திருவாரூர் ஆழித்தேரோட்டம் 2024 எப்போது?
2024ம் ஆண்டு ஆழித்தேரோட்டம் எந்த நாளில் வருகிறது என்று எல்லோருக்கும் கேள்வியாக உள்ளது, அதற்கான விடைதான் இந்த தகவல்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று சொல்லப்படக்கூடிய திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமிகள் திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக உள்ளது.
அதன்படி 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
வருகின்ற மார்ச் 21 ம் தேதி ஆரூரா! தியாகேசா !! எனும் முழக்கத்தோடு ஆழித்தேர் அசைந்தாடி நான்கு வீதிகளுக்கும் வர இருக்கிறது.
அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ஆழித்தேரின் வடம்பிடித்து இழுத்து தியாகராஜ சுவாமிகளின் அருளை பெற வேண்டுகிறோம்.
தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்த ஆழித்தேரின் மகத்துவத்தை மேலும் தெரிந்து கொள்வோமா?
திருவாரூரில் பிறந்தாலே முத்தி என்பர், சரி திருவாரூரில் பிறக்காதவர்கள் என்ன செய்வது? தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திருவாரூர் ஆழித்தேரின் வடம் பிடித்து இழுத்தாலே போதும், அவர்களுக்கும் முத்தி கிடைக்கும்.
இந்த முன்னோர்கள் வாக்கினை மதித்து இன்றளவும் பக்தர்கள் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொள்கின்றனர்.
தியாகமே உருவான தியாகராஜர் ஆழித்தேரில் அமர்ந்து வீதியுலா வரும் நேரத்தில் ஆரூரா தியாகேசா என்று கோஷமிட்டு வணங்கி பிறவிப்பயனை அடையும் பாக்கியத்தை பெறுவோமாக!!!