தினம் ஒரு திருவாசகம்
அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலும்மற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
விளக்கம்
பராய் என்பது ஒரு வகை மரம்.கணுக்கள் நிறைந்தது. கணு வலிமையுடையதாய் இருக்கும். பராய் மரத்தினது கணுவைப் போன்று மனம் வலிமையுடையதாயுள்ளது என்பார், 'வன்பராய் முருடொக்கும் என் சிந்தை' என்றார்.
கண்ணை மரம் என்றது, கண்ணீர் பெருக்காமை பற்றியும், செவியை இரும்பு என்றது, உபதேசத்தைக் கேட்டும் பயன் அடையாமை பற்றியுமாம்.
அகவுறுப்பு மனம்.கண்ணும் செவியும் பிறவுறுப்புகள். இவ்விரண்டும் ஒத்துத் துணை புரிந்தால்தான் இறை வழிபாடு செய்ய முடியும் என்பதாம். இதனால், இறைவன் திருவருளைப் பெறுதற்கு உருக்கம் இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |