திருப்பதி கோயிலுக்கு இணையான தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்
காஞ்சிபுரத்தின் வைணவத் தலங்களில் வரதராஜ பெருமாள் கோயில் அல்லது திருக்கச்சி மிக முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் 43வது திவ்ய தேசமாக விளங்கும் இக்கோயில், ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகிய தலங்களுக்கு இணையாக பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கலை மற்றும் ஆன்மிகச் சிறப்புக் கூறிய திராவிடக் கட்டிடக்கலைக்கு மகத்தான சான்றாகத் திகழ்கிறது. இப்போது இந்தத் தலத்தின் வரலாற்றினையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.

வரலாறு மற்றும் தொன்மங்கள்:
இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஒரு சிறிய குன்று போன்ற மேட்டில் அமைந்துள்ளது. இது வட்டகிரி அல்லது அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. "அத்திகிரி" என்ற பெயர் யானை வடிவிலான மலை மீது பெருமாள் காட்சியளிப்பதாக ஐதீகப்படுகிறது.
ஒரு நாளின்படி பிரம்மதேவர் சிருஷ்டிக்கு வரம் வேண்டி இங்கே யாகம் செய்யத் தொடங்கினார். அப்போது சரஸ்வதி தேவி கோபத்தால் யாகத்தை அழிக்க வேகமாகப் பெருக்கெடுத்து ஓடினார். வெள்ளத்தை தடுத்து, பிரம்மனுக்கு அருள்புரிந்து, யாகத்தை பூர்த்தி செய்ய உதவினார்.இந்த காரணத்தால் இங்கு உள்ள மூலவர் வரதராஜர் அதாவது வரம் அளிக்கும் அரசன் எனப் பெயர் பெற்றார்.
ஆதிவரதர் மற்றும் பல்லி தோஷம்:
இன்று மூலவராக வரதராஜர் இருந்தாலும் மிகவும் பிரபலமானவர் அத்திவரதர் ஆவார். பிரம்மாவின் யாகத்தில் இருந்து தோன்றிய பெருமாளின் திருவுருவத்தை பிரம்மன் அத்தி மரத்தால் சிலை வடித்து இங்கு பிரதிஷ்டை செய்தார். இந்த அத்தி வரதர் தற்போது திருக்குளமான அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் சுவாமி சன்னதிக்குப் பின்னர் உள்ள மேற்கூரையில் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பல்லி உருவங்கள் உள்ளன.
கௌதம முனிவரின் சாபத்தால் பல்லியாக மாறிய சீடர்கள் இருவரும் இங்கு வந்து வரதராஜரை வணங்கி மோட்சம் பெற்றனர். அவர்களை தரிசிப்போர் சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று பெருமாள் அருளினார்.

ஆட்சிப் பங்களிப்புகள்:
வரலாற்றுச் சான்றுகளின்படி இக்கோயில் முதல் பல்லவ மன்னனான நந்திவர்மன் II ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது 1053-ல் சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, குலோத்துங்க சோழன் I மற்றும் விக்ரமச்சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் விரிவுப்டுத்தப்பட்டது.
பின்னர் 14ஆம் நூற்றாண்டில் சுவர்களும் கோபுரங்களும் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசின் மன்னர்கள் குறிப்பாக கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்குப் பெரும் செல்வத்தை வழங்கி பல அற்புதமான மண்டபங்களைக் கட்டி அதன் கட்டிடக்கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.
கட்டிடக்கலை சிறப்பு:
வரதராஜ பெருமாள் கோயில் திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
கோபுரங்கள்:
இக்கோயில் வளாகம் 23.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஏழு அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக இங்குள்ள கிழக்கு கோபுரம் முதன்மை வாயிலாக உள்ள மேற்கு கோபுரத்தை விட உயரமானது.
பிரகாரங்கள் மற்றும் சன்னதிகள்:
இக்கோயில் ஆழ்வார் பிரகாரம், மடைப்பள்ளி பிரகாரம், திருமலை பிரகாரம் என மூன்று வெளிப் பிரகாரங்கள் கொண்டது. மேலும் இங்கு 32 சன்னதிகள், 19 விமானங்களும், 389 தூண்கள் கொண்ட மண்டபங்களும் உள்ளன.
நூறு கால் மண்டபம்:
இது விஜயநகரக் கட்டிடக்கலைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். இங்குள்ள 96 தூண்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசக் காட்சிளை அற்புதமாகச் செதுக்கிக் காட்டுகின்றன. ரதி மன்மதன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் போன்ற சிற்பங்கள் மிகவும் குறிப்பிடதக்கவை.

சிற்பக்கலை:
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி இக்கோயிலின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாகும். மண்டபங்களில் உள்ள குதிரை மற்றும் யாளி சிற்பங்கள் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. பிரதான சன்னதியின் மீது உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் என்றும், தாயாரின் சன்னதியின் மீதுள்ள விமானம் கல்யாணகோடி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.
தனி சிறப்புகள்:
திவ்யதேசம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விசேஷமானது. இங்குள்ள சுதர்சன ஆழ்வார் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் பன்னிரண்டு சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரை வழிபட்ட பிறகே மூலவர் வரதராஜப் பெருமாளை தரிசிக்கும் வழக்கம் இங்கு உள்ளது.
தங்க மழை:
ஒரு ஏழையின் திருமணத்திற்காக ஸ்ரீ வேதாந்த தேசிகர் இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கியபோது, தாயாரின் சன்னதியில் தங்க மழை பொழிந்ததாக ஐதீகம்.
ராபர்ட் கிளைவ்:
அதிகாரி ராபர்ட் கிளைவ் ஆணவத்தை அடக்கி அவரைத் தன் பக்தனாக்கிய நிகழ்வு இக்கோயிலுடன் தொடர்புடையது. இன்றும் பெருமாளுக்கு ராபர்ட் கிளைவ் வடித்த மகர கண்டிகை சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகிறது.
கருட சேவை:
வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இச்சமயம் ஒரு வினாடி நேரம் திருக்குடைகளால் பெருமாளை மறைக்கும் “ஒரு வினாடி தரிசனம்” என்ற தனித்துவமான வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது. இது சோளிங்கரில் வாழ்ந்த தொட்டாச்சாரியாருக்காக பெருமாள் நிகழ்த்திய அற்புதம் என நம்பப்படுகிறது.

திருவிழாக்கள்:
இங்கு ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் மிகவும் பிரசித்தி பெற்ற சில திருவிழாக்களைப் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி பிரமோற்சவம்:
இதுவே கோயில் முக்கியமான மற்றும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் 10 நாள் திருவிழாவாகும். இது பொதுவாக வைகாசி மாதத்தில் நடை பெறும்.
அத்திவரதர் தரிசனம்:
இந்த ஆலயத்தின் மூலவர் அத்திமரத்தால் ஆனவர். இந்த அத்தி வரதர் சிலை 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஆனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி, 48 நாட்களுக்கு பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.
இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலத்தி்லும் சேவை சாதிப்பார். பிற முக்கிய விழாக்கள் புரட்டாசி நவராத்திரி உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும்.
மாசி மாத தெப்ப உற்சவம் பிப்ரவரி அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும். பங்குனி உத்திரம் 7 நாட்கள் நடைபெறும். வரதராஜ பெருமாள் கோயில் அதன் பழங்கால வரலாறு, வியக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீகப் பெருமைகள் ஆகியவற்றால் தமிழகத்தின் முக்கிய சமயத் தலங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |