இந்த உலகத்தில் எது சிறந்த வரம்? எது சிறந்த சாபம்?
இந்த பிரபஞ்சம் என்பது மனிதர்கள் அவர்களை உள் உணர்ந்து கடமையை செய்து வாழ்தலே ஆகும். ஆனால் இவ்வாறு நடப்பது இல்லை. மனிதன் மனதிற்குள் ஒவ்வொரு வினாடியும் கணக்கில் அடங்காத அளவிற்கு போராட்டங்களை அவன் நடத்திக் கொண்டு இருக்கின்றான்.
இதற்கெல்லாம் ஆசை, அகங்காரம், ஆணவம் போன்ற தீய கூட்டாளிகளிடம் அவன் வைத்துக் கொள்ளும் சகவாசமே ஆகும்.
ஆக, நம் வாழ்க்கையில் நாம் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கின்றோம். அந்த வகையில் இந்த உலகத்தில் மனிதனுக்கு கிடைக்கக்கூடிய வரங்களில் எது சிறந்த வரம்? அதை போல் ஒரு மனிதன் பெறக்கூடாத சாபங்களில் எது மிகச் சிறந்த சாபம்? என்பதை பற்றி பார்ப்போம்.

எது சிறந்த வரம்:
வரம் என்றாலே மனிதர்கள் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த வாழ்க்கையை தான் கண் முன் காட்சி படுத்தி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் எது சிறந்த வரம்?
தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கின்ற ஒரு மனநிலையும், கடைசி நொடியிலும் வாழ்க்கை மாறும் என்ற தன்னம்பிக்கை கொண்டவனும், இன்று வருகின்ற இறப்பை கூட நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என்ற ஒரு தைரியமும், தீயவர்களையும் இவர்களும் மனிதர்கள் தானே காலம் மாற அவர்களும் மாறுவார்கள் என்கின்ற ஒரு பக்குவமும், மரணத்தையும் தடுத்து நிறுத்த முடியாத செல்வம் தான் உழைக்கின்ற பணம் என்ற புரிதலும் நிறைந்த உள்ளம் கொண்ட மனிதனிடமே அத்தனை சிறந்த வரமும் இருக்கிறது.

எது சிறந்த சாபம்:
ஒன்றை இழப்பதும் ஒருவர் நம்மை சபித்து துன்பப்படும் வாழ்க்கை மட்டும் சாபம் அல்ல. இருப்பதை சரியாக உணர்ந்து வாழ முடியாத தன்மையும், மனதில் இறைவன் குடிகொள்ள இடம் தராத ஒரு போராட்டமான உள்ளமும், இன்னும் இன்னும் வேண்டுமென்ற மாயை ஆசையில் பொருட்களை அடைய நினைப்பதும், செய்த பாவம் நாளை நம்மை துரத்தும் என்பதை மறந்து இன்று பல தீயது செய்வதும், இறைவன் நாமத்தை வாயார சொல்லி பாடி மகிழ்ந்திட வாய்ப்புகள் கொடுக்காத அந்த உதடுகளும், சரி எது? தவறு எது? என்று பிரித்துப் பார்க்க முடியாத உள்ளம் தான் இந்த உலகத்தின் மிக சிறந்த சாபக் கிடங்கு.
உண்மையில் நாம் யோசித்துப் பார்த்தோம் என்றால் உலகம் என்ற ஒற்றை வலையத்தில் நாடுகள் என்ற பிரிவுகள் இருந்தாலும் மனிதன் இறந்த பிறகு அந்த ஆன்மா செல்லுகின்ற ஒரே ஒரு இடம் மாயை என்கின்ற ஒரு உலகம்.
எல்லா ஊர்களிலும் மனிதர்களுக்கு வேறுபாடு இன்றி நடக்கக்கூடிய இந்த மரணம் தான் நமக்கு உணர்த்துகிறது எல்லோரும் உலகம் என்ற ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை.
ஆக, அதில் வாழத் தெரியாமல் வாழ்கின்ற மனிதர்களும், காலம் எப்படி மாறினாலும் வாழ்ந்து விடுவேன் என்ற மனிதர்களின் இடையே தான் இந்த சிறந்த வரமும் சாபமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. உலகம் புரிந்தால் அது வரம், அதை புரிய மறுத்தால் சாபம். இதை புரிந்தவர்கள் வாழ்ந்துவிடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |