திருமண வரமருளும் வெள்ளலூர் சிவன் கோயில்
கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே சிவகாமி சுந்தரியுடன் உடனுறை தேனீஸ்வரர் கோவில் உள்ளது. சிவன் கோவிலுக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்ட இத்திருத்தலம் பாடல் பெற்ற தலம் அன்று.
ஆனால் கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே இக்கோவில் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்று கோயில் முன் வாயிலில் உள்ளது. திருமணத்தடை உள்ளவர்களுக்கு சிவபெருமானுக்கு அணிவித்த மாலையும் அம்பாளுக்கு அணிவித்த மாலையும் அணிவிக்கப்படுவதால் இத்திருத்தலம் திருமணத் தடை நீக்கும் திருத்தலமாக விளங்குகின்றது
இங்குக் கோவில் இருந்த இரண்டாம் நூற்றாண்டில் இக்கோவில் சிவன் கோவிலாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இங்குத் தலவிருட்சமாக விளங்கும் வன்னி மரம் 800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துக் கூறுகின்றனர். எனவே இக் கோவில் சிவன் கோவிலாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டு வன்னி மதம் நடப்பட்டிருக்கும்.
இங்கு ஏற்கெனவே இருந்த நாகர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த மந்தார மரமும் தொடர்ந்து ஸ்தல விருட்சமாகத் தொடர்கிறது. இத்தலத்தில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதால் இவ்வூர் சங்க காலத்தில் வாணிகம் சிறப்பாக நடைபெற்ற ஊர் என்பது உறுதியாகிறது. இங்கு ரோமானிய வணிகர்கள் வந்திருந்து வியாபாரம் செய்துள்ளனர்.
இவ்வூரில் கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு பின்பு பௌத்த சமயம் பரவிய காலத்தில் யானை முகம் கொண்ட கௌதம புத்தர் சிலை, பிரமன், இந்திரன் ஆகியோர் வணங்கப்பட்ட மடாலயம் இருந்துள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்பு சைவப் பேரெழுச்சி ஏற்பட்ட காலத்தில் இவ்விடத்திலிருந்து பௌத்த மடாலயம் அழிக்கப்பட்டு புதிய தலபுராணக் கதையுடன் தேனீஸ்வரர் கோவில் உருவாக்கப்பட்டது.
தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு கரிகாட்சோழன் காலத்தில் நந்தா விளக்கேற்ற 20 கழஞ்சு பொன் தானமாக கொடுத்த கல்வெட்டு செய்தி உள்ளது. இன்னொரு கல்வெட்டில் இறைப்பணிக்காக சக்தி அரையன் என்பவன் 12 கழஞ்சு செம்பொன்னைத் தானமாக வழங்கிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
தேனீஸ்வரர் கோவிலின் கோபுரத்தில் லிங்கத்துக்குள் நடமாடும் நடராஜர் உருவம் கோவிலின் அலங்கார வாயில் வளைவில் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்திலும் நடராசர் உருவம் காணப்படுகின்றது.
துவாரக பாலகர்களும் நடனத் தோற்றத்தில் காணப்படுகின்றனர். இங்கு வன்னி மரமும் ஐந்து இதழ் மலர் மலரும் மந்தார மரமும் தல விருட்சங்களாக உள்ளன.
நாக தோஷம் நீக்கும் ஸ்தலம்:
மந்தார மலர்களை சிவபெருமானுக்கு வைத்து வழிபட ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களால் உண்டான நாக தோஷம் விலகும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பேற்றில் இருந்த சிக்கல்கள் விலகும்.
கருவறைத் தெய்வங்கள்:
தேனீஸ்வரரும் சிவகாமியம்மையும் ஒரே பிரகாரத்தில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். சிவபெருமான் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார் அவருக்கு இடதுபுறம் சிவகாமசுந்தரி அதற்கு அருகே சங்கரநாராயணர் சன்னதிகள் உள்ளன. காமிகாகமம் முறையில் காலையிலும் மாலையிலும் இங்கு இருவேளை பூசை நடைபெறுகின்றது.
திருமணத் திருத்தலம்:
இங்கிருக்கும் விநாயகரை கல்யாண விநாயகர் என்று அழைப்பதில் இருந்தே இத்தலம் கல்யாணத்திற்கு உகந்த தலம் என்பதை புரிந்து கொள்ளலாம் திருமணம் தடைபடும் இளைஞர்கள் இக்கோவிலுக்கு வந்து மாலை மாற்றி சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும்
ஆண்கள் சிவகாமி அம்மை சன்னதிக்கு வந்து பரிகார பூஜை செய்து கொள்ளலாம் திருமணம் ஆகாத இளைஞரின் ஜாதகத்தை வாங்கி அம்மனின் திருப்பாதங்களில் வைத்து வைத்து திரும்பவும் இளைஞரிடம் கொடுத்து விடுவார்
அம்மன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை குருக்கள் இளைஞரின் கழுத்தில் அணிவிப்பார் பின்பு இளைஞர் அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து தினமும் வணங்கி வர வேண்டும் திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த மாலையை எடுத்துக் கொண்டு வந்து இங்கே கொடுத்து விட வேண்டும்
மீண்டும் அர்ச்சனை ஆராதனைகள் செய்து சாமியையும் அம்பாளையும் வணங்கி செல்ல வேண்டும் இதுபோலவே திருமணம் ஆகாத பெண் சிவன் சன்னதியில் வந்து ஜாதகத்தை கொடுத்து வணங்கி நின்றால் நிற்க வேண்டும்
குருக்கள் சிவபெருமானுக்கு அணிவித்த மாலையை இந்த பெண்ணுக்கு அணிவிப்பார் அதன் பிறகு இந்தப் பெண்ணும் மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜித்து வளர திருமணம் விரைவில் நடைபெறும் மணமகனுடன் கோவிலுக்கு வந்து கோவில் மாலையை திரும்ப கொடுத்துவிட்டு சாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து இறையருளை பெற வேண்டும்
இத்தகைய பரிகார பூஜைகள் எங்கு தொடர்ந்து நடைபெறுவதால் இக்கோவில் திருமண தடை உள்ளவர்களுக்கு தடையை நீக்கி திருமண பாக்கியம் அருளும் திருத்தலமாக விளங்குகின்றது
திருச்சுற்றுத் தெய்வங்கள்:
தேனீஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முந்தியவர். அறுபத்து மூவர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, விநாயகர், திருமுருகன் சன்னதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
இவை தவிர துர்க்கை அம்மன், கால பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர் பதினான்காம் நூற்றாண்டில் இங்கிருந்த முருகன், தக்ஷிணாமூர்த்தி சிலைகள் இஸ்லாமிய மன்னர்களால் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. பின்னர் புதிய சிலைகள் செய்து வைக்கப்பட்டது.
காலபைரவர் வழிபாடு:
இக் கோயிலில் தனிச் சன்னதி கொண்டுள்ள காலபைரவர் வழிபாடும் கல்யாண விநாயகர் வழிபாடும் பௌத்தக் கோயில் இங்கிருந்த காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் சிறப்பு வழிபாடுகள் ஆகும். காலபைரவர் இங்கு கால பைரவர் உற்சவமூர்த்தி ஆகவும் விளங்குகின்றார் கால பைரவர் சப்பரம் கோவில் சுற்றி வருவது சிறப்பு வழிபாடு ஆகும்.
கதைகள்:
தேனீஸ்வரர் கோவிலுக்குரிய தலபுராணக் கதை இங்குள்ள சிவன் காமதேனுவால் வழிபடப்பட்டதவன் என்கிறது. இன்னொரு கதை தேனீக்கள் தேனால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ததால் இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் தேனீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றது.
கோவிலின் தொன்மம்:
தேனீச்வரர் கோவிலில் உளி கொண்டு செதுக்காத தெய்வச் சிலைகள் உள்ளன. இவையும் காலத்தால் மிகவும் பழையன. வலம்புரி விநாயகராக இங்குக் காட்சி தரும் கல்யாண விநாயகர், நந்தீஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர் ஆகிய மூவரின் சிலைகளும் உளிகொண்டு செதுக்கப்படாதவை கற்களால் தேய்த்து உருவாக்கப்பட்டவை.
ஒரு கல்லை இன்னொரு கல்லைக் கொண்டு தேய்த்து தமக்கு ஏற்ற உருவத்தைக் கொண்டு வருவது சிலை செய்யும் முறைகளில் ஒன்றாகும். இச் செய்முறை கிறிஸ்து பிறப்புக்கு முற்பட்ட காலத்தில் உள்ளதாகும். கல் ஆசாரி இல்லாமல் கல்லாலும் மண்ணாலும் சிலை செய்யும் காலத்தில் உருவான சிலைகள் இவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சூரிய தோஷம் நீக்கும் தலம்:
தேனேஸ்வரர் கோயில் பாஸ்கர சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குச் சித்திரை மாதம் முதல் நாள் அன்று கருவறை நாதரை சூரியன் தன் பொன் ஒளிக் கரங்களால் தழுவி வணங்கி மகிழ்கின்றார்.
அன்றைக்கு சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பட்டுப் படர்ந்து மறையும். எனவே ஜாதகத்தில் சூரிய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் உள்ளவர்கள் முற்பிறவி கர்மாவால் இப்பிறவியில் துன்புறுவோர் இக்கோவிலுக்குச் சித்திரை முதல் நாள் வந்திருந்து சூரிய ஒளியால் சிவபெருமான் வணங்கப்படுவதைக் கண்டு தோஷ நிவர்த்தி பெறலாம்
அவிட்ட நட்சத்திர தலம்:
அவிட்ட நட்சத்திரத்திற்கான கோவிலாகவும் தேனுபுரீஸ்வரர் கோவில் வழங்குகின்றது. அவிட்ட நட்சத்திரத்துக்காரர்கள் தங்கள் வாழ்வில் வேலைக்கு சேர்தல், திருமணம் செய்தல், புது வீடு கட்டுதல் போன்ற முக்கிய சம்பவங்களுக்கு முன்பு இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து போவது அவர்களின் புதிய முயற்சிகளில் தடங்கல்கள், தடைகளை நீக்கி பலன்களை அதிகமாக்கும்.
பஞ்சலிங்கேஸ்வரர்:
இக்கோவிலில் இருக்கும் பஞ்சலிங்கேஸ்வரர் எனப்படும் லிங்கத்தில் ஐந்து கோடுகள் காணப்படுகின்றன. இக்கோவிலில் பௌர்ணமி அன்று 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
சிறப்பு வழிபாடுகள்:
அனைத்துச் சிவன் கோவில்களிலும் நடக்கும் வழிபாடுகள் இங்கும் நடைபெறுகின்றன. மாதந்தோறும் இரண்டு பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று சோமவார பூஜை நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி போன்ற முக்கிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன
காலபைரவர் சப்பரம்:
தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு மாலை நான்கரை முதல் 6 மணிக்குள் சிறப்பு வழிபாடுகள் உண்டு. காலபைரவர் சப்பரத்தில் கோயிலுக்குள் திருவீதி வலம் வருவார்.
அன்னதான சிவபுரி:
ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. இங்கு நேர்த்திக்கடன் ஆக அன்னதானம் செய்யப்படுவதால் இவ் ஊரை அன்னதான சிவபுரி என்றும் அழைக்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |