தீராத நோய் தீர்க்கும் மஞ்சள் பிரசாதம்
திருஉத்திரகோசமங்கை தான் சிவபெருமான் தோன்றிய முதல் சிவன் கோயில் ஆகும். மண் தோன்றியதோ மங்கை தோன்றியதோ என்னும் வாசகம் இதனை நமக்கு உணர்த்தும்.
அந்த சிவாலயம் மிகப்பழமையான சிவாலயமாக இன்றளவும் இரண்டு இராஜ கோபுரங்களைக் கொண்டு விளங்கி வருகின்றது. அந்த ஆலயத்தின் மிகப் பிரதான தெய்வமாக விளங்குபவர் ஆடல்வல்லான் ஸ்ரீ நடராஜ சுவாமி அவர் அவரது திருமேனி மரகதத்தால் ஆனது.
வருடத்திற்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டும் அபிஷேகம் காணும் சிவபெருமான் மற்ற நாட்களில் எல்லாம் சந்தனத்தால் அதாவது சந்தனகாப்பு செய்யப்பட்டு விளங்கி வருகின்றார்.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட அதே உத்திரகோசமங்கையில் தான் பஞ்சமி திதி தேவதையாக விளங்கும் ஸ்ரீ வாராகி அம்மன் சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகின்றார்.
அந்த ஆலயத்தின் மற்றொரு தெய்வம் ஸ்ரீ மங்கை மாகாளியம்மன் ஆவார். சுற்றுப்புற கிராமங்கள் வரண்டு இருந்தாலும் கூட இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குளமானது ஒரு காலத்திலும் வறண்டு போவது கிடையாது.
அந்த குளக்கரையின் மகுடமாக திகழ்கின்றது ஸ்ரீ சுயம்பு வாராகி அம்மன் திருத்தலம். அன்னையின் வடிவம் சுயம்புவாக உள்ளதால் பெரும்பாலான நாட்கள் அன்னை வெள்ளி கவசம் சாத்தப்பட்டு விளங்குகிறாள்.
விசேஷ காலங்களில் மஞ்சள் சந்தனம் காப்பு ஏற்றுக் கொள்கிறாள் அன்னை வாராகி. மிகப்பெரிய வடிவமாக அமர்ந்த நிலையில் ஒரு காலை மடித்து மற்றொரு காலை பூமியில் ஊன்றியவாறு சுயம்பு திருமேனியாக விளங்குகிறாள் வாராகி அம்மன்.
மேலும் இந்த ஆலயத்திலும் மஞ்சள் வழிபாடுதான் மிகப் பிரபலமாக விளங்குகின்றது. தீராத நோய் தீருவதற்கு இந்த ஆலயத்திற்கு வந்து மஞ்சள் கிழங்கை அம்மியில் அரைத்து அம்பாளுக்கு செலுத்துகின்றனர் பக்தர்கள்.
அதுவும் இந்த ஆலயத்தின் எதிரே இருக்கக்கூடிய வற்றாத குளத்தின் நீரைக் கொண்டு தான் மஞ்சளை குழைக்க வேண்டும்.இப்படி செய்வதால் தீராத நோய்கள் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |