குழந்தை பாக்கியம் அருளும் கடை ஞாயிறு திருவிழா.. எங்கே தெரியுமா?
இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய விஷயம் கூட மிகவும் கடினமாக மாறிவிடுகிறது. அதில் ஒன்றுதான் குழந்தை பாக்கியம். ஆரோக்கியத்தில் அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது, ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதத்தை சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்களுக்கு இறைவன் மட்டுமே நம்பிக்கையாக இருக்கின்றான். அந்த வகையில் வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை "கடை ஞாயிறு" என்கின்ற திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த விழாவில் சிம்ம குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதாவது மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களின் யார் பெரியவர் என்ற போட்டி நிலவிய பொழுது சிவபெருமானின் அடியையும் முடியையோ காண்பவர்களே பெரியவர் என்று சொல்லப்பட்டது.
அப்பொழுது பிரம்மதேவர் சிவனின் முடியை கண்டதாக பொய் சொல்லிவிட்டார். இதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பிரம்மதேவர் இத்தலத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் வழிபட்டு சாப விமோசனம் அடைந்ததாக இந்த கோவில் வரலாறு சொல்கிறது. மேலும், இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இக்குளத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த குளம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். அதாவது கார்த்திகை மாதம் நடைபெறுகின்ற "கடை ஞாயிறு" விழாவில் முந்தைய நாளான சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இந்த குளம் திறக்கப்படும். முதலில் ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடி விட்டு பின்பு இந்த கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
அதனை தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நீராடி ஈர ஆடையுடன் மடியில், பூ, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தில் உறங்குகிறார்கள். அப்போது அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி பழம் பூ பாலாடை கொடுத்து குழந்தை வரம் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
ஆதலால் நீண்ட நாள் குழந்தை வரத்திற்காக இறைவனை வேண்டி கொண்டிருப்பவர்கள் கட்டாயம் கார்த்திகை மாதம் நடக்கின்ற இந்த "கடை ஞாயிறு" திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானின் அருள் பெற்று வாழ்க்கையில் நல்ல மாற்றம் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |