2025 நவராத்திரி: கொலுவில் கண்டிப்பாக இந்த சிலைகளை வைக்க மறக்காதீர்கள்
நவராத்திரி என்பது அம்பிகையை வழிபாடு செய்வதற்கு உரிய முக்கியமான விழாவாகும். நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்டாட கூடிய ஒரு திருவிழா. அதாவது 9 நாட்களும் துர்கா தேவி, லட்சுமிதேவி, சரஸ்வதி தேவி ஆகிய முப்பெரும் தேவைகளை வழிபாடு செய்து நம் வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் சௌபாக்கியங்களையும் பெற உகந்த நாளாகும்.
மேலும் நவராத்திரி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கொலுதான். நவராத்திரி காலங்களில் பல வீடுகளில் கோவில்களில் கொலு படிக்கட்டுகள் அமைத்து சுவாமி சிலைகளை வைத்து பூஜைகள் நடத்துவார்கள். அந்த வகையில் நவராத்திரியின் பொழுது கொலு வைப்பவர்கள் கட்டாயம் கொலுவில் வைக்க வேண்டிய முக்கியமான சிலைகள் பற்றி பார்ப்போம்.
நவராத்திரி விழா பெண் சக்தியை போற்றிக் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான திருவிழா ஆகும். அதாவது அன்னை பராசக்தி அசுரர்களுடன் போரிட்ட ஒன்பது நாட்களை நவராத்திரி என்றும் அசுரரை வதம் செய்து வெற்றி பெற்ற பத்தாவது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகிறோம். நவராத்திரி ஒன்பது நாளுமே அம்பிகையின் 9 வடிவங்களை போற்றி வழிபாடு செய்வார்கள்.
இந்த நவராத்திரி புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் தொடங்கி அடுத்து வரும் ஒன்பது நாட்களையும் நவராத்திரி ஆக கொண்டாடுகின்றோம். இந்த 2025 ஆம் ஆண்டு நவராத்திரி செப்டெம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை உள்ளது. மேலும் நவராத்திரி திருவிழாவின் பொழுது வீட்டில் கொலு வைப்பவர்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது கொலு படிக்கட்டில் முதல் படியில் கலசம் ராஜராஜேஸ்வரி சிலையை வைக்க வேண்டும். அதற்கு அடுத்தபடிகளில் அஷ்டலட்சுமி பெருமாளின் தசாவதாரம் மற்றும் தெய்வங்களின் சிலைகள் அதற்கு அடுத்தபடிகளில் தேவர்கள், ரிஷிகள், மகான்கள் சிலைகள் அதற்கு கீழ் சாதாரண மனிதர்கள் கல்யாண நிகழ்வுகள் போன்ற பொம்மைகளும் கடைசியாக கீழ் உள்ள படிகளில் விலங்குகள் போன்றவைவைக்க வேண்டும்.
அப்படியாக கொலுவில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஒரு முக்கியமான சிலைகள் இருக்கிறது. அந்த வகையில் நவராத்திரி பொழுது வைக்க வேண்டிய முக்கியமான ஒன்று கலசம் அல்லது கும்பமாக இருக்கும் சிலை இடம் பெற வேண்டும். அதோடு சிவபெருமான் பார்வதி விநாயகர் முருகன் ஆகியோர் குடும்பமாக இருக்கும் சிலைகள், ராமர் சீதையுடன் பட்டாபிஷேக கோலத்தில் இருக்கும் சிலைகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு இந்த சிலைகள் எல்லாம் வைக்கும் பொழுது நம் வீடுகளில் மகிழ்ச்சி ஆனந்தம் நிம்மதி ஆகிவை கிடைக்கும். கூடுதலாக மங்களகரமான விஷயங்களை உணர்த்தக்கூடிய திருமண நிகழ்வுகள் குறிப்பாக பொம்மைகள் இடம்பெறுவதும் மகிழ்ச்சியை கொடுக்கும். இவ்வாறு நம் வீடுகளில் கொலு அமைத்து வழிபாடு செய்யும் பொழுது அம்பிகை தானாக நம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள்புரிவதாக நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







