நாகதோஷம் போக்கும் புற்றுலிங்கம் திருப்புன்கூர் சிவலோகநாதர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோவில் உள்ளது. சிதம்பரம் போய் சிவபெருமானைத் தரிசிக்க ஆசைப்பட்ட ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான நந்தனுக்கு சிவலோகம் காட்டிய ஸ்தலம் திருப்புன்கூர் ஆகும்.
இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் பெயர் சிவலோகநாதர். அம்மனின் பெயர் சொக்கநாயகி அல்லது சௌந்தரநாயகி. இங்குப் புங்கமரம் தலவிருட்சமாக உள்ளது. அப்பர் சுந்தரர் சம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத் திருத்தலம் திருப்புங்கூர் ஆகும். காவிரி வடகரை திருத்தலங்கள் 270 இல் இருபதாவது திருத்தலம் திருப்புங்கூர் திருத்தலம் ஆகும்
தீர்த்தங்கள்
இங்கு முன்ப பௌத்த கோயிலில் இருந்ததால் சிவன் கோயில் வந்த பின்பு பழைய தெய்வங்கள் சிவனை வணங்கி துதித்தனர் என்ற கதைகள் தோன்றின. அவ்வகையில் பௌத்தர்கள் வணங்கிய தேவேந்திரன், பிரமன், அக்கினி ஆகியோர் வழிபட்ட தலமாக இத்திருத் தலம் விளங்குகிறது.
தேவேந்திரன் சிவபெருமானை துதிக்க விரும்பி இங்கு ஒரு குளம் வெட்டி தினமும் அதில் குளித்து இறைவனைத் தொழுதான். அக்கினி பகவானும் தன் சாபம் தீர ஒரு குளம் வெட்டி அதில் தினமும் குளித்து சிவ தியானம் செய்து சாப விமோசனம் பெற்றார். இவற்றால் இங்கு இங்கு தேவேந்திர தீர்த்தம் அக்கினி தீர்த்தம் உள்ளன. இவை தவிர இடப தீர்த்தம் கணபதி தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோவில் கருவறையில் சிவலோகநாதர் என்ற சிறிய லிங்க பாணம் உள்ளது. அம்மன் சன்னதியில் சௌந்தரநாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி சிவகாமியோடு நடராசர் ஆடிய கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.
அவரது பாதத்தின் அருகே குடமுழவையும் பஞ்சமுக வாத்தியத்தையும் முழக்கும் பூத கணங்கள் உள்ளன. திருநாளை போவார் என்று சேக்கிழாரின் பெரியபுராணம் போற்றுகின்ற நந்தனுக்கு இங்கு ஒரு செப்புச் சிலை உண்டு.
கருவறைநாதர்
திருப்புன்கூர் கோயிலின் கருவறையில் சிவலோகநாத சுவாமி புற்றுருவில் நாக தெய்வமாக மிகச் சிறிய பாண வடிவில் உள்ளார். புற்றின் மீது புனுகு பூசப்படுகின்றது அதன் மீது குவளை சார்த்தப்படுகின்றது குவளைக்குத்தான் அபிஷேகம் நடக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமை இரவும் 8:30 மணிக்கு புனுகுச் சட்டம் சார்த்துகிறார்கள்.
நாகதோஷ பரிகார ஸ்தலம்
திருப்புன்கூர் கோயிலின் மூலவர் நாகதேவனாக விளங்குவதால் நாக தோஷம் உள்ளவர்களுக்கு இத் தலம் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது. திருமணத் தடை மற்றும் குழந்தைப் பேறின்மையால் அவதிப்படுவோர் இக்கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபட தோஷம் நீங்கி வம்சம் விருத்தி ஆகும்.
சிலர் நாகதோஷத்திற்குப் பரிகாரமாக தங்கத்தால் வெள்ளியால் நாகர் உருவம் செய்து உண்டியலில் சேர்க்கின்றனர். இங்கும் திருமணஞ்சேரியில் செய்யப்படுவது போல பரிகார அர்ச்சனை செய்யப்பட்டு மாலை வழங்கப்படுகிறது.
கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், பிச்சாடனார், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.
அம்பாள்
திருப்புன்கூர் கோயிலின் அம்மன் சௌந்தர நாயகி அல்லது சொக்க நாயகி ஆவாள். நாயகன், நாயகி என்பது வடமொழி செல்வாக்கு ஏற்ப்பட்ட காலத்தில் தோன்றியன. இதற்குரிய தமிழ் நிகரான அப்பன் அம்மை என்பனவாம்.
வேதகிரியிலும் மலையில் உள்ள ஒரு பழைய தனிப் பெண் தெய்வம் சொக்கம்மை எனப்படுகிறாள். பல திருக்கோயில்களில் பெண் தெய்வங்கள் சுந்தரவல்லி, சுந்தராம்பாள், சவுந்தர்யநாயகி, அழகி, அழகம்மை என்று பெயர் பெற்றுள்ளனர். இங்குக் கருவறை நாயகிக்குப் புடவை சார்த்துதல், அபிஷேகம் செய்தல், சந்தனக் காப்பிடுதல் போன்றவை முக்கிய நேர்த்திக்கடன்களாகும்.
வழிபட்டுப் பலன் பெற்றோர்
பதஞ்சலி முனிவர், வியாக்கரபாதர், மற்றும் ஆயர்கோன் கலிக்காம நாயனார், விறல்மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வணங்கி நற்பேறு பெற்றுள்ளனர்.
குளம் வெட்டிய பிள்ளையார்
நந்தனார் சிவபெருமானை காணச் செல்லும் முன்பு குளிப்பதற்காக அங்க ஒரு குளத்தை கோவிலின் மேற்கே வெட்டினார். இந்த தீர்த்தம் ரிஷப தீர்த்தம் எனப்படுகிறது. இத் தீர்த்தத்தை ஒரே இரவில் தன் பூத கணங்களைக் கொண்டு விநாயகர் வெட்டி உதவினார் என்ற கதை வழங்கப்படுகிறது. இதனால் இதனை விநாயக தீர்த்தம் என்றும் குறிப்பிடுவர். இக்களக்கரையின் விநாயகரை குளம் வெட்டிய பிள்ளையார் என்றும் அழைக்கின்றனர்.
திருச்சுற்றுத் தெய்வங்கள்
திருப்புன்கூர் சிவாலயம் மிகவும் பெரியதோ மிகச் சிறியதோ அல்ல. நடுத்தரமானது. ஐந்து நிலை ராஜகோபுரம் 2 சுற்றுப் பிரகாரங்களும் கொண்டது. கோயில் வாயிலில் துவார விநாயகர் காணப்படுகிறார். வெளிப்பிரகாரத்தில் குளம் வெட்டிய விநாயகரும் சுப்பிரமணியரும் தனித்தனி சன்னதியில் உள்ளனர்.
இங்குப் புங்கமரமாகிய தல விருட்சமும் அதற்கு அருகில் பிரம்ம லிங்கமும் உள்ளது. உள்பிரகாரத்தில் இடது பக்கம் சூரியன், சைவ சமயக்குரவர் நால்வர், கலிக்காம நாயனார் ஆகியோருக்குத் தனித்தனி சிலைகள் உள்ளன. அடுத்து சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் இத்தலத்தில் காட்சி தருகின்றார். வடகிழக்கு மூலையில் பைரவருக்கு தனி சன்னதி உண்டு அதற்கடுத்து சந்திரன் உள்ளார்.
லிங்கங்கள்
திருப்புன்கூர் சிவாலயத்தில் ஏராளமான லிங்கங்கள் உண்டு. உள் சுற்றில் சூரியனும் அக்கினியும் வழிபட்ட லிங்கங்களும் ஆறுமுக சன்னதியும் உள்ளன. பிரம்ம தேவனுக்காக பஞ்ச முகங்களுடன் காட்சி அளித்த பஞ்சலிங்க மேடை உள்ளது. இதில் ஐந்து லிங்கங்கள் உண்டு. இதற்கென்று ஒரு கதையும் உள்ளது.
விழாக்களும் வழிபாடுகளும்
திருப்புன்கூர் சிவாலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா பத்து நாள் திருவிழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். பத்து நாட்களும் சாமி வீதி உலா வருவது உண்டு. அந்நாட்களில் ஊரே விழா கோலம் பூண்டிருக்கும்.
திங்கள் தோறும் சோமவார பூஜை சிறப்பாக நடக்கும். சிவராத்திரிகளில் மாத சிவராத்திரி மார்கழி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிவபெருமானுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பௌர்ணமி திதி அன்று அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.
கதை ஒன்று
யார் அழகு?
அம்பாள் அழகியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் இதுவாகும். எனவே அம்பாளுக்கு தன் அழகின் மீது ஒரு கர்வம் தோன்றியது . ஒரு நாள் கைலாயத்தில் சிவனோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது 'நம் இருவரில் யார் அழகு?' என்று அம்பாள் சிவபெருமானிடம் கேட்டார். அவளது கர்வத்தைப் புரிந்து கொண்ட சிவபெருமான் 'நான் ஒரு தர்ப்பையைக் கிள்ளிக் கீழே போடுகின்றேன்.
அந்த தர்ப்பை புல் எதில் விழுகிறதோ அதுதான் அழகு' என்றார் .அம்பாளும் ஒப்புக்கொண்டாள். அவர் தர்ப்பைப் புல்லை பிடுங்கிக் கீழே போட்டார் அந்த புல் நேரே பூலோகத்தில் வந்து திருப்புன்கூரில் விழுந்தது. அந்த இடத்தில் ஐந்து சிவலிங்கங்கள் தோன்றின.
பஞ்சபூதலிங்கத்தை பார்த்ததும் அம்பாள் தலை குனிந்தாள். என்றைக்கும் சிவன் தான் அழகு என்பதை புரிந்து கொண்டாள். எனவே இத்தலத்தில் ஒரே மேடையில் ஐந்து லிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.
கதை 2
மழை பெய்யவும் மழை நிற்கவும் ஒருமுறை சோழ நாட்டில் மழை இன்றி கடும் வறட்சி நிலவியது. அப்போது சோழ மன்னன் சுந்தரரை அழைத்து 'மழை பெய்ய பதிகம் பாடுக' என்று வேண்டினான். அதற்கு சுந்தரரும் அவர் நண்பரான ஆயர்கோன் கலிக்காம நாயனாரும் திருப்புன்கூர் சிவன் கோவிலுக்கு வந்து மழை பெய்ய பாடுகிறோம் என்றனர்.
சுந்தரர் மன்னனிடம் 'நான் பாடுகிறேன் மன்னா. நீங்கள் இந்தக் கோவிலுக்கு 12 வேலி நிலம் கொடுக்க வேண்டும்' என்று மன்னன் முன் ஒரு நிபந்தனை வைத்தார். மன்னனும் ஒப்புக்கொண்டான். சுந்தரர் திருப்புன்கூர் சிவலோகநாதரைப் போற்றிப் பதிகம் பாடினார்.
அவர் பாடப் பாட மழை வலுத்தது. பெய்து கொண்டே இருந்தது. நிற்கவேயில்லை. மன்னர் பயந்துவிட்டார். ' ஐயா சுந்தரரே! தயவு செய்து மழையை நிறுத்துங்கள். குளம் குட்டை எல்லாம் பெருகி கரை புரண்டு ஓடுகின்றது.
பெருமழை பெய்து ஊர் நாசமாகின்றது' என்று வேண்டினான். அதற்கும் சுந்தரர் பழைய பதிலையே கூறினார்.' சரி பதிகம் பாடி மழையை நிறுத்துகிறேன். இன்னொரு பன்னிரண்டு வேலி நிலம் இந்த கோவிலுக்கு கொடுங்கள் மன்னா' என்றார். வேறு வழி இன்றி மன்னரும் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சுந்தரர் சிவலோக நாதனை பற்றி பாடி மழையை நிறுத்தினார்.
கதை 3
நந்தன் கதை
நந்தனின் கதை சைவ சமய வரலாற்றில் மிக முக்கியமான கதையாகும். நந்தன் என்பவன் ஒரு விவசாயக் கொத்தடிமை. அவன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். அவனுடைய சொந்த ஊர் மேல ஆதனூர் ஆகும். ஒரே நிலக்கிழாரிடம் அவன் முன்னோர் காலம் தொட்டுப் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாக இருந்தவர்கள்.எனவே இவர்களுக்கென்று தனி உரிமை உணவு, உடை, உறையுள், வழிபாடு, விழா என்று எந்தப் பிரிவிலும் கிடையாது.
நந்தனுக்கோ நிலக்கிழார்கள் சிவபெருமானை வணங்குவதைப் பார்த்துத் தானும் போய் சிவபெருமானை வணங்க வேண்டும் என்று விரும்பினான். அவனுக்குத் தினமும் வயல் வேலைகள் இருந்ததனால் அவனால் வயலை விட்டு வெளியே எங்கேயும் போக இயலவில்லை. சரி நாளைக்கு போவோம் நாளைக்கு போவோம் என்று காலம் கடத்திக் கொண்டே வந்தான்.
அதனால் அவன் பெயரை திரு நாளைப் போவார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். நந்தன் ஒரு நாள் தன் ஆண்டையிடம் தான் சிதம்பரம் போக வேண்டும் என்று தன் விருப்பத்தை எடுத்துரைத்தான். அவர் உனக்கு எதுக்குடா சிதம்பரம்? என்று கேட்டுவிட்டு 'வயலில் அறுப்பு வேலையை முடித்துவிட்டு போ' என்றார்.
அறுப்பு வேலை என்பது ஒரு நாளில் முடியக்கூடியது அல்ல. பெரிய பரப்பளவு உடைய வயல் என்பதனால் அறுவடை முடிய ஒரு வார காலமாகும். நிறைய பணிகள் இருக்கின்றன. இனிப் போக இயலாது என்ற மனநிலையில் 'இறைவா நீ தான் எனக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு உறங்கி விட்டான்.
காலையில் நந்தன் உறங்கி விழித்த போது அறுவடை வேலை முடிந்து எல்லாம் மிகச்சரியாக இருந்தது. உடனே ஆண்டையிடம் போய் தெரிவித்தான். 'ஐயா அறுவடை வேலையெல்லாம் நேற்று யாரோ செய்து முடித்து விட்டார்கள் ஐயா. நான் கோவிலுக்கு போகலாமா? என்றான். அவனுடைய ஆண்டைக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
யார் செய்திருப்பார்கள்?' இவன் ஒருவனால் ஒரே இரவில் இவ்வளவு வேலையும் செய்ய முடியாது என்று அவருக்கு மனதில் அச்சமும் தயக்கமும் உண்டானது. 'சரி போ' என்று அவர் சொன்னதால் நந்தன் தில்லைக்கு நடை பயணமாகப் புறப்பட்டான்.
தில்லைக்குப் போகும் வழியில் இருந்த திருப்புங்கூர் சிவாலயத்தின் வாயிலில் நின்றான். வெளியே நின்று சாமியை பார்த்தான். சாமி தெரியவில்லை. நந்தி மறைத்து நின்றது. இங்கே வந்தும் திருக்காட்சி கிடைக்கவில்லையே என்று வருந்தி அழுதான். இறைவன் நந்தியிடம் சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று சொல்லி நந்தனுக்கு சிவலோக நாதர் சிவலோக பிராப்தி அளித்தார்
சிவ வழிபாடாக மாறிய நாக வழிபாடு
திருப்புன்கூர் சிவாலயம் வருவதற்கு முன்பு அங்கு நாக தேவன் கோவில் இருந்தது. நாகப் புற்றை மக்கள் வணங்கி வந்தனர். நாகப் புற்றின் அருகில் புற்று மணலில் பெண்கள் நடந்தால் அல்லது புற்று இருக்கும் மரத்தடியைச் சுற்றினால் புற்று மணல் பாதத்தில் அழுத்தி நரம்பின் முடிவுகளை ஊக்குவிக்கும்.
இப்பயிற்சியினால் கர்ப்பம் தரிக்காதவர்களும் கர்ப்பம் தரிப்பர். புற்றைச் சுற்றி புனுகு வைத்துப் பூசி லிங்க ரூபத்தின் மீது ஒரு குவளையைக் கவிழ்த்து வைத்து சிவபூஜை செய்து வந்தனர். நாகலிங்கம் சிவலிங்கமாக வணங்கப்பட்டு மக்கள் அருளாசி பெற்றனர்.
கோவிலுக்கு வந்து இறைவனை வணங்குவோருக்கு நாக தோஷம் விலகி விடும். இதனால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கி பக்தர்கள் மனைவி மக்களுடன் சுபிட்சமாக வாழ்வார்கள். இல்லறம் செழிக்க திருப்புன்கூர் வந்து வழிபடுவது சாலச் சிறந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |