வரலட்சுமி விரதம்: இன்று வாங்க வேண்டிய முக்கியமான பொருட்கள்
இந்து மதத்தில் பல விரதங்கள் இருந்தாலும் வரலட்சுமி விரதம் மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த விரதமாக பார்க்கப்படுகிறது. பெண்கள் பிற விரதங்கள் இருக்க முடியவில்லை என்றாலும் கட்டாயம் வரலட்சுமி விரதம் இருந்து வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்படியாக, பலரும் வீடுகளில் விசேஷ வாழிபாடு மேற்கொள்வார்கள். அதோடு, இன்றைய தினம் வீடுகளில் சில முக்கியமான பொருட்கள் வாங்கி வாழிபாடு செய்தால் நாம் இன்னும் அதீத பலன் பெறலாம் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
இந்த வரலட்சுமி விரதமானது வீடுகளில் மூன்று வகையான முறையில் வழிபாடு செய்யப்படுகிறது. சிலர் வீடுகளில் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் மஹாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்தை மனை மீது எழுந்தருள செய்துவழிபாடு செய்வார்கள். சிலர் மிக எளிமையான முறையில் பூஜை அறையில் மஹாலட்சுமி தாயாரின் படத்திற்கு பூக்கள், மற்றும் மாலை சாற்றி நைவேத்தியம் படைத்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
இவ்வாறாக அவர்கள் வசதிக்கு ஏற்ப வீடுகளில் வழிபாடு செய்வதுண்டு. இந்த மூன்றில் கலசம் வைத்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது ஆகும். கலசத்தில் அம்பிகையின் முகம் பதித்து, புதிய வஸ்த்திரம் மற்றும் நகைகள் கொண்டு அலங்காரம் செய்து மேற்கொள்ளப்படும் வழிபாடு ஆகும்.
இந்த வழிபாட்டிற்கு முதல் நாள் அலங்காரம் செய்து மஹாலட்சுமி தாயாரை எழுந்தருளச் செய்து, தொடர்ந்து இரண்டு நாட்கள் வழிபாடு மேற்கொண்டு மூன்றாவது நாள் புனர்பூஜை செய்து, வரலட்சுமி விரத வழிபாட்டினை நிறைவு செய்வார்கள்.
அதோடு வரலட்சுமி விரத நாளில் தெரிந்த மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களை வீடுகளுக்கு அழைத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பூஜைகள் செய்தும் மஹாலட்சுமி தாயாரின் பாடல்கள் பாடியும் வழிபாடு செய்வார்கள். அதோடு, வழிபாட்டின் இறுதியில் வீட்டிற்கு வந்த பெண்களுக்கு வளையல் குங்குமம் மற்றும் பிரசாதம் புடவைகள் கொடுத்து பூஜைகள் நிறைவு செய்வார்கள்.
அப்படியாக, பலராலும் இந்த கலசம் வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் வழிபாடு செய்வது முடியாத சூழ்நிலையாக இருக்கலாம். அவர்கள் இந்த கலசம் வைத்து வழிபாடு செய்ததற்கு இணையாக அருள் பெற சில வழிபாடுகள் செய்யலாம்.
அதாவது இன்றைய நாளில் வீடுகளில் சில முக்கிய பொருட்கள் வாங்கி அதை மஹாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்யவேண்டும். அதற்கு, இன்றைய நாளில் நெல்லிக்காய், பச்சரிசி, சர்க்கரை வாங்கி அதை அம்மாளின் பாதத்தில் வைத்து பூஜைகள் செய்யவேண்டும்.
இந்த பொருட்கள் தவிர மஞ்சள் குங்குமம் வாங்கி வைத்தும் வழிபாடு செய்யலாம். இந்த பொருட்கள் எல்லாம் மஹாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்கள் ஆகும். அதனால் இந்த பொருட்கள் வைத்து வழிபாடு செய்யும் பொழுது நம் வீடுகளில் செல்வம் பெருகி பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







