3000 ஆண்டு பழைய கொழிஞ்சியப்பர் முருகன் கோவில்
கொழிஞ்சியப்பர் கோவில் விருத்தாச்சலத்திற்கு இரண்டு கிலோ அருகில் மணவாள நல்லூர் என்ற ஊரில் உள்ளது. இம் முருகன் கோவில் தமிழ்ச் சமய வரலாற்றில் நடு கல் வழிபாடு தொட்டு இன்றைய வைதீகக் கடவுளர் வழிபாடு வரை சுமார் 3000 ஆண்டுகால நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது.
கிமு முதலிரண்டாம் நூற்றாண்டுகளில் நடு கல் வழிபாட்டுத் தலமாக இருந்து பின்பு 3,4 நூற்றாண்டுகளில் பௌத்த வழிபாட்டுத்தலமாகி 7,8 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பௌத்தம் மறைய தொடங்கியதும் பௌத்தப் பூசாரிகள் ஊர்க் கோடாங்கிகளாக மாறி அவர்கள் வழக்குத் தீர்க்கும் மந்தையாக பொதுவிடமாகவும் கோயிலும் கோயில் முற்றமும் இருந்தன.
இக்கோயில் பின்னர் தோன்றிய சைவ எழுச்சியினால் இன்றைக்குக் கொளஞ்சியப்பர் கோவிலாகப் பரிணாமம் பெற்றுள்ளது. (பௌத்தர்கள் தங்கள் வழிபடு தெய்வங்களை ஐயனார், நாகர் என்று -அர் என்னும் மரியாதை பன்மை விகுதியிட்டு குறிப்பிடுவர்.
அவ்வாறே கொழுஞ்சியப்பரும் -அர் விகுதியுடன் சுட்டப்படுவது குறிப்பிடத்தக்கது) இக்கோவிலில் 3000 ஆண்டு காலமாக தெய்வ சக்தி தொடர்ந்து செயல்படுவதால் இங்கு வந்து வழிபடும் மக்களுக்கு அவர்களின் நம்பிக்கை பொய்யாகாமல் நன்மையும் உயர்வும் கிடைக்கின்றது.
எனவே தான் இக்கோவில் மற்ற முருகன் கோவில்களை போல அல்லாது ஒரு நாட்டுப்புற தெய்வக் கோவிலைப் போல செயல்படுகின்றது
கொளஞ்சியப்பர்
கொளஞ்சியப்பர் கொழுஞ்சி என்ற தாவரத்தின் பெயரால் அழைக்கப்பெறுகிறார். கொழுஞ்சி பிங்க் நிற மிகச் சிறிய பூக்களுடன் மழைக்காலத்தில் ஆங்காங்கே பூத்திருக்கும் குறுஞ்செடியாகும். நாட்டு மருத்துவத்தில் கொழுஞ்சி அதிகம் பயன்படுகிறது.
இங்கு கொழுஞ்சி மருத்துவப் பயன்பாட்டுக்காக (பௌத்த துறவிகளால்) முனிவர்களால் அதிக அளவில் வளர்க்கப்பட்டு இருக்கும். கொழிஞ்சி அதிகமாக வளர்ந்து இருக்கும் பகுதியில் சுயம்புவாக தோன்றிய முருகன் கொழிஞ்சி அப்பர் எனபட்டார்.
கோயில் அமைப்பு
மூலஸ்தான விமானத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. பளிங்குச் சுவர்களால் ஆன இக்கோவிலில் ஐந்தடுக்கு கோபுரம் உள்ளது. கருவறையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி இருக்கிறார்.
உருவ அமைப்பு
கொளஞ்சியப்பர் கோவிலில் முருகன் சிலையோ சிவலிங்கமோ இல்லை. மூன்றடி உயரமுள்ள கல்லுக்குத் தங்க மகுடமும் வெள்ளியால் செய்யப்பட்ட கண்களும் பொருத்தியுள்ளனர். முருகன் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் இக்கல்லின் கீழே உள்ளது.
இதுவே முருகப்பெருமானாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. சிலர் நடு கல்லை பலி பீடம் என்றும் சிவன் என்றும் குறிப்பிடுகின்றனர். கீழே ஸ்ரீ சக்கரத்தை முருகன் என்கின்றனர்.
சுயம்பு முருகன்
முருகனுக்கு மகுடம் சூட்டி வெள்ளி கண் வைத்து அருகில் வேல் சாற்றி அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். இவரே கொலஞ்சியப்பர் ஆவார். பல நாட்களாக ஒரு பசு ஒரே இடத்தில் பால் சொரிந்து வருவதை கண்ட ஊர்மக்கள் அங்கு சென்று அகழ்ந்து பார்த்த போது இந்த நடு கல் கிடைத்தது.
அதை எடுத்து நாட்டு வைத்து தெய்வமாக வணங்கி வந்தனர். பசு பால் சொரிந்த அந்த கல் வடிவமே கருவறையில் சிவரூபமாகக் காட்சியளிக்கின்றது.
பரிவார தெய்வங்கள்
கொழுஞ்சியப்பர் கோயிலில் இருக்கும் பரிவார தெய்வங்கள் சைவ வைணவ கோயில்களில் உள்ளவை அல்ல. இங்கு சித்தி விநாயகருக்கும் விமானத்துடன் கூடிய தனி சந்நிதி உண்டு. இடும்பனுக்கும் கடம்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. முனீஸ்வரருக்கும் வீரன் என்ற நாட்டுப்புற தெய்வத்திற்கும் சிலைகள் உள்ளன. விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.
கதை 1
நடுகல் வடிவில் வழிபட்டு வந்த கடவுளை சிவ ரூபம் என்றும் முருகன் வடிவம் என்றும் புரிந்து கொள்ள இரு தெய்வங்களையும் இணைத்து ஒரு கதை நிலவுகின்றது. திருமுதுகுன்றம் என்று தமிழில் அழைக்கப்படும் விருத்தாச்சலத்தில் உள்ள பழமலைநாதர் சிவன் கோவிலுக்கு வந்த சுந்தரர் தன்னைப் பாடாமல் வெறுமனே வணங்கிவிட்டுப் போனதைக் கண்ட சிவபெருமான் கொழிஞ்சியப்பராக இங்கு எழுந்தருளியிருக்கும் தன் இளைய மகன் முருகனிடம் ' சுந்தரரை இங்கே என் கோவிலுக்கு திரும்பவும் வந்து என்னைப் பாட வை' என்றார்.
தந்தையின் சொல் கேட்ட முருகன் வேட்டுவன் ரூபத்தில் வந்து சுந்தரரின் உடைமைகளைக் களவாடிச் சென்றார் அப்போது சுந்தரர் 'என் பொருட்களை என்னிடம் கொடுத்துவிடுப்பா' என்று கேட்டார். வேட்டுவ வபிவில் இருந்த முருகன் , 'திருமுதுகுன்றத்திற்கு வந்து பெற்றுக் கொள்' என்றார்.
சுந்தரர் திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாச்சலத்திற்குப் போனார். கோயிலுக்குள் போய் இறைவனிடம் பாட்டுப் பாடி வணங்கி மன்றாடியதும் அவருடைய பொருட்கள் அவருக்குக் கிடைத்தன.
கதை 2
சிவன் முருகன் கதை இன்னொரு வகையிலும் சொல்லப்படுகின்றது. திருமுதுகுன்றத்தில் சிவபெருமான் மனம் நிறைவு பெறும் வரை சுந்தரர் பாடாமல் தன் வயோதிகம் காரணமாக சில பாடல்களை மட்டுமே பாடிவிட்டுக் கிளம்பினார்.
சுந்தரரின் இன்னிசை கீதங்களை இன்னும் அதிகமாகக் கேட்க விரும்பிய சிவபெருமான் தன் மகனிடம் சுந்தரரைத் 'இங்கே திருப்பி அனுப்பு' என்று கோரிக்கை வைத்தார். முருகன் தந்தையின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.
நேர்த்திக்கடன்களும் வழிபாட்டு முறைகளும்
சூறை விடுதல்
கொளஞ்சியப்பர் கோவில் ஒரு நாட்டுப்புற தெய்வக் கோவில் போலவே செயல்படுகிறது. இப்பகுதியில் வாழும் விவசாயிகள் தங்கள் அறுவடையின் முதல் பகுதியை இங்குக் கொண்டு வந்து காணிக்கை ஆக்குகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் விளையும் முந்திரிக்கொட்டைகள் இங்கு அதிகமாக காணிக்கை பொருளாக சேர்கின்றன. இந்நடைமுறையை சூறை விடுதல் என்கின்றனர்.
பிராது கட்டுதல்
பிராது கட்டுதல் என்ற ஒரு வழிபாட்டு முறையும் இங்கு நடைமுறையில் உள்ளது. மக்களுக்கு ஏதேனும் மனக்குறை இருந்து அதை தெய்வத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் உடனே ஒரு சீட்டில் எழுதி அந்தச் சீட்டை கொளஞ்சியப்பருக்கு சமர்ப்பிப்பர்.
முறையீடு செய்தல் இறைவன் நீதி வழங்குவான் கெட்டவர்களைத் தண்டித்து நல்லவர்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இறைவனிடம் முறையிட்டு நியாயம் கேட்கும் நடைமுறை பல நாட்டுப்புற கோவில்களில் உள்ளது.
மக்கள் தங்கள் பிராதுகளை கொளஞ்சியப்பரிடம் சமர்ப்பித்த மூன்று மணி நேரம் 3 நாள் 3 வாரம் மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகின்றனர். எனவே கோர்ட்டு, வழக்கு, காவல் நிலையம் என்று தங்கள் முறையீடுகளைக் கொண்டு செல்லாமல் நேரடியாக இறைவனிடம் வந்து முறையிட்டு நியாயம் பெறுகின்றனர்.
பிராதுச் சீட்டு எழுதிப் போடும் முறை வேறு பல கோவில்களிலும் இருப்பதைக் காணலாம். தனக்கு அநியாயம் செய்தவர்களைச் சபித்து காசு வெட்டி போடும் முறை வெட்டுடையார் காளியம்மன் மடப்புரம் காளியம்மன் போன்ற ஆக்ரோஷமான பெண் தெய்வக் கோவில்களில் காணப்படுகின்றன.
திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பதால் சரியான சாட்சி இல்லாமல் மனிதர்களிடம் நீதி கோர இயலாத வேளைகளில் ஆண்களும் பெண்களும் இறைவனிடம் பிராது சமர்ப்பிக்கின்றனர்.
விபூதியும் வேப்பெண்ணெயும்
பொதுவாகக் குடும்பங்களில் ஏதேனும் பூச்சி கடி, நோய் நொடி, ஆடு மாடுகள் சுணங்கி இருத்தல் போன்ற துன்பங்கள் நேரிடும் போது குலதெய்வத்தை வணங்கி விபூதி எடுத்துப் பூசி விடுவது வழக்கம். விபூதி சாம்பல் என்பதால் ஜலதோஷத்தை போக்கும்.
கபால நீரை இறக்கும். விஷ கடியினால் கடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் விஷத்தை முறிக்கும். விஷ நீரை சாம்பல் உறிஞ்சி வெளியேற்றி விடும். குளிர் காலங்களில் கை, கால் குடைச்சல், தசை வலி, குளிர், நரம்பு இழுத்தல் போன்ற பாதிப்பு இருந்தால் வேப்ப எண்ணெயைச் சூடாக்கித் அப்பகுதிகளில் தேய்த்து விடுவது வழக்கம்.
வேம்பின் (வேப்பெண்ணையின்) மருத்துவ குணம் பல நோய்களைத் தீர்க்கும். அதன் வெப்பம் கால் கை வலியைப் போக்கிவிடும். விபூதி பூசுவதும் வேப்பெண்ணெய் தேய்ப்பதும் கோவில் சார்ந்து இறை நம்பிக்கையுடன் இணைந்தால் உடல் நலம் பெறுவதுடன் மனத் தெம்பும் கிடைக்கும்.
ஊர் மக்கள் தங்களுக்கு மனம், உடல் சார்ந்த பிரச்சினைகள் வரும்போது கொழுஞ்சியப்பர் கோயிலுக்கு வந்து இறைவனை வணங்கி விபூதியை வேப்பெண்ணையில் இட்டு வாங்கி உடம்பில் பூசி நிவாரணம் பெறுகின்றனர்.
விழாக்கள்
கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத்தின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். தங்கள் காணிக்கைகளை அளிக்கின்றனர். சூரை விடுகின்றனர் கோயில் முன் வரலாறு கொளஞ்சியப்பர் கோவில் கோவிலின் இன்றைய கதைகளையும் வழிபாட்டு முறைகளையும் வைத்து ஆராயும் போது நடுகல் வழிபாடு நடந்த இந்த இடத்திற்கு வந்த பௌத்தர்கள் இங்கு தங்கி ம்ருயஹவ் சேவை செயததை உயத்துணரலாம்.
இங்குள்ள முனியப்ப சாமி பௌத்த முனிவர் ஒருவரின் கோயிலாகும் இங்கு விநாயகர் சந்நிதிக்கு தனி விமானம் என்று கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் இக்கோயில் முன்பு கௌதம் புத்தர் கோயில் இருந்த இடம் அல்லது போதிசத்துவர் வாழ்ந்த மடம் என்பதை உறுதி செய்கிறது.
பௌத்தத் துறவிகள் மாந்திரிகம் மருத்துவம் ரசவாதம் தெரிந்தவர்கள். கொட்டு ஓசை, மணி ஓசை ஆகிய மடாலயத்தின் அன்றாட நடைமுறைகளில் ஒன்று. லயம் தியானத்தின் ஓர் அங்கம்.. இவர்களே உடுக்கடிக்கும் கோவில் பூசாரிகள் ஆவர்.
தொடர்ந்து இவர்கள் விபூதி சந்தனம் குங்குமம் வைத்து கோடாங்கிகள் என்ற பெயரில் ஊர் நியாயாதிபதிகளாக உள்ளூர் தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டனர். இவ் வழிபாட்டுத் தலத்தை நியாய சபையாகவும் கொண்டாடினர்.
மக்கள் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு தன்னுடைய நேர்மையை நிரூபித்தல், எரியும் தீக்கங்குகளை கையில் அள்ளி தன்னுடைய தூய்மையை உறுதி செய்தல் போன்ற நியாய சபை நெறிமுறைகள் ஊர்க்கோவில் முன்பு தான் நடந்தன. பிராது கொடுத்தல் நியாயம் வழங்குதல் ஆகியவை நடைபெற்ற இடம் ஊர் மந்தையாகும்.
அங்கு மந்தை அம்மனும் நடுகல் தெய்வங்களும் (ஊர்க்காவலன்) இருந்தன. தெய்வத்தின் திரு முன்பு வழக்குகள் நடைபெற்றன. அவ்வாறு சுமார் 3000 ஆண்டுகளாக நீண்ட சமயப் பாரம்பரியம் உள்ள இடமாக மருத்துவமும் வழக்குகளும் நடைபெற்ற இடமாக இக் கொழிஞ்சியப்பர் கோவில் விளங்குகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |