மருத்துவச் சிறப்புடைய தோரணமலை முருகன் கோவில்
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடையம் என்ற ஊருக்கு அருகே தோரண மலையின் உச்சியில் உள்ள முருகன் கோவில் மருத்துவச் சிறப்புடையதாகும். 1193 படிகள் ஏறி இம்முருகனை தரிசிக்க வேண்டும்.
அகத்தியரும் தேரையரும் தங்கி இருந்த இடம் இத்திருத்தலமாகும். தேரையரே இக்கோவிலைக் கட்டி இங்கு முருகனைப் பிரதிஷ்டை செய்ததார் என்றும் கூறுவர். இது தேரையரின் புகழ் பாடும் தலமாகும். அவருடைய ஜீவ சமாதி இங்கே உள்ளது.
சித்தர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் முருகன் கோயில் கட்டும் மரபு 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இக்கோவிலில் சமூக பணிகள் பல நடைபெறுகின்றன. கொரோனா காலத்தில் இங்கு தினமும் அன்னதானம் வழங்கியது இதன் தனிச் சிறப்பாகும்.
இக்கோயில் கிரிவலத்துக்குச் சிறப்பு பெற்ற கோவில் ஆகும். கிரிவலம், பாத தரிசனம், முடி காணிக்கை, மருத்துவ சேவை போன்றன இக்கோயிலுக்கு பௌத்த சமயத்துடன் முன்பிருந்த தொடர்பை உறுதி செய்கின்றன. மேலும் மருத்துவ சேவை நடந்த இடம் என்பதை உறுதி செய்யும் வகையில் பல கதைகள் வழங்குகின்றன.
குகைக் கோவில் சிறப்பு
மலை உச்சியில் குகையில் குடையப்பட்ட கோவிலாக முருகன் கோவில் உள்ளது. அதற்கு எதிரே பழைய பத்திரகாளியம்மன் கோவில் ஒன்றும் உள்ளது.
தற்போது முருகன் கோவிலே முக்கியக் கோவிலாகவும் வடக்கு வாய்ச் செல்வியான அம்மன் கோவில் காளியம்மன் கோவில் என்ற பெயரில் துணைக் கோவிலாகவும் மாறிவிட்டது. மலைக்கோவிலில் உள்ள முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூரைப் பார்த்து இருப்பதால் திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலனை இங்கே தோரணமலை முருகனை வழிபட்டே பெறலாம்.
கருவறை நாதரின் தோற்றம்
மேலே மலைக் குகையில் உள்ள முருகன் இரண்டு கைகளுடன் ஒரே முகத்துடன் காட்சியளிக்கின்றார். இங்கு முருகனுக்கு ஆறுமுகம் 12 கைகள் போன்றவை கிடையாது. அவர் கையில் வேலும் மயில் வாகனமும் அழகுற உள்ளன. சாந்த சொரூபியாக முருகன் காட்சி தருகின்றார்.
காளியம்மனும் மலைப் பாதையும்
ஆதியில் தோரணமலையின் உச்சியில் காளியம்மன் கோவில் மட்டுமே இருந்ததாகவும் அக்கோவிலுக்கு செல்வதற்கான பாதை மிகவும் செங்குத்தாக இருந்ததனால் இப்போதிருக்கும் பாதை சீர் செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இங்கு சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் பெருவிரலை மட்டும் ஊன்றுவதற்கு சிறுகுழிகள் செத்துக்கப்பட்டிருந்தன. அக்குழியில் கால் பெருவிரலை ஊன்றி நடந்து மலை உச்சிக்கு சென்றனர். 16ஆம் நூற்றாண்டில் மலை உச்சியில் சித்தர்கள் வாழ்ந்த குகையில் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காளியம்மன் கோயில்
வடக்கு நோக்கி வடக்கு வாய்ச் செல்வியாக எழுந்தருளியிருந்த காளியம்மன் கோவிலுக்கு போவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சித்தர்கள் மட்டுமே மலையில் வசித்தனர்.அதனால் பொதுமக்கள் அங்கு சென்றதில்லை. இக்கோயிலுக்கு அருகில் மலைப்பாறையில் பாதம் காணப்படுகிறது. இந்த ஊருக்கு அருகே திருமலை முதலான சில ஊர்களில் அம்மனுக்கும் முருகனுக்கும் ஒரே மலை உச்சியில் கோயில்கள் உள்ளன.
சித்தர்களின் மருத்துவப் பள்ளி
தோரணமலை ஒரு காலத்தில் சித்தர்களின் இருப்பிடமாக இருந்தது இங்கு வாழ்ந்த தலைமைச் சித்தர்களிடம் பல சீடர்கள் மருத்துவம், ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் பயிற்சி பெற்றனர். அகத்தியர் தலைமை சித்தராகவும் தேரையர் அவருடைய பிரதம சிஷ்யராகவும் கருதப்படுகிறது.
கதை 1
அகத்தியர் இங்கு வந்த கதை
சித்தர்கள் கதைகள் பலவற்றில் அகத்தியரும் போகரும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். . சிவபெருமானின் திருமணத்திற்கு வந்த கூட்டம் கூட்டத்தால் உலகின் வடபகுதி தாழ்ந்தது. அதனை சரி செய்ய வேண்டி சிவபெருமான் அகத்தியரைத் தென்பகுதி நோக்கி அனுப்பினார்.
அப்போது அகத்தியர் தங்களின் திருமணத்தை காணாமல் நான் போக வேண்டி உள்ளதே என்று வருந்தினார். சிவபெருமான் 'நீ எங்கிருந்தாலும் உனக்கு என்னுடைய திருமணக் காட்சியை காண முடியும்' என்று வரம் அருளி அனுப்பினார்.
அவ்வாறு அகத்தியர் வந்து தங்கிய தலம்தோரண மலை ஆகும். அவ்வாறு தென் திசை வந்த போது இங்குள்ள மூலிகைகளைக் கண்டு இங்கேயே தங்கவிட்டார். பல ஊர்களுக்கு சொல்லப்படுகின்ற திருமணக் காட்சி கதை தான் இந்த மலைக்கும் சொல்லப்படுகின்றது. அகத்தியர் இங்கு தங்கி இருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட அகத்திய வைத்திய சேகரம் என்ற நூலை எழுதினார்.
கதை 2
தேரையர் கதை
காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலையில் குடைச்சல் ஏற்பட்டது. அவன் பல மருந்துகள் உட்கொண்டும் குணமடையாத காரணத்தினால் இங்கு அகத்தியரின் வைத்தியசாலைக்கு வந்தான். அகத்தியர் அவன் தலையைப் பிளந்து ஆராய்ந்த போது உள்ளே ஒரு தேரை ஒட்டிக் கொண்டிருந்தது.
அதை எவ்வாறு எடுப்பது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அருகில் இருந்த ஒரு சீடர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் தன் விரல்களை விட்டு சலம்பிக் கொண்டே இருந்தார். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை சட்டென்று வெளியேறி அந்த தண்ணீர் பாத்திரத்தில் குதித்து விட்டது.
தேரை தானே அகன்றதைப் பார்த்த அகத்தியர் மனம் மகிழ்ந்து அந்தச் சீடரை அன்று முதல் தேரையர் என்று அழைத்தார். பின்பு சந்தானகரணி என்ற மூலிகைச் சாற்றால் கபாலத்தை மூடிவிட்டார். இந்நிகழ்ச்சி நடந்த இடம் தோரணமலை ஆகும்.
தோரண மலையில் பௌத்த சமயங்கள் பரவிய ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இருந்தும் ஆட்கள் வந்து தனியிருந்து மருத்துவமும் சோதிடமும் படித்துச் சென்றனர். இங்கிருந்த அகத்தியரின் மருத்துவ பாடசாலை போல பின்பு இப்பகுதியில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி, கொல்லிமலை, சித்தர் குகை போன்ற மலைகளிலும் மருத்துவப் பாடசாலைகள் தொடங்கப்பட்டனவாம்.
முருகன் கோவில் பிரபலமானது எப்படி?
தற்போது வழிபாட்டில் இருக்கும் முருகன் கோயில் 1970 ஆம் ஆண்டு முதல் ஆதிநாராயணன் என்ப என்பவரின் நிர்வாகப் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றது. அவர் இக்கோவிலை பிரபலப்படுத்துவதற்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மாவட்டங்களின் திரையரங்குகளில் ஸ்லைடு போட்டார்.
இதனைப் பார்த்த சினிமா ரசிகர்கள் இக்கோவிலுக்குப் பெருங் கூட்டமாக வரத் தொடங்கினர். இக்கோவில் மக்களிடையே பிரபலமாயிற்று. இங்குப் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்தன. இங்கு வந்தவர்களுக்கு எல்லாம் ஆதிநாராயணன் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தார்.
உபசந்நிதிகள்
கிருஷ்ணன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபெருமான் என்று பல தெய்வங்களுக்கு சுதைச் சிற்பங்கள் உள்ளன. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் உற்சவமூர்த்தியாகிய பாலமுருகனுக்கு தனிக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அடிவாரத்தில் உற்சவர்
கோவில் உச்சிக்குப் போய் கருவறை நாதரான முருகனை வழிபடுவதற்கு பலருக்கும் உடல் வலிமையும் நேரமும் இல்லை என்ற காரணத்தினால் மலை அடிவாரத்திலேயே உற்சவமூர்த்திக்கு ஒரு கோவில் எழுப்பப்பட்டது.
அருகில் உப சன்னதிகள் அனைத்தும் எழுப்பப்பட்டன இங்கு வல்லப விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.மலை அடிவாரத்தில் உள்ள இச்சந்நிதிகளில் மூன்று வேளையும் பூசை நடக்கும். மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு மதியம் ஒருவேளை மட்டுமே பூசை நடக்கும்.
படிக்கட்டுகள்
தோரண மலை மீது ஏறிச் செல்வதற்கு நல்ல படிக்கட்டுகள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன. வழியில் மொட்டை பாறை இருக்கும் இரண்டு இடங்களில் மலையேறும் பக்தர்கள் தங்கிச் செல்ல மண்டபங்கள் கட்டி வசதி செய்துள்ளனர்.
வழியில் சுயம்புவாகத் தோன்றிய சிவன் சன்னதியும் உண்டு. தோரணமலை பெயர்க் காரணம் ராமநதி, சம்பு நதி என்று இரண்டு நதிகள் இம்மலையைச் சுற்றி தோரணமாக ஓடி வருகின்றன. இவ்விரு நதிகளுக்கும் இடையில் இருக்கும் இம் மலையை முற்காலத்தில் வாரணமலை என்று அழைத்தனர். இம்மலை யானை படுத்திருப்பதை போன்ற ஒரு தோற்றத்துடன் இருப்பதால் வாரணமலை என்று அழைக்கப்பட்டதாம்.
அபிஷேக சிறப்பு
தோரண மலையின் உச்சியில் இருக்கும் முருகன் குகைக் கோவிலின் இடது பக்கத்தில் ஒரு சுனை உள்ளது. அந்த சுனை நீரினை எடுத்தே முருகனுக்கு தினமும் அபிஷேகம் செய்கின்றனர். இம்முருகன் கோவிலுக்கு வடக்குப் புறத்திலும் ஒரு கை போகும் அளவுக்கு ஒரு சந்து உள்ளது.
அதற்குள்ளும் ஒரு சுனை இருப்பதாகக் கூறுகின்றனர். இம்மலையில் மட்டும் 64 சுனைகள் இருக்கின்றன. மலையில் உள்ள சுணைகளின் அருகில் சித்தர்கள் இருப்பதாகவும் அவர்கள் அரூபமாக இருப்பதால் அப்பகுதிக்குச் செல்லும் பக்தர்களின் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் கூறுகின்றனர்.
பாத தரிசனம்
தோரண மலை மேலே ராமர் பாதம் எனப்படும் ஒரு பாதம் உள்ளது.. அதற்கு அருகில் தான் பத்திரகாளி அம்மன் கோவில் தனியாக காணப்படுகின்றது.
நேர்த்திக்கடன்கள்
தோரண மலையின் அடிவாரத்தில் உள்ள சப்த கன்னியர் கோவிலுக்கு எதிரே உள்ள ஆலமரத்தில் பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் திருமண வரம் வேண்டியும் தொட்டிலையும் மஞ்சள் கயிறையும் கட்டி விட்டு செல்கின்றனர். தைப்பூசத்தன்று ஏராளமானோர் அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் இங்கு வருகின்றனர்.
மொட்டை எடுத்தல் காவடி தூக்குதல் போன்ற நேர்த்திக்கடன்களும் முருகனுக்கு நிறைவேற்றப்படுகின்றன. சப்த கன்னியர் கோயில் மரத்தில் பிள்ளை வரம் வேண்டி பெண்கள் வளையல்களையும் தொங்க விடுகின்றனர்.
விவசாயிகளின் நன்றிக்கடன்
தோரண மலையின் அருகே வாழும் விவசாயிகள் தங்களுடைய முதல் விளைச்சலைக் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்குகின்றனர். நெல் அறுவடை செய்தவுடன் புது நெல்லில் குத்தி எடுத்த பச்சரிசியைக் கொண்டு முருகன் கோவிலுக்குப் பொங்கல் வைத்து அங்கு வந்திருப்பவர்களுக்குப் பரிமாறி மகிழ்கின்றனர்.
நோய் தீர்க்கும் முருகன் தோரணமலை சித்தர் மலை என்பதால் இங்கு மருத்துவப் பணிகள் நிறைய நடந்த காரணத்தினால் இங்கு இருக்கும் முருகனும் நோய் தீர்க்கும் முருகனாக வணங்கப்படுகிறான். தீராத நோயையெல்லாம் தீர்க்கும் மறுத்துவத் தீர்த்தமாக இங்கே உள்ள சுனை நீர் வழங்குகின்றது.
அவை மருத்துவ மூலிகைகளின் சாரத்தை எடுத்து வருவதால் இச்சுனை நீரில் குளித்தவர்களுக்குத் தோல் நோய் மற்றும் மனநோய் தீர்ந்து. குணமடைகின்றனர்.
கோவில் கதை
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கலவன் என்பவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். தற்போதுள்ள மலைக்கோயில் அவர் கட்டிய கோவில் என்றும் கூறுகின்றனர். ஆனால் 1928 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முருகன் சிலை தான் மூலவராக மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
கதை 3
கூன் பாண்டியன் கதை
தோரணமலை ஒரு மருத்துவத் தலம் என்பதற்கு இன்னொரு கதையும் வழங்குகின்றது. ஒருமுறை மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் அகத்தியரிடம் தன்னுடைய கூனை நிமிர்த்துமாறு வேண்டினான். 'சரி அதற்கான மூலிகைகள் கிடைக்கும் பருவத்தில் அவற்றைப் பறித்து மருந்து தயாரித்துத் தருகின்றேன் என்று பதில் கூறினார். மழைக்காலம் வந்ததும் அதற்கான மூலிகைகள் துளிர்த்தன.
அவற்றைப் பறித்து வரும்படி செய்து தேரையரின் பொறுப்பில் மருந்தைக் காய்ச்ச ஏற்பாடு செய்தார். தேரையர் மருந்தைக் காய்ச்சிக் கொண்டு இருந்தார். அப்போது அகத்தியரைச் சந்திக்க சிலர் வந்திருந்தனர். அவர்கள் குடிசைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தேரையர் மருந்து காய்ச்சிக் கொண்டிருந்த இடத்தில் இருந்த வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்டார்.
தான் காய்ச்சிய மருந்தின் ஆவி பட்டுத் தான் வளைந்த மூங்கில் நிமிர்ந்தது என்பதை உணர்நதார். உடனே தேரையர் மருந்தை இறக்கி வைத்து விட்டு வேகமாக ஓடி வந்து அகத்தியரிடம் கூறினார். அகத்தியர் 'ஏன் மருந்தை இறக்கி வைத்தாய் அதற்குள் பக்குவம் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக் கொண்டே வந்தவர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைப் பார்த்து வியப்படைந்தார்.
சரியான பதத்தில்தான் இறக்கி இருக்கிறாய் என்று தேரையரை வாழ்த்தி விட்டு உடனே கூன்பாண்டியனை வரவழைத்து அம் மன்னனுக்கு இம்மருந்தைத் தடவவும் அவனது கூன் நிமிர்ந்தது. அன்று முதல் தேரையர் இவருடைய பிரதம சிஷ்யர் ஆனார்.
கதை 4
இராமர் பாதத்துக்கான கதைகள்
தோரண மலையில் உள்ள 'பாதத்தை' ராமர் பாதம் என்று நிறுவதற்காக பல கதைகளைச் சொல்கின்றனர். இம்மலையில் மாயமான குறிச்சி என்று ஒரு பகுதி உள்ளது. குறிச்சி என்றால் குறிஞ்சி நிலப்பகுதி. இம்மலையில் ஒரு பகுதியில் ஓடி ஆடிக்கொண்டிருந்த மான் ஒன்று ஒரு இடத்திற்கு வந்ததும் மறைந்து விட்டதாம்.
எனவே இப்பகுதியை 'மாயமான் குறிச்சி' என்கின்றனர். மற்றொரு இடம் 'குத்தரை பாஞ்சான்' எனப்படுகின்றது. இந்த இடத்தில் ஒரு மான் தலைகுப்புரக் கீழே பாய்ந்தது என்றும் அதனால் இவ்விடத்தை 'குத்தரை பாய்ஞ்சான்' என்று அழைப்பதாகவும் கூறுகின்றனர். 'பொத்தை' என்றால் போதியர் அல்லது போதிசத்துவருக்குக் கோயில் இருக்கும் மலைக் குகையாகும்.
போதியர் எனப்படும் பௌத்தத் துறவிகள் வணங்கிய இந்திர தேவனுக்குக் கோயில் இருக்கும் குகை 'இந்திரன் பொத்தை' எனப்படும். நாகர்கோவில் பகுதியில் 'இந்திரன் பொத்தை' என்று ஒரு மலை உண்டு. அங்கு ஒரு குகையில் இந்திரனுக்குத் தனிக் கோவில் உள்ளது.
அதுபோல தோரண மலையிலும் 'ஒக்க நின்றான் பொத்தை' என்ற இடம் உள்ளது. மாயமனைத் தேடி வந்த இராமபிரான் இந்த இடத்தில் வந்ததும் ஒரு சாய்வாக நின்று அந்த மானைப் பார்த்தார். அதனால் சாய்ந்து நின்ற இடம் என்ற பொருளில் ஒக்க நின்றான் பொத்தை அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
ஒக்க நின்றான் பொத்தைக்குக்
கீழே மூக்கறுத்தான் ஓடை உள்ளது. இதுவே இலட்சுமணன் சூர்ப்பனகையை மூக்கறுத்த இடம் ஆகும். எனவே அந்த இடத்திற்கு மூக்கறுத்தான் ஓடை என்று பெயர். இராமர் சீதையை தேடி வந்த இடம் மலைப்பகுதி என்பதால் நின்ற ஒரு இடத்தில் காணப்படுவதே அவரது பாதம் என்கின்றனர்.
அந்தப் பாதத்தை ராமர் பாதம் என்று சொல்வதற்காக இத்தனை துணைக் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 16ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு இராமாயண, மகாபாரதக் கதைகளை சொல்லப்.பழகியதால் அந்த இடங்களின் உண்மையான வரலாறு மறைந்துவிட்டது. இவ்ற்றைக் தேடி ஆராய்ந்து அறிவது இன்றுள்ள இளைஞர்களின் இன்றியமையாக் கடமை ஆகும்.
தைப் பூசத் திருநாள்
தோரணமலை முருகன் கோவிலில் மற்ற முருகன் கோவிலில் இருப்பதைப் போல வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் தைப்பூசத் திருவிழா பத்து நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது.
காப்பு கட்டியவுடன் கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து மகா ஸ்ரீ கந்த ஹோமமும் நடைபெறும். பின்பு வள்ளி தெய்வானை சமேதராய் முருகனுக்குத் திருக்கல்யாணம் நடைபெறும். தைப் பூசத்தன்று பக்தர்கள் பறவை காவடி எடுத்து வருவது, அலகு குத்தி வருவது போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். முருகன் நடராஜர் விநாயகர் போன்ற பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சமூக அக்கறை
இப்பகுதியில் இளைஞர்களுக்கு நல்ல நூலகம், உடற்பயிற்சி செய்வதற்கான பயிலகம் போன்றவை உள்ளன. இங்கு வந்து உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் நூல்கள் வாசிப்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது. சுமார் 2500 நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன.
தைப்பூசத்தின் போது விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் ராணுவத்தில் உயிர் துறந்த ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு செய்யப்படுகின்றது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மாணவர்களும் இளைஞர்களும் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
முன் வரலாறு
மடாலயங்கள் மலைகள் தோறும் வசித்து வந்த குறிஞ்சி நில மக்கள் ஆதிகாலத்தில் வீரர்களுக்கும் நடுகள் நட்டு வீர வழிபாடு செயதனர். பின்பு தங்கள் குலத்தின் தலைவனான முருகனுக்குக் கோவில் எடுத்து வழிபட்டனர். கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த பௌத்த சமயத்தினர் மலை உச்சியில் குறிப்பாக மூலிகைகள் நிறைந்திருக்கும் மலைப்பகுதிகளைத் தேடி அதன் உச்சியில் தாங்கள் தங்கியிருக்க மடங்களை அமைத்தனர்.
மலை அடிவாரத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஆலயங்களை எழுப்பினர். அதன் அருகில் மூலிகைத் தோட்டங்களை வைத்துப் பராமரித்தனர். தியானம் யோகம் செய்ய ஆலயம் என்ற தனி இடத்தையும் மருத்துவ சேவை செய்வதற்காக அதனருகில் மற்றோர் இடத்தையும் வைத்து பராமரித்தனர். மலைப்பகுதியில் இருந்த மூலிகை மருந்துகளும் மூலிகை சாரம் நிறைந்த சுனைநீரும் இவர்களின் மருத்துவப் பணிகளுக்கு அதிகம் பயன்பட்டன.
பாத தரிசனம்
பௌத்தர் தாம் இருக்கும் எல்லா நாடுகளிலும் புத்தரின் பாத வழிபாட்டைச் செய்கின்றனர். புத்தர் பாதம் என்ற பெயரில் பாறையில் பாதம் செதுக்கி வைத்து வழிபடுவது பௌத்தர்களின் தனிப்பட்ட வழிபாட்டு முறையாகும். இதுவே பின்னர் இராமர் பாதம் என்றும் ருத்ரபாதம் என்றும் ஆங்காங்கே வெவ்வேறு பெயர்களால் தொடர்கின்றது.
முடி காணிக்கை
பௌத்த துறவிகள் வைத்திருக்கும் மூன்று பொருட்களில் முக்கியமான ஒரு பொருள் சவரக்கத்தி ஆகும். தனக்குத்தானே அவர்கள் தலையை சவரம் செய்து கொள்வார்கள். எனவே இவர்களின் இருப்பிடங்கள் பின்னர் வைதீக தெய்வங்களின் இந்து தெய்வங்களின் கோவிலாக மாறிய போது அந்தந்த இடங்களில் மொட்டை அடிக்கும்.பழக்கம் தொடர்ந்தது. இதுவே முடி காணிக்கை கொடுக்கும் பழக்கமாகத் தொடர்கின்றது.
முருகனும் காளியம்மனும்
பெரும்பாலும் மலையில் பௌத்தமடங்கள் இருந்த இடங்களில் இவர்களின் இவர்கள் வெளியேறிய பிறகும் கூட முருகன் வழிபாடு தொடர்கின்றது. இவர்கள் வைத்து வணங்கிய போதி சத்துவர் அல்லது பெண் புத்தரான தாராதேவி கோவில்கள் முருகன் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில்களாகப் பெயர் மாற்றம் பெற்றுத் தொடர்கின்றன.
மலை உச்சியில் இருந்த பௌத்த துறவியின் உருவச் சிலைகள் பின்பு முருகனின் உருவச் சிலைகளாகப் போற்றப்பட்டன. தாரா கோவிலின் சிலைகளும் அம்மன் சிலைகளாக மாற்றம்.பெற்றன. வழிபாடுகள், நேர்ச்சைகள் நம்பிக்கைகள் தொடர்கின்றன.
மருத்துவ மலை
தோரண மலையில் நடந்த மருத்துவ சேவையும் கல்வியும் ஆராய்ச்சியும் பழைய நம்பிக்கையின் தொடர்ச்சியாக மருத்துவம் சார்ந்த மலைகளாகப் புதிய கதைகளோடு பின்னிப் பிணைந்துள்ளன. மறைந்து வாழ்ந்த சித்தர்கள் அவலோகதிஸ்வரர் என்ற பெயரில் வாழ்ந்து வந்த பௌத்த துறவிகள் அகத்தீஸ்வரர் என்று மாறின.
சைவ சமய பேரெழுச்சி ஏற்பட்ட பின்பு பௌத்தர்களும் சமணர்களும், மதம் மாறினர் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேறினார். ஒரு சில துறவிகள் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் சித்தர்கள் என்ற பெயரில் மறைந்து வாழ்ந்தனர்.
இவர்கள் பொதுமக்கள் கண்களில் தென்படுவதில்லை. எனவே சித்தர்கள் அரூபமாக இருக்கின்றனர் என்றும் நாய், பறவை, பாம்பு வடிவில் கண்களுக்குத் தென்படுவர் என்றும் நம்பிக்கை வளர்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலை நெடுகிலும் கேரளப் பகுதி வரை பௌத்த துறவிகள் மலைகளில் வாழ்ந்து மருத்துவம், ரசவாதம், ஜோதிடம், மாந்திரீகம், களரி கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை பரிபாஷைகள் மூலமாக வளர்த்தனர்.
பரிபாஷையின் பொருள் தெரியாத காரணத்தால் பின் வந்தவர்களால் இவற்றைத் தொடர இயலவில்லை. எனினும் கோவில் வழிபாடு போன்றவற்றில் பெயர்கள் மாறினாலும் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து வருகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |