2026 கந்த சஷ்டி : 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்
முருக பக்தர்கள் அனைவரும் காத்திருந்து விரதமிருக்க கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக இந்த மகா கந்தசஷ்டி விரதம் இருக்கிறது. இந்த மகா கந்த சஷ்டி விரதம் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து 7 நாட்கள் கடைபிடிக்கக்கூடிய ஒரு விரதமாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதம துவங்கி சப்தமி வரையிலான ஏழு நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆறாம் நாளான சஷ்டி திதி என்று கந்த சஷ்டி விழாவில் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும். பெரும்பாலும் சூரசம்ஹாரம் வரையிலான ஆறு நாட்கள் மட்டுமே பக்தர்கள் விரதம் அனுஷ்டிக்கும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலரால் அந்த ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாமல் போகிறது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

எப்படி விரதம் இருப்பது?
ஆறு நாட்கள் மகா கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹாரம் தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். இந்த ஆண்டு சூரசம்ஹாரம் நவம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள், பால், பழம் நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் முடிந்தவர்கள் உபவாசம் இருக்கலாம். இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டுமாவது சாப்பிட்டு விரதம் இருந்து கடைப்பிடிக்கலாம்.
ஆனால், நிச்சயம் விரத நாட்களில் தண்ணீர் நிறைய குடிப்பது உடல் நலத்திற்கு நன்மையை செய்யும். அந்த வகையில், இவர்கள் அதிகாலை எழுந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். முடியாதவர்கள் "ஓம் சரவணபவ" என்கின்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம்.
வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் பாலால் அபிஷேகம் செய்தும், பூஜை செய்து வழிபாடு செய்யலாம். அதாவது சூரசம்ஹாரத்திற்கு முந்தைய நாளான நவம்பர் 14ஆம் தேதி முருகப்பெருமான் அன்னை பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும்.

இந்த நாளில் வேல் வழிபாடு செய்வதும் வேல் பூஜை செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. முடிந்தவரை விரதம் இருக்க கூடிய நாட்களில் பகலில் தூங்காமல் யாருடன் வாக்குவாதம் செய்யாமல் கோபம் கொள்ளாமல் இருப்பது அவசியம்.
அன்று அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கும். பிறகு வீட்டிற்கு வந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து பால் குடித்து கொள்ளலாம்.
அதோடு சூரசம்ஹாரத்தன்று மாலை அல்லது மறுநாள் காலையில் பச்சரிசி சாதம், பால், பழம் ஆகிவற்றை முருகனுக்கு நெய்வேத்தியமாக படைத்து பிறகு பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு வழிபாடு செய்வதால் நிச்சயம் ஆறு நாட்கள் விரதம் இருந்த முழு பலனை நாம் பெறலாம். நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும். இந்த நாட்களில் முடிந்த அளவுக்கு அன்னதானம், உதவிகள் செய்யலாம். அவை நம் கர்மவினைகள் படிப்படியாக குறைக்கும் என்பது நம்பிக்கை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.