பகவத் கீதை: ஒரு மனிதனின் அன்பு எப்படி இருக்க வேண்டும்?
மனிதன் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கை குழப்பங்களுக்கு விடை கொடுக்கும் வகையில் பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதை இருக்கிறது. இதில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு வாழ்தல் கூடாது என்பதற்கு மிக சிறந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு முதலில் மனதில் நிறைந்த அன்பு தேவை. அப்படியாக, உண்மையான அன்பு பற்றி பகவத் கீதையில் சில விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, அவனை அவன் எல்லையற்று நேசிப்பதே ஆகும். எவன் ஒருவன் தன்னை அறிந்து, செயல்பட தொடங்குகின்றானோ அப்பொழுது அவனை போல் பிறரையும் அணுகி அன்பை பரிமாறுகின்றான்.
2. மனிதனிடம் இருக்க கூடாத விஷயங்களில் ஒன்று சுயநலம். நாம் எப்பொழுதும் ஒருவரோடு சுயநலத்திற்காக பழகுதல் கூடாது. தன்னுடைய ஆதாயத்திற்காக காட்டும் அன்பு உண்மையான அன்பு ஆகாது. அந்த அன்பு பாவத்தை மட்டுமே சம்பாதித்து கொடுக்கும்.
3. மனிதனாக பிறப்பதே வரம். அதனால் நம் மனம் எப்பொழுதும் இரக்க குணத்துடன் இருக்கவேண்டும். யாரேனும் தவறே செய்தாலும் அதை மன்னித்து ஏற்கும் பக்குவம் பெற வேண்டும். இந்த உலகில் உண்மை என்ற நிலையை மனிதனால் மட்டுமே அடைய முடியும்.
4. மனதில் வன்மம் நிறைந்து இருந்தால் அதில் இறைவன் இருக்க மாட்டான். மனதில் அன்பு இருந்தால் மட்டுமே இறைவன் நம் அருகில் வருவார். இறைவனை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே. தூய அன்புள்ளம் கொண்ட மனதால் மட்டுமே இறைவனை எளிதாக அடைய முடியும். அதனால் தான் மனதில் எந்த சிந்தனையும் இல்லாத குழந்தையை தெய்வத்திற்கு சமமாக பார்க்கின்றோம்.
5. உண்மையான அன்பு யார் எப்படியோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்காக மனம் வருந்துகிறது. அவர்களின் துயரை தன்னுடைய துயர் போல் எடுத்து மனம் கலங்குகிறது. மனதில் பொறாமை,மற்றும் தான் என்ற சிந்தனை அதிகம் இருந்தால் நிச்சயம் அந்த மனதில் நாம் அன்பை பார்க்கமுடியாது. அங்கு நாம் அழிவை மட்டுமே பார்க்கமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |