புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Jan 18, 2025 07:00 AM GMT
Report

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூரில் இருந்து களக்காடு செல்லும் வழியில் திருக்குறுங்குடி என்ற திருத்தலம் அமைந்துள்ளது அங்கிருந்து அருகிலுள்ள திருமலைக்கு செல்லலாம். இம்மலைக்கோயில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மலை மேல் இருக்கும் இப்பெருமாள் கோவிலில் மகேந்திரநாதர் என்ற சிவன் கோவிலும் உண்டு. சங்கிலி பூதத்தான் என்ற நாட்டுப்புறத் தெய்வத்தின் பக்தர்களும் திருமலை நம்பியின் கருட சேவையின் போது சங்கிலியால் அடித்துக்கொண்டே பின்னால் வருவார்கள். கைசிக விருத்தாந்தம் என்ற நூல் இத்தலத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றது.

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருக்குறுங்குடியின் சிறப்பு

திருக்குறுங்குடி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் திருமலை நம்பி என்று பெருமாளை ஐந்து கோலத்தில் தரிசிக்கலாம்.

திருப்பாற்கடல் நாதர் சன்னதி திருக்குறுங்குடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நம்பியாற்றுக்கு அருகில் உள்ளது. திருக்குறுங்குடி திவ்ய தேசம் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். திருமங்கை ஆழ்வார் இங்கு வந்து தங்கி மோட்ச பதவி அடைந்தார். 

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

திருமலையின் சிறப்பு

திருமலை நம்பி மலை மேல் கோயில் கொண்டுள்ளார். இம் மலைக்கோயில் திருக்குறுங்குடி கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெருமாள் எழுந்தருளியிருக்கும் மலை என்பதால் இம்மலையை திருமலை என்று அழைக்கின்றனர். திருமலையின் அடிவாரத்தில் நாகர் வழிபாடு நடைபெறுகின்றது.

இங்கே உள்ள புற்று மணலை மக்கள் பிரசாதமாக எடுத்துப் பூசுகின்றனர். திருமலையின் பழைய பெயர் மகேந்திர கிரி ஆகும். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு மகேந்திரநாதர் என்று பெயர். மகேந்திர மலைக்கு பக்தர்கள் ஜிப்பில் செல்லலாம்.

திருமலை நம்பி திருக்கோவில் திருக்குறுங்குடி கோவிலில் இருந்து சற்று தொலைவில் காப்பு காட்டுக்குள் இருப்பதனால் வனத்துறை அனுமதி தேவைப்படுகின்றது. வனத்துறைக்கு 10 ரூபாய் செலுத்தி விட்டு இம்மலையில் ஏறிச் செல்ல வேண்டும். திருப்பதியில் ஏழு ஏழுமலை இருப்பதைப் போல இங்கும் ஏழு ஏற்றம் பகுதிகள் இருக்கின்றன எனவே இதனை திருமலைக்கு நிகராகக் கொண்டு வணங்கி வருகின்றனர். 

மலைக்கோயில் திறப்பு

திருமலை கோவில் பகலில் காலையில் 7 மணியிலிருந்து மதியம் மூன்று மணி வரை திறந்திருக்கும். கருட சேவை நடைபெறும் சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்

தனிச் சிறப்புகள்

திருமலை நம்பி கோவிலில் ஆண்டு முழுவதும் எல்லா சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறும். மற்ற கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை அன்று மட்டுமே பெருமாள் கருட வாகனத்தில் வலம் வருவார். மற்ற பெருமாள் கோயில்களில் கிருஷ்ணன் பிறப்பன்று உறியடித் திருவிழா நடைபெறும். இங்கு ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று உறியடி திருவிழா நடைபெறுகிறது.   

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

சங்கிலி பூதத்தார்

திருமலை நம்பி கோவிலில் பழங்காலம் தொட்டு சங்கிலி பூதத்தார் என்ற காவல் தெய்வம் மக்களின் வழிபடு தெய்வமாக இருந்து வருகின்றது. கருட சேவையின் போது பெருமாளின் பின்னால் வரும் சங்கிலி பூத சாமியின்பக்தர்கள் சங்கிலியால் உடம்பில் அடித்துக் கொள்வார்கள்.

இங்குப் பாயும் நம்பியாற்றில் சங்கிலி பூதத்தாரின் பக்தர்கள் சங்கிலியைப் போட்டு விடுவார்கள். மறு ஆண்டு விழா நடைபெறும் போது அந்தச் சங்கிலியை அங்கிருந்து எடுத்துக் கொள்வார்கள். 

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்

சித்தர் மலை

மகேந்திரகிரி என்று சைவர்களால் அழைக்கப்படும் திருமலையில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் ஆகியோர் இங்கு அரூபமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலைப் பகுதியில் 200 சித்தர்கள் வாழ்ந்ததாகவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்தர் வந்து திருமலைப் பெருமாளை வணங்கி பூசை செல்கின்றனர். 

நம்பியாற்றின் வரலாறு

நம்பியார் பெருமாள் பஃத்ரின் வேண்டுகோளுக்கு ஏற்ப பெருமாளே மலையிலிருந்து இங்குத் தருவித்தார். நம்பியாற்றுப் பாலத்தைக் கடந்ததும் இடப்பக்கமாக திருமலை மலைக்கோவில் உள்ளது. நம்பியாற்றில் நீராடிய பின்பு மலையேறி திருமலை நம்பியை வணங்குவதை மரபாக வைத்துள்ளனர்.. நம்பியாறு நோய் தீர்க்கும் சக்தி படைத்ததாகும்.

இந்த ஆறு மாயவன் பரப்பு என்ற இடத்தில் 5 சுனைகளாகத் தோன்றி கடையார் பள்ளம் வழியாக தாய்ப்பாதத்தைத் தொட்டு நம்பி கோவில் அருகில் நம்பியாறாகப் பாய்கின்றது. பெருமாளின் திருமஞ்சனத்திற்கு நம்பியாற்றில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்படுவதால் இவ்வாற்றில் மக்கள் எண்ணெய் தேய்த்தோ சோப்பு போட்டோ குளிக்க கூடாது.  

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

கதை 1
இசையால் திருந்திய அசுரன்

திருமலை நம்பி திருக்குறுங்குடியும் திருமலையும் சேர்ந்து தரிசிப்பதற்கான தலங்களாக இருப்பதற்கு காரணம் ஒரு புராணக் கதையாகும். திருக்குறுங்குடியில் வாழ்ந்த யாழ் இசைக்கும் பாணர் ஒருவர் தினமும் திருமலைக்குச் சென்று அங்கு இருக்கும் பெருமாளை வணங்கித் திரும்பி வருவார்.

அவ்வாறு ஒரு நாள் அவர் கார்த்திகை வளர்பிறை ஏகாதசியான கைசிக ஏகாதசி அன்று பெருமாளைட் தரிசிக்க மலைக்குச் சென்றார். போகும் வழியில் அடர்ந்த காடுகளைக் கடந்து அவர் செல்ல வேண்டும். அந்த காட்டில் வசித்த ஒரு அசுரன் அவரை கொன்று தின்ன முன்வந்தான்.

யாழ்ப்பாணர் என்னை இப்போது விட்டுவிடுப்பா. நான் பெருமாளைத் தரிசித்து விட்டு வரும்போது உனக்கு உணவாகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். திருமலைக்குச் சென்று பெருமாளை தரிசித்தவர் தன்னுடைய யாழில் கைசிகி ராகத்தை இனிமையாக வாசித்தார்.

பெருமாளை தியானித்தப்டி நெடுநேரம் வாசித்துக் கொண்டிருந்த அவருக்குத் திடீரென்று நினைவுக்கு வந்தது அசுரன் பசியோடு இருப்பானே அவனுக்கு உணவாக வேண்டுமே என்று விறுவிறு என்று நடந்து காட்டுக்குள் வந்தார். பெருமாள் பக்தர் பாடிய கைசிக நாதத்தை கேட்டு மனம் உருகி நின்ற அசுரன் அவர் வேகமாக நடந்து வருவதை பார்த்து ஒரு வயோதிகரை போல் தன் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு அவர் செல்லும் வழியில் நின்றான். அவரைப் பார்த்து 'எங்கே இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்?' என்று கேட்டார் அந்த முதியவர்.

அதற்கு யாழ்ப்பாணர் 'நான் ஒரு அசுரனுக்கு என்னை உணவாகக் கொடுப்பதாகச் சொல்லிச் சென்றேன். என்னை மறந்து யாழிசையில் மூழ்கி விட்டேன். அவர் பசியோடு இருப்பார் எனவே விரைவாக செல்கிறேன்' என்றார். அதற்கு அந்த முதியவர் வேடத்தில் இருந்து அசுரன் 'அவனிடம் செல்லாதீர்கள். அவன் உங்களை 'இல்லையில்லை.

மாங்கல்ய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி(அதிசய புருஷாமிருகமும் உண்டு)

மாங்கல்ய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி(அதிசய புருஷாமிருகமும் உண்டு)

 

நான் அதற்கு ஒப்புக்கொண்டு தான் எம்பெருமாளைத் தரிசிக்கச் சென்றேன். என்னுடைய ஏகாதசி விரதம் நிறைவுற்றது. நான் இனி சொன்ன சொல் தவறாமல் அவனுக்கு உணவாக வேண்டும்' என்றார். வயோதிகளாக இருந்த அசுரன் தன் உருவத்தைக் காட்டி 'ஐயா என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு அருள் காட்டுங்கள். உங்கள் கைசிகி நாதம் கேட்டு நான் மனம் உருகி விட்டேன்.

என்னிடம் இருந்து அசுரத்தனங்கள் என்னை விட்டு விலகி விட்டன. நான் சோமசன்மன். அந்தண குலத்தில் பிறந்தவன். நான் ஒரு வேள்வியைத் தவறாகச் செய்து விட்டதால் அசுர உருவம் பெற்றேன். உங்கள் இன்னிசையைக் கேட்டு பெருமாள் பக்தியில் மூழ்கி மனித ரூபம் பெற்றேன்' என்றார்.

அவரை வாழ்த்தி பெருமாள் பக்தியில் இன்னும் ஊறித் திளைக்கும்படி அறிவுறுத்தி நம் பாடுவான் என்ற திருநாமத்தை சூட்டிவிட்டு திருக்குறுங்குடிக்கு திரும்பினார்.   

கொடி மரம்

பாணர் திருமலையில் தங்கியிருக்கும் போது பக்தி சிரத்தையோடு எம்பெருமானை தினந்தோறும் பாடித் துதித்தார். பாணர் என்பதால் கோயிலுக்குள் செல்லாது கோவிலின் வாசலில் நின்று பாடுவார். அங்கிருந்து சாமியைப் பார்க்க முடியாது.

சாமி தரிசனம் செய்ய இயலாததால் கொடி மரத்தை நகர்ந்து நிற்கச் சொன்னார் அதன்படியே கொடிமரம் நகர்ந்தது. திவ்ய தரிசனமும் கிடைத்தது. திருமலை நம்பி கோவிலில் சாமிக்கு எதிரே இல்லாமல் இப்போதும் கொடி மரம் சற்று நகர்ந்து தான் உள்ளது.

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

விழாக்கள்

திருமலை நம்பி கோவிலில் சித்திரை மாதம் வசந்தோற்சவம் நடைபெறும். வைகாசியில் ஜேஷ்டாபிஷேகம், ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் ஊஞ்சல் உற்சவம், தை மாதம் தெப்பத் திருவிழா, பங்குனி மாதம் பிரம்மோற்சவம் என்று தமிழ் மாதங்கள் தோறும் திருக்குன்றுக்குடியில் விழாக்கள் நடைபெறும்.

இவ் விழாக்களின் போது பக்தர்கள் கூட்டம் மலைக் கோயிலுக்கு அதிகமாக வரும். திருமலையின் தனித்தன்மைகள் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே நம்மாழ்வாராக வந்து பூமியில் பிறந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. ஸ்ரீ பாஷ்யக்காரரான இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இவ்வூர் இறைவனான நம்பி ஒரு சிஷ்யனைப் போல அவர் அருகில் வந்து நின்று அவரிடம் பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டு உபதேசமும் பெற்றார்.

அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில்

அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில்

இராமானுஜர் இவருக்கு வைஷ்ணவ நம்பி என்று புது பெயர் சூட்டினார். இராமானுஜர் திருவனந்தபுரம் சென்றபோது அங்கிருந்த நம்பூதிரிகள் இவர் வைஷ்ணவ சம்பிரதாயங்களை புகுத்த விடாமல் தடை செய்தனர். அப்போது நம்பூதிரிகளின் வன்முறை நடவடிக்கைகளில் இருந்து இராமானுஜரை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தது திருமலை நம்பியின் வாகனமான கருடாழ்வார் ஆகும் என்பதும் வரலாறு.

திருமலைக்கு ஒரு முறை ஒரு மன்னன் இறைவனை வணங்க வந்தான். பெருமாளை தரிசித்தவன் தான் அப்போது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே தோண்டினால் ஸ்ரீ தேவநாயகனும் ஸ்ரீ வரமங்கையும் கிடைப்பார்கள் என்ற அசரீரி ஒலிக்கக் கேட்டான்.

அதன்படியே அவன்பூமிக்கு அடியில் இருந்த தெய்வத்திருவங்களை எடுத்து அவற்றை நாங்குநேரியில் உள்ள வானமாமலை திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான்.

உப சன்னதிகள் 

திருமலை கோவிலில் மகேந்திர கிரிநாதருக்கு கால பைரவருக்கு தனி சன்னதி உண்டு. நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் செப்புத் திருமேனிகளாக உள்ளனர்.

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

நம்பியாறு தோன்றிய கதை

பெருமாள் பக்தர் ஒருவர் தினமும் திருமலைக்குச் சென்று அங்கிருக்கும் சுனையில் தண்ணீர் முகந்து கொண்டு வந்து கீழே திருகுறுங்குடியில் இருக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவர் மலை மீது சென்று தண்ணீர் முகந்து கொண்டு வரும்போது இறைவன் அவரது பக்தியை சோதிக்க நினைத்து வேட்டைக்காரன் வடிவில் வந்து 'ஐயா தாகமாக இருக்கிறது குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.

நாவறட்சியில் உயிரே போய்விடும் போலிருக்கிறது' என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அந்த பக்தர் 'என்னை மன்னித்துக் கொள்ளப்பா. நான் பெருமாளுக்கு அபிஷேகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். மீண்டும் என்னால் அவ்வளவு உயரம் மலை ஏறி தண்ணீர் முகந்து கொண்டு வர இயலாது.

என்னை மன்னித்துக் கொள் நீ வேறு எங்கேயாவது தண்ணீரைத் தேடிக்குடி என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்' தாகத்தால் தவித்த வேட்டைக்காரன் தன் வில் நுனியால் பக்தரின் அபிஷேக தீர்த்தப்பானையைத் தட்டி ஓட்டை விழ செய்து அதன் வழியே சிந்திய தண்ணீரைக் குடித்தான். சிறிது நேரம் கழித்து பெருமாள் பக்தர் தன் பானை காலியாக இருப்பதைப் போல உணர்ந்தார்.

திரும்பி பார்த்தால் வேட்டைக்காரன் வந்து கொண்டிருந்தான். 'ஏனப்பா இப்படி செய்தாய்? என்னால் அவ்வளவு தூரம் உயரே ஏறிப் போக முடியாது அந்த மலையின் தண்ணீரை உன்னால் இங்குக் கொண்டுவர முடியுமா? ஏன் இப்படி செய்தாய் என்று கடும் கோபத்துடன் அவனிடம் கேட்டார். அதற்கு வேடன் 'உங்களுக்கு தண்ணீர் தானே வேண்டும். அதைக் கேளுங்கள். ஏன் வீணாக கோபிக்கின்றீர்கள்?' என்று தன் வில்லை வளைத்து மலையின் மீது அம்பு விட்டான்.

அவன் அம்பு தைத்த இடத்தில் இருந்து அருவி பெருகி பெருமாள் கோவிலுக்கு அருகே நம்பியாறாக ஓடத் தொடங்கியது. திருமலை நம்பியின் பெயரால் நம்பி ஆறு என்று இந்த புதிய ஆறு பெயர் பெற்றது. இங்கிருந்து தான் தற்போது பெருமாளுக்கு அபிஷேக நீர் எடுக்கின்றனர் 

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

முன் வரலாறு

பழந்தமிழகத்தின் நடுகல் திருமலை நம்பி கோவிலின் நம்பி என்ற பெயர் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு பெருமாளை குறித்தது. ஆனால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் பழந்தமிழகத்தில் நம்பி என்ற சொல் நல்ல இளைஞனையே குறித்தது.

ஊருக்காகவும் ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும் போரிலும் தன் இனத்தைக் காப்பாற்றவும் என்று பொதுக் காரணத்துக்காக உயிர் துறந்த வீரனுக்கு (நம்பிக்கு) நடத்தப்படும் நடுகல் / நம்பி வழிபாடாக இருந்தது.

பௌத்த சமய வரவு

கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு பிறகு சமண பௌத்தம் சமயங்களின் வருகையின்போது பேய், பூதம், இயக்கன், இயக்கி வழிபாடுகள் அறிமுகமாயிற்று. இவை அமானுஷ்ய சக்தி உடையவை. ஆனால் தெய்வங்கள் அல்ல. தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவை.

இவற்றை semi Gods (பாதி கடவுளர்) என்பர். கி.பி. முதலாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம் தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் சதுக்க பூதம் நகரின் நடுவில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. பேய்ச்சி அம்மன் வழிபாடு என்பது பேய் வழிபாடாகும்.

பேய்ச்சி பிற்காலத்தில் பெரியாச்சி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். பேய்ச்சியைத் தமது குலதெய்வமாகக் கொண்டோர் தங்கள் குழந்தைகளுக்கு பேய்ச்சி, பேயம்மா, பேயன் என்று பெயர் சூட்டினர். 

இசக்கி

பூதம், பேயை அடுத்து யட்சன் யட்சிணி என்ற இரண்டு வகை அமானுஷ்ய சக்திகள் பௌத்த சமண சமயத்தாரால் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை பேச்சு வழக்கில் இசக்கி என்றும் இசக்கியப்பன் இசக்கியம்மை என்றும் எழுத்து வழக்கில் இயக்கன், இயக்கி என்றும் அணங்கு என்றும் குறிப்பிட்டனர்.

சாமிகளைக் கட்டுதல்

பௌத்தத் துறவிகள் (ரிஷி/முனி/சாமி/ சித்தர்) மருத்துவ மாந்திரீகம் ரசவாதம் சோதிடம் தெரிந்தவர்களாக இருந்ததனால் பூதம், பேய், யட்சன், யட்சினி ஆகியவற்றை மந்திரம் என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டனர். இதனால் பல கோவில்களில் சங்கிலிக்கருப்பன், சங்கிலி பூதத்தான், சங்கிலி மாடன் போன்ற தெய்வங்கள் தோன்றின. மாந்திரீகச் சங்கிலியால் கட்டிப் போடுவது துஷ்ட தெய்வங்களின் துஷ்ட சக்தியை குறைக்கும்.

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில் | Thirumalai Nambi Temple In Tamil

ஸ்ரீ சக்கரம்

பௌத்தர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பௌத்தர்களின் தாராதேவி கோவில்களில் தேவியின் ஆக்ரோஷத்தை, ஆங்காரத்தை கோபத்தைக் குறைப்பதற்காக இந்து சமயப் பெரியவர்கள் ஸ்ரீ சக்கரம் முதலான யந்திரங்களைசே செப்புத்தகட்டில் எழுதிப் பெண் சாமி சிலைகளின் காலடியில் பதித்தனர்.

இதனால் துடியான பெண் தெய்வங்களின் துடிப்பு குறைந்து சாந்தமான தெய்வங்கள் ஆயின. நடுகல் வழிபாடு நடந்த பூர்வீகக் கோயில் பௌத்த சமயம் அறிமுகமான காலத்தில் சங்கிலி பூதத்திற்குரிய கோவிலாக மாற்றபட்டிருக்கும்.

கல் நட்டு வழிபட்ட வீரனாகிய தெய்வத்தை பௌத்த துறவிகள் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கலாம். அல்லது புதிய பூதத்தை சங்கிலியால் கட்டி இங்குத் தெய்வமாக நிலை நிறுத்தி இருக்கலாம்.  

கருடன் என்ற கழுகரசன்

திருமலை கோவிலில் கருடன் அல்லது கழுகு முக்கியத்துவம் பெற்றிருப்பதாலும் இக்கோவில் பழைய பௌத்த கோவிலாக இருந்ததை அறியலாம். பௌத்தர்களுக்கு கழுகு என்பது புத்தரின் அதாவது புத்தியின் அம்சமாகும். இப்பறவையை தங்க இறக்கை உள்ள பறவை என்றும் போதி சித்தர் என்றும் பௌத்தர்கள் அழைத்தனர். இவர்களுக்கு கருடன் / கழுகு இருக்கும் இடம் தெய்வ சக்தி இருக்கும் இடமாகும்.

கழுகு வணக்கம் / கருட வணக்கம் புத்த வணக்கமாகவே கருதப்பட்டது. பௌத்தக் கோயில்களில் (கருடனுக்கு) கழுகுக்கும் தனிக் கோவில் எழுப்பப்பட்டது. மனித முகமும் கழுகின் இறக்கையும் கழுகின் அலகும் கொண்ட பறவை+ மனிதன் உருவச்சிலை (zoomprphisம்) வழிபடு தெய்வம் ஆயிற்று. கிபி எட்டாம் நுற்றாண்டுக்குப் பின்பு பௌத்தக் கோயில்கள் சிவன் அல்லது பெருமாள் கோவிலாக மாற்றம் பெற்றன.

அனல் வாதம் புனல் வாதம் போன்றவற்றால் சமண, பௌத்தர்கள் வைதீக சமயங்களைத் தழுவினர். பின்பு சைவ வைணவப் பூசல் தோன்றியது. திருப்பதியில் பிறந்து வளர்ந்த பெரிய திருமலை நம்பி ருத்ர (சிவ) பக்தராக இருந்த கோவிந்தப்ப பிள்ளையை மீண்டும் விஷ்ணு பக்தராக மாற்றினார் என்ற வரலாறும் உள்ளது.

சைவ கோவில்கள் இருக்கும் இடத்தில் வைணவ கோவில்களை கட்டுவதும் வைணவ கோவில்கள் இருக்கும் இடத்தில் சைவ கோவில்களை கட்டுவதும் என்ற நிலையும் தோன்றியது.

நிறைவு

முன்னோர் வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடு நடந்த பழந்தமிழகத்தில் புகுந்த சமண பௌத்த சமயங்கள் பழைய தெய்வஙளுக்குப் பெயர் மாற்றம் செய்தன.குறிப்பாக மலைகளின் உச்சியில் மடத்தையும் அடிவாரத்தில் ஆலயத்தையும் சேர்த்து மடாலயங்கள் எழுப்பி மலைவாழ் மக்களின் பூர்வீக தெய்வங்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு புதிய பௌத்த பெயர்கள் சூட்டப்பட்டன.

பிறகாலத்தில் அவ்விடங்களில் சிவன்/ பெருமாள் கோவில் தோன்றியதும் பழைய பௌத்த கடவுளனின் பெயர்கள் சாயலில் புதிய சிவன் அல்லது பெருமாள் பெயர்கள்உருவாகின. . திருமலைக் கோவிலில் முதலில் நம்பி அல்லது குமரன் நடுகல் வழிபாடும் அதனைத் தொடர்ந்து சங்கிலி பூதத்தின் வழிபாடும் பின்பு பௌத்த கழுகு அரசன் வழிபாடும் இறுதியாக பெருமாள் வழிபாடும் தோன்றியுள்ளது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US