முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இதற்கு வள்ளிமலை என்ற பெயர் வந்துள்ளது. இந்த ஊரிலேயே வள்ளி பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் வள்ளிமலை என அழைக்கப்படுகிறது.
9-ம் நூற்றாண்டில் உருவானதாக சொல்லப்படும் இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அருணகிரிநாதராலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த வள்ளிமலை முருகன் கோயில் குறித்து மிக விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தலம் அமைந்துள்ள இடம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து நீங்கள் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் 25 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இதற்கு வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகளில் பயணிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ராணிப்பேட்டையில் இருந்து செல்ல வேண்டுமானால் உங்களுடைய பயண தூரம் 18 கிலோமீட்டர் மட்டுமே. சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும்.
சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். இதனால் நீங்கள் எளிதாக வள்ளிமலை சென்று முருகன், வள்ளி, தெய்வானை அருளை பெற்று வரலாம். இப்போது தல வரலாற்றினை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு:
வேடர் குலத்தில் வளர்ந்து வந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளார். அவருடைய கன்னிப்பருவத்தில் தினைப்புனம் காக்கும் பணியினை வள்ளி செய்துள்ளார்.
அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பியதை அறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
பத்மாவதி அல்லது இசக்கியம்மன் வழிபாடு:
வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா. இங்கு குடவரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சமண சமயத்தினை குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். மகாவீரர் சமண சமயத்தினை உருவாக்கினார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அத்தகைய சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர்.
இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக இந்த தலத்தில் வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாக அமைந்துள்ள வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இசக்கியம்மனும், இசக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இசக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.
தனது வலது கையை அபய முத்திரையுடன், இடது காலின் மேல் வைத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
மலையின் அடிவாரத்தில் குமரி பருவத்தில் இருந்த வள்ளிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போகும் போது அங்கு செல்ல மறாந்துவிடாதீர்கள். நீங்கள் அங்குள்ள வள்ளியை காணும் போது அதில் ஒரு சிறப்பு உள்ளது தெரியுமா.
வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளி உண்டி வில், கவண் கல்லுடன் காட்சியளிக்கிறார். கோயிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் காட்சியளிக்கிறார். கோயிலின் முன் மண்டபத்தில் நவவீரர்களும் வள்ளியின் தந்தையான நம்பிராஜனும் உள்ளனர்.
வள்ளி மலையில் அமைந்துள்ள வனத்தில், வள்ளி பறவைகளை விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் வனத்தினுள் அமைந்துள்ளார்.
இதனை மக்கள் யானைக்குன்று என அழைக்கிறார்கள். வள்ளி மலையில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை எனப் பெயரிடப்பட்டுள்ளது. சரவண பொய்கையின் அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. முருகப்பெருமானை நீங்கள் வழிபட வேண்டும் என்றால் குளத்தை தொடர்ந்து அமைக்கப்பட்டுள படிகட்டுகளில் ஏறி சென்று தான் வழிபட முடியும்.
குடைவரை கோயில்:
அங்கிருந்து படிகளைக் கடந்து கோயிலுக்கு சென்றால் அங்கு நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் ஒரே கல்லில் குடைந்து கட்டப்பட்ட கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் நுழைவாயிலில் வள்ளி அம்மன் உருவம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
அவரை வணங்கி விட்டு கோயிலுக்கு நுழையும் போது சிறிது கவனம் தேவை. ஏனெனில் நுழைவாயில் மிகவும் தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்.
குறவர் வேடர் குலத்தில் வள்ளி வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. நுழைவாயிலை கடந்து உள்ளே சென்று தலையை நிமிர்ந்து பார்த்தால் மேலே இருக்கும் பாறைகள் நம் தலை மேல் விழுந்து விடுமோ என்ற அச்சம் எழாமல் இருக்காது. அச்சத்தினூடே நிற்கும் போது சித்தர்கள் வந்து செல்ல பயன்படுத்தும் வழியாக கோயில் கருவறைக்குள் ஒரு துளை உள்ளது.
இன்றளவும் சித்தர்கள் அங்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முருகன் கோயிலை குகையை குடைந்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி எழுந்தது என்பது தெரியவில்லை. பார்க்க அவ்வளவு அற்புதமாகவும் பிரம்மிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.
விருட்ச மரம்:
இந்த தலத்தில் விருட்ச மரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விருட்ச மரம் தனித்துவமானது என்றே கூற வேண்டும். வள்ளி மலையில் வள்ளியை முருகப்பெருமான் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜன் அங்கு வந்துள்ளார். வள்ளியின் தந்தையை கண்ட முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டார். இந்த மரமே தற்போது இந்த தலத்தின் விருட்சமாக உள்ளது.
ஆசிரமம்:
கோயிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால அங்கே சுவாமில் சட்சிதானந்தர் ஜீவ சமாதி அடைந்த ஆசிரமும் உள்ளது. அதன் அருகே உள்ள மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் அமைந்துள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சுனையினை சூரியன் காணாத சுனை என மக்கள் அழைக்கின்றனர்.
சூரியன் காணாத சுனை:
அந்த சுனையின் மீது சூரிய கதிர்களே விழுந்ததே இல்லை என்பதே அதற்கான காரணமாகும். இதற்கான புராணக்கதையை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம. வள்ளியை தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தில், முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிக்கிறது எனவும் உள்ள தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுள்ளார்.
உடனடியாக வள்ளியும் அதனை அளித்துள்ளார். அதனை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது முருக பெருமானுக்கு விக்கல் எடுத்ததால் வள்ளி ஓடோடி சென்று இந்த சுனையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு குடிக்க கொடுத்துள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க சுனை பல அற்புதங்களையும் செய்கிறது. திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் எனவேண்டிக்கொள்கின்றனர்.
விநாயகர் பாறை:
அந்த பகுதியில் அமைந்துள்ள பாறையானது யானையின் வடிவத்தை கொண்டுள்ளது. அதனை விநாயகர் என மக்கள் கூறுகின்றனர். வள்ளியை தன் பக்கம் கவர செய்ய உதவிய விநாயகர் தான் அந்த பாறையின் வடிவம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனை பக்தர்கள் கணேச கிரி எனக் கூறுகின்றனர்.
8 கால் மண்டபம்:
வள்ளி மலையில் அமைந்துள்ள 8 கால் மண்டபம் மக்களிடையே தனிச்சிறப்பை கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கா. வாங்க தெரிஞ்சுக்கலாம். வள்ளி மலைக் கோயிலில் புனரமைப்பு பணிகள் தொடங்கிய போது 8 கால் மண்டபத்தின் இருந்து ஒரு கல்லை அகற்றினர்.
அப்போது அதில் இருந்து வாசனை நிறைந்த புகை வெளியாகியுள்ளது. அதோடு அதற்குள் சித்தர்கள் தியான நிலையிலும் இருந்துள்ளனர். அதனால் 8 கால் மண்டபத்தினை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இப்போதும் அங்கே சித்தர்கள் தியானம் செய்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
என்ன ஆச்சரியமா இருக்கா. நீங்களும் வள்ளி மலை கோயில் போனால் 8 கால் மண்டபத்தை மறக்காம போய் பாருங்க.
கோயில் நேரம்:
வள்ளிமலை கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் மாலை 4 மணிக்குள் நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம்.
கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது என்பது கூடுதல் தகவல். அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டீர்களா.
வள்ளி வாழ்ந்த இடத்தையும் முருகன் வள்ளியை காதல் செய்த இடத்தினையும் காணும் ஆவல் உங்களுக்குள் இப்போது கண்டிப்பாக எழுந்திருக்கும். நீங்களும் வள்ளி மலை கோயில் சென்று முருகப்பெருமான் அருளை பெற்று வாருங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |