வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற 5 நாள் அனுமதி
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.
இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகின்றன. இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும்.
நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என அழைக்கப்படுகிறது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.
இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோவிலுக்கு செல்லும் வழியில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால், பாதுகாப்பு கருதி அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோசத்தை முன்னிட்டு வரும் 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரையிலான 5 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேறலாம்.
எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து வரக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மேலும் தற்போது கோடை மழை பெய்து வருவதால், அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |