தினம் ஒரு திருவாசகம்
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால்,
திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி,
தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!
விளக்கம்
'பணிவார் பிணி தீர்த்தருளிப் பாதம் கொடுத்தி' என்றார். வினையுடைமையால் நேரே திருவடி பெறுவது அருமையாதலின், 'வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் தாராய்' என்றார். மன உருக்கமின்மையின், 'மூங்கில அனையேன்' என்று தம்மை இழித்துக் கூறிக்கொண்டார்.
மூங்கில் கெட்டியானது, கசிவில்லாதது. அடியவர்கள் செய்யும் வழிபாட்டிற்கு இறைவன் பயன் தருவதும் அவனது கருணையாலேயன்றி வேறன்று ஆதலின், தம்மை ஆட்கொள்வதும் அக்கருணைக்கு ஏற்புடையதேயாம் என்பார், அதுவும் அரிதென்றால், 'மூங்கில் அனையேன் வினையைப் பொடியாக்கிப் பாதம் தாராய்' என்றார். இதனால், உயிர்களின் வினைகளை அறுத்துத் திருவடி இன்பம் நல்குபவன் இறைவனே என்பது கூறப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |