பிள்ளை வரம் அருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள்
ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊர் கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலத்துக்கு அருகே அமைந்துள்ள திருமுட்டம் என்ற ஊரின் தமிழ்ப் பெயரை ஸ்ரீ முஷ்ணம் என்று மாற்றி அழைக்கின்றனர். இவ்வூர்க் கோயிலில் பிள்ளை வரம் அருளும் அரச மரமும் வேப்ப மரமும் ஸ்தல விருட்சமாக உள்ளது. இரண்டும் தனித்தனியாக பெருமாள் கோயிலிலும் சிவன் கோயிலிலும் உள்ளது. ஸ்ரீ வராக மூர்த்தி கோயிலுக்கு உள்ளேயே பிரசித்தி பெற்ற சிவன் கோயிலும் உண்டு.
பெருமாள் கோயில்
ஸ்ரீ முஷ்ணத்தில் பெருமாள் வராக அவதாரத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலுக்கு ஏழு நிலைகளுடன் கூடிய உயரமான ராஜகோபுரம் உண்டு. கருங்கல்லாலான பெரிய ஆயிரங்கால் மண்டபம் உண்டு. கருவறைக்குள்ளே பூவராக மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார்.
இங்கு மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது. பெருமாள் மற்ற கோவில்களில் உள்ளதைப் போல நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலமாகக் காட்சி அளிக்காமல் சிறிய அளவில் தோன்றுகின்றார்.
வராக மூர்த்தி
கருவறையில் உள்ள வராக மூர்த்தி கிழக்கு நோக்கி இரண்டு கரங்களை இடுப்பில் வைத்தபடி கம்பீரமாக வீரத்தோற்றம் அளிக்கின்றார். ஆனால் அவருடைய முகம் மட்டும் தெற்கு பார்த்து இருக்கின்றது. இவர் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கவில்லை.
சாதாரண மானிடனை போல இரண்டு கரங்களுடன் எழுந்தருளி உள்ளார். இவ்வராக மூர்த்தி சிலை சாளக்கிராமத்தினால் ஆனது. சாளக்கிராமம் என்பது நேபாள நாட்டில் கண்டகி நதிக் கரையில் பல நூற்றாண்டு காலமாக அலைக்கரங்களால் உருட்டப்பட்ட கற்களாகும்.
சாளக்கிராம கல்லால் ஆன மூர்த்தி என்பதனால் இம்மூர்த்திக்கு தினமும் அபிஷேகம் உண்டு. இவர் பிரம்மன் செய்த யாகத்தில் இருந்து தோன்றியதால் உற்சவமூர்த்தியை யாக வராகர் அல்லது யக்ஞ வராகர் என்பர்.
சம்ஸ்கிருதமயமாக்கம்
தமிழ்நாட்டில் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சியைத் தொடர்ந்து தெலுங்கு நாயக்கர், கன்னட ராயர், மராட்டியர், போன்ற பிற மொழி பேசும் மன்னர்களின் ஆட்சி ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் நடைபெற்றன. அப்போது தமிழ்க் கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன.
திருமரை (மான்) றைக்காடு வேதாரண்யம் ஆயிற்று, திருமுட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆயிற்று, பழ மலை விருத்தாசலம் ஆயிற்று. கோவிலில் உறையும் இறைவன் இறைவியின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள் ஆயின.
புராணமயமாக்கம்
வடநாட்டில் வழங்கிய ஹாலாஸ்ய புராணம், ஸ்கந்த புராணம் போன்ற புராணக் கதைகள் திருவிளையாடல் புராணம், கந்த புராணம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. சிவபுராணம் விஷ்ணு புராணம் கூறும் கதைகள் இங்குப் புதிய தல புராணக் கதைகளாகச் சேர்க்கப்பட்டன. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களின் தலைமைத் தெய்வங்களோடு துணைத் தெய்வங்களும் சில சேர்க்கப்பட்டன.
புதிய தெய்வ வரவுகள்
வைணவ மரபில் கோயிலுக்குள் நரசிம்மரும் வராக மூர்த்தியும் ஹயக்ரீவரும் இன்னும் சிலரும் சேர்க்கப்பட்டு தனி சந்நிதிகளில் இடம் பெற்றனர். சைவ மரபில் வீரபத்ரர், பிச்சாடனார், சரபேஸ்வரர் போன்றோர் இணைக்கப்பட்டனர்.
பிள்ளையாரை இரு மரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். வைணவ திருக்கோயில்களில் பிள்ளையார் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் இடம் பெற்றார். கௌதம புத்தரை பெருமாளின் அவதாரம் என்று சில சிந்தனையாளர்கள் கருத்து பரப்பினர். ஆனால் புத்தரை முதன்மைக் கடவுளாக வழிபட்ட அடித்தள மக்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் முனியப்பன், முனீச்வரன் என்று தனி பெயர் சூட்டி கொண்டனர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்'
பழைய பௌத்த கோவில்கள் பெருமாள் கோவில்களாக மாற்றப்பட்டபோது கௌதம புத்தரரை பெருமாளின் அவதாரம் என்றனர். ஆனாலும் கௌதம புத்தரின் சிலைகள் எந்த கோவிலுக்குள் வைக்கப்படவில்லை. அவை வெளியேற்றப்பட்டன.
பௌத்த, சமணக் கோவில்கள் இந்து சமயக் கோவில்களாக மாற்றம் பெற்றபோது இறைவனின் பெயர்களும் இந்து சமய தெய்வங்களின் பெயர்களாக்கப்பட்டன. பௌத்த, சமணப் பெயர்களோடு ஈஸ்வரன், பெருமாள் என்பன சேர்க்கப்பட்டது. புத்தர் தீர்த்தங்கரர் சிலைகள் அகற்றப்பட்டன. சில கோவில்களில் இச்சிலைகளுக்கு இந்து சமயப் பெயர்கள் வழங்கப்பட்டு அவை ராஜ கோலத்துடன் தோற்றமளித்தன.
நரசிம்மர், வராகர் வருகை ஏன்?
வைணவ மரபில் பழைய கோவில்களைப் புதிய பெருமாள் கோவில்களாக மாற்றும் போது அங்கு முதன்முதலாகத் தலைவாசலில் நரசிம்மரை வைக்கும் பழக்கம் வந்தது. அறவாழி எனப்படும் தர்மச்சக்கரம் இருந்த இடத்தில் அதன் பின்புறமும் நரசிம்மரைப் புதிதாக வைத்தனர்.
இவ்வாறு நரசிம்மரைப் புதிதாக கொண்டு வந்து வைத்ததற்கு காரணம் ஹரி என்று பெருமாளை துதிக்காதவனையும் துதிக்கக்கூடாது என்று சொல்பவனையும் நரசிம்ம மூர்த்தி ஈவிரக்கமின்றி வயிற்றைக் கிழித்து குடலை உருவிக் கொன்றுவிடுவார் என்ற அச்சுறுத்தலை வலியுறுத்தும் நோக்கமே ஆகும்.
வராக மூர்த்தி கடலுக்குள் அமிழ்ந்து கிடந்த பூமியைத் தன் கொம்பினால் குத்தி எடுத்து வெளியே மீட்டுக் கொண்டு வந்தவர். இந்நிகழ்வு பிற சமயத்தவருடைய சமயச் சித்தாந்த சாகரத்தில் மூழ்கிக் கிடந்தவர்களைத் (பூமியை) தன்னுடைய வைணவ சித்தாந்தத்தினால் மீட்டுக் கொண்டு வருபவர் பெருமாள் மட்டுமே என்ற கருத்தை உணர்த்திற்று.
புராணக்கதை எழுதியது ஏன்?
வராக மூர்த்திக்கு ஒரு புராணக்கதை உள்ளது. கதைக்கு கால் உண்டா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்லலாம். ஆனால் கதை எழுதப்பட்டதற்கு ஒரு காரணம் நிச்சயம் உண்டு. யாரும் பொழுது போகாமல் புராணக் கதை எழுதுவது கிடையாது.
ஒரு புராணக் கதை எழுதுகின்றார்கள் என்றால் அதற்கான சமூகப் பின்புலம் கண்டிப்பாக இருக்கும். திருத்தலத்துக்கும் இறைவனும் இறைவிக்கும் எழுதப்படும் ஒவ்வொரு கதையும் சமூகத்தினால் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக எழுதப்பட்டது.
சமயப் பேரெழுச்சி, முக்கிய காரணம்
தெய்வம் இல்லை என்று தொடங்கப்பட்ட புறச் சமயங்கள் (பௌத்தமும் சமணமும்) காலப்போக்கில் அந்த மதங்களை நிறுவிய மற்றும் பரப்பிய புத்தர், ஆதிநாதர், ரிஷப நாதர், மகா வீரர், அவலோகதிச்வரர், தாரா போன்ற மனிதர்களையே தெய்வங்களாகக் கருதி வழிபடத் தொடங்கின.
மனிதர்களால் தொடங்கப்பட்டு தொடரப்பட்ட சட்டம், சமயம், பண்பாட்டு போன்ற சமூக அமைப்புகளுக்கு தோற்றம், உச்சம், எழுச்சி உண்டு என்பது வரலாற்று உண்மையாகும். அன்று தோன்றிய எதுவும் இன்றுவரை அப்படியே தொடரவில்லை.
சமயம் பண்பாடு கலாச்சாரம் சட்டம் விதிமுறைகள் என்று அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதைப்போன்று சமண பௌத்த சமயங்களின் மீது மக்களுக்கு நாட்டம் குறைந்தது. அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர்.
அவ்வேளையில் சமுதாயத்தில் சைவ வைணவப் பேரெழுச்சி தோன்றியதும் மக்கள் புதிய வரவுகளில் ஆர்வம் காட்டினர். இம்மாற்றத்துக்கு அரசியல் பின்புலமும் உண்டு. ஆட்சியில் இருந்த மன்னர்கள் மதம் மாறியதும் மக்களும் மதம் மாறினர்.
மக்களின் வருகையை ஆதரவை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக சைவ வைணவ சமயங்களின் சிறப்பை விளக்கும் வகையில் புதிய கதைகள்எழுதப்பட்டன. பாசுரமும் பதிகங்களும் தோன்றின.
பழைய மொந்தையில் புதிய கள்
ஸ்தல புராணக் கதைகள் பழைய கதைகள் என்ற பெயரில் தோன்றியதுதான் இத்தோற்றத்தில் உள்ள நகை முரண் ஆகும். புராணம் என்றால் பழையது. பழையது என்ற பெயரில் எழுதப்பட்ட புதிய கதைகளைப் புராணக் கதைகள் என்றே அழைத்தனர்.
ஒவ்வொரு புதிய கோயிலுக்கும் அது பல யுகங்களுக்கு முற்பட்டது என்று எதிர்காலச் சந்ததியினர் நம்பும் வகையில் புராணக் கதையுடன் கூடிய புதிய கதை எழுதப்பட்டது.
அந்தத் தலத்துக்குரிய பழைய தெய்வம், அதன் இயல்பு, அதை வணங்குவதால் கிடைக்கும் நன்மை, அங்கிருக்கும் மரம், குளம், வழிபாட்டு முறை, நேர்ச்சை ஆகியன வேறு காரணங்களை எடுத்துரைத்து பாதுகாக்கப்பட்டன. மதம் என்ற மயக்கம் மக்களுக்குப் புதிய பெயரில், புதிய முறைகளில் தொடர்ந்தது. இறை நம்பிக்கை நீடித்தது.
புராண கதையின் மூலக் கரு
ரண்யாட்சன் என்ற அசுரன் விரிந்து பறந்து கிடக்கும் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். பூமியை சுருட்டிக் கொண்டு போன பிறகு கடல் எங்கே இருந்தது என்ற கேள்விக்குப் புராணத்தில் இடமில்லை.
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா- துணிவுடன்
செந்நாப் புலவன் நான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்
என்று திருமழிசை ஆழ்வார் பாடினார். உன் பாயை சுருட்டிக் கொண்டு என்னுடன் வா என்று அவர் பெருமாளை அழைத்தார். அவரது அழைப்புக்கு இணங்கிப் பெருமாள் பக்தனுடன் சென்ற இப்பாசுரத்தைப் படிக்கும் போது பெருமாளுக்கும் பக்தனுக்கும் இருந்த பக்தி நெறியை, ஆன்மப் பிணைப்பை அறிகின்றோம்.
இப்பிணைப்பின் எடுத்துக்காட்டாக அப்பாடலைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர எம்பெருமான் அறிதுயில் கொள்ளும் ஆதிசேஷனை (பாயை) எப்படி சுருட்டுவார் என்ற வினாவை எழுப்பக் கூடாது. இவ்வினாவை எழுப்பினால் கதையின் மூலக்கருவைப் புரிந்து கொள்ள தவறி விடுவோம்.
இறைவன் பக்தனுக்குக் கட்டுப்படுவான் என்பதே இப்பாசுரம் காட்டும் நிகழ்வின் மூலக் கரு. இதைப் போன்று வராகமூர்த்தி கதையிலும் பூமி தட்டையானதா? அதை எங்கே நின்று சுருட்டினார்? கடல் பூமியிலிருந்து வேறொரு இடத்தில் இருந்ததா? போன்ற கேள்விகளை எழுப்பக் கூடாது.
இதற்குத்தான் கதைக்கு கால் இருக்கிறதா என்று கேட்கக் கூடாது என்கிறோம். புராணக் கதைக்குக் அது காலந்தோறும் நிற்பதற்குக் கால் முக்கியமில்லை. எத்தனை யுகமானாலும் கதை நிற்பதற்குக் காரணம் அதில் உள்ள மூலக்கரு மட்டுமே. கரு இருக்கும் கதை என்றும் உயிர்ப்புடன் திகழும்.
வராகமூர்த்தி கதையின் மூலக் கரு
ரண்யாசட்சன் பூமியைப் பாயாக சுருட்டி கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்ட போது பெருமாள் பூமியை கிளரும் வராக மூர்த்தியைப் போல காட்டுப்பன்றி வடிவத்தில் கடலுக்குள் பாய்ந்து கடலின் தரையை குத்திக் கிளறி உள்ளே சென்று அங்கு ஒளிந்திருந்த ரன்யாக்ஷனைக் கொன்று அவனிடம் இருந்த பூமியைத் தன்னுடைய முகத்தில் வாய்க்கு மேலே இருக்கும் இரண்டு கொம்புகளால் குத்தித் தூக்கிக்கொண்டு கடலுக்கு மேலே வந்து பூமியை அதன் இடத்தில் வைத்தார்.
காணாமல் போன பூலோகத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் காட்டுப்பன்றி வடிவில் இருந்த வராக மூர்த்தி ஆவார். மக்களிடம் காணாமல் போன பக்தியை, அவர்கள் தேடிக் கொண்டிருந்த இறை மனித பிணைப்பை கண்டுபிடித்துக் கொடுத்தவர் வராகமூர்த்தி ஆவார்.
வராகம் ஏன்?
சிங்கம், புலி, யானை என்று மக்களால் இன்றைக்குப் போற்றப்படும் விலங்குகள் பல இருக்கும்போது அருவருப்பான விலங்காகப் பார்க்கப்படும் பன்றி வடிவை கதை எழுதியவர்கள் ஏன் அன்றைக்குத் தெய்வ உருவத்துக்குத் தெரிவு செயதனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பன்றி மனித குலத்துக்கு நிறைய நிகழ்வுகளை நிறையப் பாடங்களை கற்றுத் தந்த வழிகாட்டியும் முன்னோடியும் ஆகும். பன்றி தன் கொம்பால் மண்ணை அகழ்ந்து உள்ளே இருக்கும் கிழங்குகளை எடுத்து உண்ட போது தான் மனிதனுக்கு தரைக்குக் கீழே பூமிக்கு உள்ளே இருக்கும் உணவுப் பொருளை அறிந்து கொண்டான்.
காட்டுப்பன்றி தன் கொம்பால் மண்ணை கிறியதைப் பார்த்து கலப்பை செய்ய கற்று கொண்டான். மண்ணைக் கீறி விதை விதைத்தான். காட்டுப்பன்றி ஆதி மனிதனுக்கு உண்ண உணவையும் உணவு உற்பத்தியும் கற்றுக் கொடுத்தது.
உழவுத் தொழிலையும் வேளாண் கருவிகள் செய்யும் பொறியியலைக் கற்றுக் கொடுத்தது. இதன் கற்பனை நீட்சியே வராக மூர்த்தி கடலுக்கு அடியில் போய் பூமியை மீட்டுக் கொடுத்த கதை ஆகும். உலகம் உருண்டை என்பது அப்போது வடக்கே கதை எழுதியவனுக்குத் தெரியவில்லை.
சங்கத் தமிழ் நூல்கள் கடலால் சூழப்பட்ட பூமி என்றே பூமியைக் குறிப்பிடுகின்றன. காரணம், இங்கு கடலும் உண்டு கடல் கோல் அனுபவங்களும் உண்டு. வடக்கே அவை இல்லை. இங்கு கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் உண்டு.
நாவாய், கடல் பயணம், கடல் வணிகம் உண்டு. கடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. வடக்கே கடல் பயணம் ஒரு விலக்கு (taboo) அது அனுமதிக்கப்படவே இல்லை. வராகத்தால் மட்டுமே பூமியை தோண்டி உள்ளே இருப்பதை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை வராக மூர்த்தி கதையின் கற்பனை கதையின் வராக மூர்த்தி அவதாரத்தின் மூலவித்து ஆகும்.
தல விருட்சங்கள் வரலாறு
ஸ்ரீமுஷ்ணத்திற்கு இரண்டு தலவிருட்சங்கள்உள்ளன. . ஒன்று அது பௌத்த ஸ்தலமாக இருந்தபோது மக்கள் வழிபட்ட அரசமரம். மற்றொன்று இத்தலம் வைணவத் தலமாக மாறிய போது புதிதாகச் சேர்த்துக்கொண்ட துளசி.. ஸ்ரீ வராக மூர்த்தி தன்னுடைய ஒரு பார்வையால் அரச மரத்தையும் இன்னொரு பார்வையால் துளசிச்செடியையும் கொண்டு வந்தார் என்ற கதையின் மூலம் இரண்டு தாவரங்களின் சிறப்பையும் சமன் செய்கின்றனர்.
அரச மரமும் குழந்தை வரமும்
பௌத்தர்கள் தங்கள் வழிபாட்டு இடங்களில் புத்தரின் அடையாளமாக முதலில் அரசமரத்தை வைத்தனர். இந்த ஆதி அரச மரம் இன்றும் ஸ்ரீமுஷ்ணம் கோவிலின் திருக்குளமான நித்தியப் புஷ்கரணியின் தென்பகுதியில் உள்ளது. குழந்தை வரம் வேண்டுவோர் நித்திய புஷ்கரணியில் குளித்துவிட்டு அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை பேறு கிட்டும் .
சிவன் கோவில்
பிற மொழி மன்னர்களின் ஆட்சியில் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதியையும் சேர்த்து வைத்தனர். இதனால் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் காணப்பட்டது. இங்கும் ஸ்ரீ வராக மூர்த்தி கோவில் ஒருபுறம் இருக்க சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு பெயர் நித்திஸ்வரர். அம்பாளின் பெயர் பிரகநாயகி. சப்த மாதர்களாக விளங்கும் மகேஸ்வரி சாமுண்டி வராகி போன்றவர்களுக்கும் இங்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
குழந்தை வரமருளும் குழந்தை அம்மன்
நித்திச்வரன் சிவன் கோவிலுக்கு உரிய தலவிருட்சம் வேப்பமரம். இம்மரத்தின் கீழ் குழந்தை அம்மனுக்கு ஒரு தனி சன்னதி உண்டு. குழந்தை இல்லாதவர்கள் வேப்ப மரத்தைச் சுற்றி வந்து இக் குழந்தை அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பிறக்கும்.
இந்து இஸ்லாமிய ஒற்றுமை
இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சியில் பெருமாள் கோயில்களில் பல நாச்சியார்கள் இடம்பெற்றனர். ஸ்ரீ தேவி, பூதேவி பெரும்பாலும் பெருமாளுடன் கருவறையில் இருந்தனர். தாயார் சந்நிதி தனியாக இருந்தது. தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தனர். ஆண்டாள் சந்நிதி இருந்தது.
இவை தவிர ஸ்ரீரங்கம், காந்திபுரம், மதுரை போன்ற ஊர்களில் பெருமாள் கோயில்களில் துலுக்க நாச்சியார், மலையாள நாச்சியார்களும் சந்நிதி கொண்டிருந்தனர். இதனால் இந்து முஸ்லீம் பிணைப்பு அதிகமாயிற்று. ஸ்ரீ முஷ்ணத்தில் மாசி மகத்தன்று தொடங்கி பெருமாள் கோவிலில் 15 நாட்கள் விழா நடைபெறும்.
அப்போது உற்சவமூர்த்தி கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார். அங்கே உள்ள முஸ்லிம் தர்காவின் முன்பு இஸ்லாமிய பெரியவர்கள் உற்சவமூர்த்திக்கு சீர் கொண்டு வந்து தருவார்கள். அரிசி, பழம், பூ ஆகியவற்றைத் தட்டுகளில் ஏந்தி கொண்டு நிற்பார்கள்.
உற்சவர் அங்கே வந்ததும் சாமிக்கு தீபாராதனை நடைபெறும். அதன் பின்பு உற்சவமூர்த்தி புவனகிரிக்கு வந்து சௌராஷ்ட்ரர் சத்திரத்தில் தங்குவார். இவ்வாறு ஸ்ரீ முஷ்ணம் கோவிலின் வராகமூர்த்தி இரு மதங்களையும் இணைக்கும் இனியவராக, பிள்ளை பேறு வழங்கும் இறைவனாக சேவை சாதிக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |