ஆலயம் சென்று வழிபாடு செய்யும் பொழுது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்
ஆலயம் சென்று வழிபாடு செய்வது என்பது எப்பொழுதும் நமக்கு நல்ல பலன்கள் கொடுக்கக்கூடியதாகும். அப்படியாக நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? நாம் செய்யக்கூடிய வழிபாடு சரியாக இருக்கிறதா என்று நம்மில் பலருக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
நாம் எப்பொழுதும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் கட்டாயமாக அதற்கு முந்தைய நாள் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் கோயிலுக்கு செல்லும் பொழுது சுத்தமான உடைகளை உடுத்தி மனத்தூய்மையுடன் செல்ல வேண்டும்.

எப்பொழுதும் கோயிலுக்கு செல்லும் பொழுது வெறும் கைகளுடன் நாம் செல்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். கோவிலுக்கு செல்லும் வேளையில் நம்மால் முடிந்த பூஜை பொருட்கள் அல்லது பூக்களை நாம் வாங்கி செல்ல வேண்டும்.
எப்பொழுதும் கோயிலுக்குள் நுழையும் பொழுது கட்டாயமாக கோபுர தரிசனம் செய்வது அவசியமாகும். அதன் பிறகு கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகு சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.
நாம் எந்த கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறோமோ அந்த சுவாமிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது பாடுவது நல்லது. பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்கி அதோடு முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தை மூன்று முறையாவது வலம் வர வேண்டும்.
இதோடு முக்கியமாக நவகிரக மண்டபத்தையும் வலம் வந்து வழிபாடு செய்வது அவசியமாகும். நாம் இறைவனை எவ்வாறு வழிபாடு செய்கின்றோமோ அதேபோல் நவகிரகங்களையும் நாம் மனதார வழிபாடு செய்வது வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை அகற்றி முன்னேற்றம் கொடுக்கும்.

மேலும் கோவில்களில் கொடுக்கக்கூடிய பூஜை பொருட்கள் அல்லது திருநீற்றை இரண்டு கைகளால் வாங்க வேண்டும். வாங்கிய பிரசாதங்கள் கீழே விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மிக முக்கியமாக பிரகாரத்தை வலம் வந்து வழிபாடு செய்து முடித்த பிறகு கொடி மரத்திற்கு முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து மனதில் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு பக்தியுடனும், அமைதியுடனும், பொறுமையுடனும் நாம் கோவில் சென்று ஒவ்வொரு விஷயங்களையும் உணர்ந்து வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் நமக்குள் நடக்கக்கூடியமாற்றங்களை உணரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |