கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்- காவல் தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்
கணவன் மனைவி பந்தம் என்பது மிகவும் புனிதமான உன்னதமான ஒரு உறவாகும். மேலும் இந்த உறவானது கணவன் இல்லாமல் மனைவியும், மனைவி இல்லாமல் கணவனும் இல்லாத அளவிற்கு ஒரு இணைப்பை உருவாக்கி புரிதலோடு வாழ வேண்டும்.
அப்படியாக ஆதி காலங்களில் கணவன் எந்த வயதில் இறந்து விட்டாலும் கணவனுடன் சேர்ந்து மனைவியும் உடன்கட்டை ஏறக்கூடிய ஒரு அமைப்பு இருந்தது. இதில் ஒரு சில பெண்கள் கணவன் இறந்து விட்டால் மிகவும் விருப்பத்தோடும், ஒரு சில பெண்கள் விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏறக்கூடிய ஒரு நிலை இருந்தது.
ஆனால் காலப்போக்கில் இந்த நிலை மாறி கணவன் இறந்தாலும் மனைவிக்கு வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணி அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை கணவனை மனதில் நினைத்துக் கொண்டும் குழந்தைகளை கவனித்தும் அவர்களுக்காக வாழ தொடங்கினார்கள்.

இவ்வாறு இருக்கின்ற வேளையில் காலம் கடந்தும் கணவன் இறந்து துயர் தாங்காமல், கணவன் இல்லாத வாழ்க்கை என்ன நிலைக்கு செல்லும் என்று பயத்தில் கணவன் இறந்த பிறகு கணவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏறுகிறாள் ஒரு பெண். அவ்வாறு ஏறிய பெண் இன்று காவல் தெய்வமாக போற்றப்பட்டு ஊர் மக்களை காத்து வருகிறாள். அதைப் பற்றி பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில். இது காவிரி ஆறு தொடங்கும் இடத்தில் உள்ளது. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை செய்த பெண்ணை ஊர்மக்கள் தெய்வமாக வழிபடும் மரபை கொண்டுள்ளது இக்கோயில். இந்த பகுதியில் கணவன் மனைவியாக ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
அதில் கணவன் எதிர்பாராத விதமாக இறந்து விட மனைவி துயர் தாங்க முடியாமல் கணவன் இல்லாத வாழ்க்கை எண்ணிப் பார்க்க முடியாமல் அச்சத்திலும் மரபு சிந்தனையின் தாக்கத்திலும் கணவனுடன் மனைவியும் உடன்கட்டை ஏறி தீயில் எரிந்து விடுகிறார். இந்த நிகழ்வின் காரணமாகவே இந்த கோயிலுக்கு தீப்பாய்ந்தாள் கோயில் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இங்குள்ள அம்மனை தீப்பாய்ந்தாள் அம்மன் என்று அழைத்து வழிபாடு செய்கிறார்கள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவிற்காக கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோவிலிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி சக்தி கரகம், மேளதாள வாத்தியங்கள் மற்றும் காளி ஆட்டத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிலை வந்து அடைவார்கள்.
இந்த திருவிழாவில் வெளியூரில் இருந்தும் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் நிறைய பேர் தீ மிதிக்க வருகை தருவதாக சொல்லப்படுகிறது.
அதாவது பெண்கள் தங்களுடைய கணவனும் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று விரதம் இருந்து இந்த அம்மனை வழிபாடு செய்யும்பொழுது அவர்களுடைய குடும்பத்தை அம்மன் காத்து அருள்வதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் கார்த்திகை பிரதோஷ நாட்களிலும் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |