குற்றவாளிகளைத் திருத்தும் திருக்கோளக்குடி கோளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கோளக்குடி திருக்கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மலை மேலே சிவபெருமானுக்கு கட்டப்பட்டுள்ள குடவரை கோவில் ஆகும். கோளம் என்பது உருண்டையான பாறைகளைக் குறிக்கும்.
இங்கு இக் கோளப் பாறைகள் வெண்ணை உருண்டை போல ஆங்காங்கே நிறைய காணப்படும். இவை காலத்தால் மிக மிக பழையவை. பல நுற்றாண்டுகளாக காற்று வேகமாக அடித்ததனால் பாறைகள் தேய்ந்து போய் உருளை உருளையாகக் காட்சியளிக்கின்றன.
கண்டகி நதி நீரால் உருட்டப்பட்டு அதன் கறைகளில் கிடக்கும் சாளக்கிராமத் கற்கள் போல காற்றினால் உருட்டப்பட்டு கோளம் கோளமாக இங்கே பாறைகள் கிடக்கின்றன.
கோயிலின் காலம்
திருக்கோளக்குடியை திருக்கோளபுரம் என்றும் சிவபுரம் என்றும் கன்னிமா நகரம் என்றும் அழைத்துள்ளனர். திருக்கோளக்குடி கோவில் பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
பாண்டிய மன்னன் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகரன் திருப்பணிகள் கல்வெட்டில் காணப்படுகின்றன. எனவே இக்கோயில் திருப்பணி இவனது காலத்தில் 13-ஆம் நூற்றாண்டில் நிறைவு பெற்றிருக்கலாம்.
நானாட்டீசர்
செட்டிநாட்டைச் சேர்ந்த பூங்குன்ற நாடு, கோநாடு, காணாடு, கல்வாயில் நாடு என்ற நான்கு நாடுகளுக்கு மத்தியில் திருக்கோளபுரி அமைந்துள்ளது. இந்த நான்கு நாட்டைச் சேர்ந்த செட்டிநாட்டவர்கள் இக்கோவில் இறைவனை நானாட்டீசர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.
சமணர்கள் விவசாயம் செய்தால் புழு பூச்சிகளை அழிக்கும்படி நேரிடும் என்பதால் வியாபாரத்தில் மட்டுமே ஈடுபட்டனர். மதுரையில் சமணராக இருந்த கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாக தன் மனைவி சோழ இளவரசி மங்கையர்க்கரசியால் , ஞான சம்பந்தரால் மாறினார்.
புனல் வாதத்தில் தோற்ற எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். மற்ற சமணர்கள் சைவர்களாக மாறினர். இவ்வாறு மதம் மாறியவர்கள் தீவிர சைவர்களாகி பல சிவன் கோயில்களை கட்டினர்.
கோளக் குன்றும் கோயில்களும்
கோள வடிவிலான உலக்கை குன்று மற்றும் பிச்சூழி பாறை போன்ற பல குன்றுகளுக்கு நடுவே உள்ள ஒரு பெரிய கோளக் குன்றின் மீது கோளபுரி ஈஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. கீழே இருந்து மேலே வரை வரிசையாக கோயில்கள் கட்டினர். மலையில் அடி, நடு, மேல் என்று கட்டப்பட்ட கோயில்களை மூன்றையும் பூமி, அந்தரம், சொர்க்கம் என்பர்.
3+1
குன்றின் அடிவாரத்தில் பொய்யாமொழி ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து சற்று மேலே ஏறிப் போனால் சிவதர்மபுரீஸ்வரர் ஆலயத்தைக் காணலாம். அதே குன்றின் மீது இன்னும் கொஞ்சம் ஏறிப் போனால் அங்கு திருக்கோளபுரீஸ்வரர் கோவிலை அடையலாம்.
அதற்கும் மேலே மலை உச்சிக்குப் போனால் குன்றுதோறாடும் குமரனுக்கு ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆக திருக்கோளக்குன்றின் மீது மூன்று சிவாலயங்களும் உச்சியில் ஒரு முருகனுக்கு கோயிலும் உள்ளது. தர்மபுரி ஈஸ்வரர் கோவில் இருக்கும் இடத்தை கன்னி மலை என்று அழைக்கின்றனர். இப்பெயர் ஆய்விற்குரியது.
கதை ஒன்று
பலா மரத்து ஈசன்
அகத்திய மாமுனிவரும் புலஸ்திய மாமுனிவரும் இறைவன் பலா மரத்தில் உறைந்திருப்பதாகக் கருதி மரத்தை வழிபட்டு வந்தனர். ஐம்பூதங்களாகவும் சூரியன், சந்திரன் அக்கினி ஆகவும் எட்டு நிலைகளில் இருந்து இரு முனிவரும் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். அவ்வாறு தவம் செய்து சிவயோகம் பெற்ற நிலையில் அவர்களுக்குக் காட்சி அளித்த சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டார்.
பொய்யாமொழி ஈஸ்வரர் கோயில்
திருக்கோளக் குன்றின் கீழே அடிவாரத்தில் உள்ள பொய்யாமொழி ஈஸ்வரர் கோவிலில் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. மரகதவல்லி அம்மன் நின்ற கோலத்தில் தனிச் சன்னதியில் காட்சி தருகின்றார். கோவிலுக்கு முன்பு இருக்கும் பாறையை கோவிலின் புனிதம் கருதி திருப்பாறை என்று அழைக்கின்றனர். பொய்யாமொழி ஈஸ்வரர் ஆலயம் திருக்கோள மலையின் பூமிப் பகுதியில் உள்ளது.
சிவ தர்மபுரி
மலை அடிவாரத்தில் இருந்து 60 படிகள் ஏறிச் சென்றால் சிவ தர்மபுரி ஈஸ்வரர் ஆலயத்தை அடையலாம். இந்த சிவாலயம் மலையின் அந்தரத்தில் உள்ளது. அதாவது நடுவில் காணப்படுகின்றது. இங்கே காணப்படும் சிவலிங்கம் சுயம்புவாக கிடைத்ததாகும் அதாவது அதற்கு முன்பே இந்த சிவலிங்கம் இங்கு மக்களால் பூசிக்கப்பட்டு வந்தது. அந்த லிங்கத்தை சுயம்பு லிங்கம் என்பர். கோவிலுக்கு என்று புதிதாக செதுக்கப்படாத லிங்கம் என்று பொருள்.
தவளை படாத சுனை
கருவறைக்குப் பின்னால் தவளை படாத சுனை என்ற பெயரில் தவளைகள் இல்லாத ஒரு மலைச்சுணை காணப்படுகின்றது. இது கோயில் தீர்த்தமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது வளராது. அதற்கு ஒரு கதையும் உள்ளது.
அதுபோல இந்தச் சுனையில் தவளைகள் இனப்பெருக்கம் செய்து வாழ்வது கிடையாது. அதற்கு ஒரு தல புராண கதையும் சொல்லப்படுகின்றது.
கன்னியரும் விநாயரும்
திருக்கோள மலையில் சப்த கன்னியர் தேன்கூடு வடிவில் இவ்வழியே செல்லும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மலை மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் இங்கு விநாயகருக்கு கிழக்கு நோக்கிய ஒரு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலின் வடக்கே சிவகாமிவல்லி அம்மை என்ற பெயரில் இன்னொரு அம்மனும் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.
கோளபுரி ஈஸ்வரர்
திருக்கோளபுரி மலையின் மீது இன்னும் கொஞ்சம் ஏறிச் சென்றால் ஒரு குடவரைக் கோவில் காணப்படுகின்றது. அதற்குள் எழுந்தருளி இருக்கும் ஈசனின் பெயர் கோளபுரீஸ்வரராகும். இச் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.
கருவறை சிவலிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்னால் இருக்கும் பாறையில் நந்தி செதுக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு மேலே விமானமும் கருவறையின் வாசலில் அர்த்தமண்டபமும் உள்ளது.
அம்மன் சந்நிதி
கோளபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆத்ம நாயகி அல்லது ஆவுடைய நாயகி என்ற பெயரில் தனிச் சன்னதி கொண்டுள்ளாள். இப் பாறைக்கு மேலே படிகள் செதுக்கப்பட்டுள்ளன.
முருகன் கோயில்
திருக்கோளபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து படிகளில் ஏறி மலை உச்சிக்கு வந்தால் அங்கு ஆறுமுகமும் பன்னிருகையும் கொண்ட சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில்வாகனத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.
பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் பெருமாள், முருகன் ஆகியோர் இரண்டு மனைவியருடன் கருவறையில் காட்சி அளித்தனர். இதற்கு அருகில் உள்ள குன்றில் அர்த்தமண்டபம் உள்ளது. இங்கும் ஒரு சிவன் சன்னதி உண்டு. சன்னிதிக்குள் அன்ன லிங்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கே மலையின் உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் மண்டபம் உள்ளது.
கதை இரண்டு
தவளை இல்லாத சுனை
திருமால் சிவபெருமானை சந்திக்க வந்தபோது சிவபெருமானின் ஜடாமுடியில் விளையாடிக் கொண்டிருந்த நாகம் ஒன்று பெருமாளின் வாகனமான கருடனைப் பார்த்து 'கருடா சௌக்கியமா?' என்று கேட்டது. மற்ற இடங்களில் கருடனும் நாகமும் சந்தித்து இருந்தால் நாகத்தால் இவ்வாறு கேட்டிருக்க இயலாது.
ஏனெனில் கருடன் அதைக் கொத்திக் கொன்றிருக்கும். நாகம் நலமா என்று கருடனைக் கேட்டதும் 'எல்லோரும் அவரவர் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே' என்று கருடன் பதில் கூறியது. அதாவது நாகப்பாம்பு சிவபெருமானின் சடாமுடியில் இருந்தால் அது சௌக்கியமாக இருக்கலாம்.
அந்த இடத்தை விட்டு கீழே இறங்கினால் கருடன் கொத்திக் கொண்டு போய்விடும், என்ற உள்அர்த்தத்தில் கருடன் நாகப் பாம்புக்கு நல்ல பதில் உரைத்தது. நாகப்பாம்பு கர்வமாகக் கருடனிடம் பேசியதைக் கேட்ட சிவபெருமான் அதனைப் பூலோகத்திற்கு போகும்படி சபித்தார். தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு பூலோகம் தான் சிறைச்சாலை.
எனவே அங்கு இருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் சிவபெருமான் அவர்களைப் பூலோகத்திற்கு போ என்று உதைத்துத் தள்ளி விடுவார். நாகம் திருக்கோளபுரத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தது. அப்போது நாகம் இருந்த சுனையில் தவளைகள் கொக்கரித்துக் கொண்டிருந்தன.
அவற்றை மலைப் பறவைகள் வந்து கொத்தித் தூக்கிக் கொண்டு போய் உணவாக்கிக் கொண்டன. தவளை தன் வாயால் கெடும் என்பதை உணர்ந்து கொண்ட நாகம் இறைவனை நோக்கி தவளைகளைக் காக்க வேண்டி விண்ணப்பித்து இறைஞ்சினார்.
சிவபெருமானும் தவளைகளுக்காக மனம் இரங்கி 'இனி நீங்கள் இங்கே இருக்காதீர்கள் இருந்தால் தானே பறவைகள் வந்து கொத்தித் தின்றும்' என்று கூறிவிட்டார். அதன் பிறகு அந்த மலைச் சுனையில் எங்கேயும் எப்போதும் தவளைகள் காணப்படவில்லை.
எனவே இந்த சுனையை 'தவளை படாத சுனை' என்று அழைத்தனர். இந்தச் சுனைக்கு சிவகங்கை நெல்லியடி தீர்த்தம், ககோளத் தீர்த்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதர்ம தீர்த்தம் என்று பல பெயர்கள் உள்ளன.
சிறப்பு வழிபாடுகள்
திருக்கோளக்குடி கோலபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக 10 நாட்கள் கொண்டாடப்படும். அப்போது தேர்த் திருவிழாவும் நடைபெறும். சுவாமி தினமும் வீதி உலா வருவார். இதனை அடுத்து மார்கழி மாதம் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு.
தைப்பூசமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சோமவாரம் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
வழிபாட்டின் பலன்
திருக்கோளக்குடியில் வந்து சிவபெருமானைத் தரிசித்து விட்டு இந்த மலையில் அமர்ந்து சாப்பிட்டாலே ஜென்ம பாவம் நீங்கிவிடும். இம்மலையில் உள்ள சிவபெருமான் கோவிலில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் நம் முன்னோர்கள் செய்திருந்த பாவங்கள் தொலைந்து போகும்.
அவை நம்முடைய வாரிசுகளைப் பற்றி படராது தொட்டுத் தொடராது. இங்கே எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனை மனம் உருகி வேண்டினால் பிறர் பொருளை கவர நினைக்கும் கன்வர்கள், பிறர் பொருளை அபகரிக்க சூதாடும் சூதாடிகள், அடுத்தவரை ஆசை காட்டி ஏமாற்றிப் பணம் பறிப்போர், பெண்களின் கற்பைச் சூறையாடுவோர், கொலை செய்வோர் என பஞ்சமா பாதகங்கள் செய்ய நினைப்பவரும் திருந்திவிடுவர்.
ஏதேனும் குற்ற வழக்கில் மாட்டிக்கொண்டு அவதிப்படுவோர் திருக்கோளக்குடி வந்து கோளபுரீஸ்வரரை வணங்கி சென்றால் அவர் திருந்துவார். மனம் வருந்துவார். இறைவனின் அருள் பெற்று விளங்குவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |