கட்டினான். எப்போது சோழலிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்ததும் சோழசிங்கபுரம் என்று பெயர் மாறிற்று. இன்று சோளிங்கபுரம் என்று அழைக்கப்படுகிறது. கௌதமர் வசிஷ்டர் கஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, பரத்வாஜர் மற்றும் விசுவாமித்திரர் ஆகிய சப்தரிஷிகளும் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த நரசிம்மரைக் கண்டு தரிசிக்க விரும்பினர்.
ஆனால் அவரை உக்கிரகோலத்தில் காண பயந்து சாந்தரூபத்தில் காட்சியளிக்க வேண்டும் என்று வேண்டினர். இவர்கள் ஏழு பேரும் நரசிம்மரை நினைத்து அவருடைய காட்சி வேண்டும் என்று இங்கு தவம் இருந்தனர். அவர் ஒரு நாழிகை மட்டும் காட்சி கொடுத்தாராம்.
ஒரு கடிகை (நாழிகை) என்பது 28 நிமிடங்கள். எனவே இத்திருத்தலம் கடிகை என்று அழைக்கப்பட்டது. எனவே இங்குள்ள யோக நரசிம்மரை ஒரு கடிகை நேரம் (28 நிமிடங்கள்) வணங்கினால் போதும் நினைத்தது நிறைவேறும்.
கதை இரண்டு
விசுவாமித்திரர் கதை
விசுவாமித்திரர் நீண்ட காலமாக பிரம்மரிஷி என்ற பட்டத்தை பெறுவதற்காக கடும் தவம் இருந்து வந்தார். அவ்வாறு தவம் இருந்தும் அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கவில்லை. மனம் சோர்ந்து போய் இங்கு வந்தவர் கடிகை நகரத்தில் தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தார்.
இங்கு (28 நிமிடங்கள்) ஒரு கடிகைப் பொழுது தவம் இருந்த உடனேயே நரசிம்மர் காட்சியளித்து அவரை பிரம்மரிஷி ஆக்கினார். அவரைப் பின்பற்றி இங்கு சப்தரிஷிகளும் தவம் இருந்தனர்.
ஆஞ்சநேயர் சந்நிதி
நரசிம்மர் சிலைக்கு நரசிம்மர் ஜெயந்தி அன்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. நரசிம்மருக்கு எதிரே உள்ள ஒரு சிறிய ஜன்னல் வழியாக பார்த்தால் அடுத்த குன்றின் மீது கோயில் கொண்டுள்ள ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.
அவர் அவரது மேல் கரங்களில் சங்கு மற்றும் சக்கர காணப்படுகின்றது. மேற்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார். இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருமஞ்சனம் தெரிவிக்கப்படுகின்றது.
கதை 3
நான்கு கைகளின் கதை
பொதுவாக அனுமன் சிலைகள் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்சி தரும். ஆனால் இங்கு ஆஞ்சநேயர் நான்கு கைகளுடன் தோன்றுகிறார். அதற்கான காரணத்தை ஒரு கதை விளக்குகிறது. வடக்கே உள்ள மதுராபுரியை இந்திரத்துய்மனன் என்றொரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவன் காட்டில் வேட்டைக்குச் சென்று இருந்த போது ஒரு மானை துரத்திக் கொண்டு பெரிய மான் கூட்டமே வந்தது.
அவன் அதை வேட்டையாட விரும்பினான். இனி தன்னால் தப்பிக்க முடியாது என்று நினைத்த அந்த மான் கண்ணீரோடு நின்று விட்டது. அப்போது அதன் இணையான ஆண் மான் வேட்டைக்கு வந்திருக்கும் அந்த மன்னனிடம் உயிர்ப் பிச்சை கேட்டது.
கண் கலங்கி நிற்கும் ஆன் மானைப் பார்த்த மன்னன் அத்துடன் வேட்டையாடுவதையே நிறுத்தி விட்டான். தேவர்களுக்கு மிகுந்த தொல்லை தரும் கும்போதரன் என்ற அசுரனுடன் போரிட கிளம்பினான் அசுரனைக் கொல்வதற்காக தேவேந்திரன் தனது தேரையும் வஜ்ராயுதத்தையும் கொடுத்தான்.
தேவர்களும் அசுரனைக் கொல்வதற்கான வேறு பல ஆயுதங்களை வழங்கினர். நரசிம்மர் ஆஞ்சநேயரிடம் மன்னன் இந்திரத்துய்மனுக்கு உதவும் படி கூறினார். அம் மன்னனுக்கு உதவும் பொருட்டு அவர் பெருமாள் தனக்கு கொடுத்த ஆயுதங்களை நான்கு கரங்களில் ஏந்தி மன்னனுடன் போருக்குச் சென்றார். அசுரனை வென்றதும் பெருமாள் கட்டளையால் ஆஞ்சநேயர் ஆயுதம் தாங்கிய கோலத்தில் இங்குக் கோயில் கொண்டருளினார்.
கதை 4
அனுமன் ஏன் இங்கே நின்றார்
இராமன் இராவணனை வென்று கொன்ற பின்பு அயோத்திக்குத் திரும்பும் போது அனுமனும் அவருடன் செல்ல விரும்பினார். ஆனால் இராமன் சோளிங்கருக்கு சென்று அந்த அசுரர்களால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து ரிஷிகளை காப்பாற்றும் படி அனுமனிடம் கூறினார். மேலும் தன் கையில் இருந்த சங்கு சக்கரத்தை அனுமன் கையில் கொடுத்து அவரை சோளிங்கநல்லூருக்கு அனுப்பி வைத்தார்.
கதை 5
அனுமன் கோயில் கொண்ட கதை
இன்னும் வேறு சிலர் காலன் மற்றும் கியன் என்ற ராட்சதர்களை கொல்வதற்காக நரசிம்மர் அனுமனுக்கு சங்கு சக்கரத்தை அளித்ததார். அனுமன் அந்த அசுரர்களைக் கொன்று முடித்துத் திரும்பியதும் நரசிம்மர் அனுமனிடம் 'இதே கோலத்தில் இங்கேயே என் அருகில் சின்ன மலையில் எழுந்தருள்வாயாக' என்று கூறினார். அதனால் அனுமன் இங்கேயே கோயில் கொண்டருளினார்.
வழிபாட்டின் பலன்
சோழிங்க நல்லூர் கோயிலுக்கு தீய சக்திகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும் பொருட்டு தொடர்ந்து வந்து வழிபடலாம். ஏவல் பில்லி சூனியங்கள் மாறிப்போகும். புத்தி கேடு குறைந்து நல்ல புத்தியும் அறிவுக்கூர்மையும் உண்டாகும். திருமணத் தடைகள் நீங்கும். மலட்டுத்தன்மை மாறிப் போகும்.
நல்ல ஆரோக்கியமான ஆயுள் நலம் கொண்ட தீர்க்காயுள் குழந்தைகள் பிறக்கும். எனவே பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் வணங்கி செல்கின்றனர்.
கோவில் வரலாறு
விஜயநகரப் பேரரசு காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் இங்கு யோக நரசிம்மர் கோவில் நிறுவப்பட்டது. என்பதனை 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இருந்து அறியலாம். அதற்கு முன்பு இங்கு பௌத்த கல்வி நிலயமும் துறவிகள் மடமும் இருந்துள்ளன.
ஒரு கல் யானை மற்றும் ஒரு தேர் ஊர் நடுவே இருந்துள்ளது. தற்போது யோக நரசிம்மர் அருள்.பாலிப்பதால் பெரிய மலைக்கோவில் என்ற சிறப்பு பெயருடன் இக்கோவில் அழைக்கப்படுகின்றது.
தீர்த்தங்கள்
சோழிங்க நல்லூர் நரசிம்மர் கோயிலில் பல தீர்த்தங்கள் இருந்தாலும் முக்கியமான தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். பௌத்த கோயில்களில் பிரம்ம தீர்த்தம் இருக்கும். கோயிலின் வழிபடு கடவுளர் மாறும்போது புதிய கதைகள் தோன்றும்.
கதை 5
பிரம்ம தீர்த்தம்
ஒரு காலத்தில் சிவனுக்கும் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு நாள் பார்வதி சிவன் என்று நினைத்து பிரம்மனைக் கட்டி அணைத்தாள். அது கண்ட சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து விட்டார். பிரம்மா நான்முகன் ஆனார்.
ஆனால் வெட்டி எறியப்பட்ட ஐந்தாவது தலை சோளிங்கநல்லூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி இங்கு எழுந்தருளியிருக்கும் யோக நரசிம்ம சுவாமியை தினமும் பூஜித்து வந்தது. நரசிம்மர் அருளால் வெட்டுப்பட்ட தலை பிரம்மனிடம் வந்து ஒட்டி கொண்டது.
108 தீர்த்தம்
மலைக்கு மேலே ஏறி செல்லும்போது செல்லும்போது பிரம்ம தீர்த்தத்தைக் காணலாம். இத் தீர்த்தத்திற்குள் 108 புனித நீர் தீர்த்தங்கள் உள்ளன. இது தக்கன்குளம் என்றும் அழைக்கப்படுகின்றது. இக்குளத்தில் அழகான படித்துறைகள் உள்ளன.
ஒவ்வொரு படித்துறையிலும் 25 படிகள் இறங்கிப் போய்த் தண்ணீரைத் தொட வேண்டும். பக்தவத்சலப் பெருமாளுக்கு இத்தீர்த்தத்தில் தெப்பததிருவிழாவும் தீர்த்த வாரியும் நடைபெறுகின்றன.
அனுமந்த தீர்த்தம்
ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகும் வழியில் அனுமந்த தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தைத் அனுமனே தோண்டினார். வால்மீகி முனிவர் இங்கே சோளிங்கநல்லூர் அருகே 87 ஆயிரம் ஆண்டு தவம் செய்தார். அதன் பிறகு நரசிம்மர் வால்மீகியிடம் இராமாயணத்தை எழுதும்படி கூறினார்.
சக்கர தீர்த்தம்
மலையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடுவதனால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகியன பௌத்த துறவிகள் வணங்கிய பிரம்ம விகார் மற்றும் இந்திர விகாருக்கு அருகில் இருந்த பழைய தீர்த்தக்குளங்கள் ஆகும்.
சிறப்பு வழிபாடுகள் சோளிங்கநல்லூரில் சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா நடைபெறும். வைகாசியில் நரசிம்மன் ஜெயந்தி கொண்டாடப்படும். பத்து நாள் திருவிழாவின் போது யோக நரசிம்மர் அமிர்தவல்லி தாயார் மிகப்பெரிய தேரில் ஏறி நகர்வலம் வருகின்றனர்.
ஆடிப்பூரம் ஆவணியில் பவித்ரோத் தவம் புரட்டாசியில் நவராத்திரி ஐப்பசி மாதம் மணவாள மாமுனி உற்சவம் மார்கழி மாதம் மகர சங்கராந்தி தொட்டாச்சாரியார் உற்சவம் என மாதந்தோறும் இக்கோவில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.
கண் திறக்கும் காலம்
யோக நிஷ்டையில் இருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் நிஷ்டை கலைந்து தன் பக்த கோடிகளுக்கு சேவை சாதிப்பார். இந்த ஒரு மாதமும் யோக நரசிம்மர் கண் திறந்த நிலையில் பக்தர்களை தன் அருள் பார்வையால் அருள்பாலிக்கின்றார்.
மற்ற மாதங்களில் யோக நரசிம்மர் கண் மூடி தியானத்தில் இருப்பார். குறிப்பாக கார்த்திகையின் ஞாயிற்றுக்கிழமைகளில் யோக நரசிம்மரை வழிபடுவது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும்.
காணிக்கைப் பொருட்கள்
யோக நரசிம்மருக்கு பக்தர்கள் சுவையான பண்டங்களை காணிக்கையாகப் படைக்கின்றனர். தேன்கனிக்ள், வெல்லம், வாழைப்பழம், தயிர் சாதம் போன்றவை யோக நரசிம்மருக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இறைவனுக்கு வேட்டியும் தாயாருக்கு சேலையும் நேர்த்திக்கடனாக எடுத்து வழங்கப்படுகின்றது.
அபிஷேகப் பொருட்கள்
வெள்ளிக்கிழமை தோறும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதால் அன்று இறைவனுக்கு பாலாபிஷேகம் தயிர் அபிஷேகம் தேனாபிஷேகம் சர்க்கரை அபிஷேகம் ஆகியவை ஆகியவை நடைபெறும். இந்த அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் வாங்கித் தருகின்றனர்.
வீடு கட்டும் நேர்த்திக்கடன்
வீடு கட்ட வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இறைவனிடம் வேண்டுதல் வைத்து கற்களை எடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கின்றனர். தங்களுக்கு வீடு கட்டும் யோகம் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |