கர்ம வினையை குறைப்பதின் முதல் வழி என்ன தெரியுமா?
இந்த உலகம் பல அதிசயமும் மர்மங்களும் கொண்டு நிறைந்து உள்ளது. சிலர் இந்த பிரபஞ்சம் விதியின் வழியாக செயல்படுகிறது என்று சொல்வார்கள். சிலர் கர்ம வினையால் செயல்படுகிறது என்று சொல்வார்கள்.
அப்படியாக இந்த கர்ம வினை செயல்பாடுகள் என்பது மிகவும் விசித்திரமானது. மிக நுணுக்கமாக மனிதனை தாக்கக்கூடிய ஒரு விஷயம் ஆகும். மனிதன் எல்லா நேரத்திலும் தெளிவான சிந்தனையோடு இருப்பதில்லை.
அவன் ஒவ்வொரு கஷ்டங்கள் வாயிலாக தான் வாழ்க்கையின் பாடங்களை தெரிந்து கொள்கின்றான். ஆக கால சூழ்நிலையால் ஏதேனும் தவறு செய்து விடுகிறோம் என்றால் அதை நாம் உணர்ந்து விட்டாலும் கர்ம வினை ஆனது நம்மை விடுவதில்லை.
அதனுடைய வேலையை கடமையை அது சரியாக செய்வதில் என்றும் தவறியதில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் நான் ஒரு சில தவறுகள் செய்து விட்டேன், அதை நான் உணர்ந்து வருந்தவும் செய்கின்றேன், இருந்தாலும் இந்த கர்மவினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று பலருக்கும் பல வேதனைகள் இருக்கும்.
அதாவது தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் செய்த தவறுகளிலிருந்து நாம் எப்படி விடுதலை பெறுவது என்று கேள்வி எல்லோரிடமும் இருக்கும். நம் வாழ்க்கையில் கர்ம வினையின் செயல்பாடுகள் தொடங்குகிறது என்றால் வாழ்க்கையில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் துன்பம் வந்து விட்டதே என்று கலக்கம் கொள்ளாமல் துன்பத்தை கடந்து செல்ல வேண்டும் என்று மனதை பக்குவப்படுத்தி இந்த துன்பமானது கடந்து செல்லும் என்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது நம் வாழ்க்கையில் தெளிவு உண்டாகிறது.
இன்றைய நாள் சந்திக்கும் இந்த துன்பத்தை நான் கடந்து விட்டேன் என்றால் நாளைய நாள் இனிமையாக அமையும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். நடக்கின்ற பிரச்சனைகள் அனைத்தும் வாழ்க்கைக்கான பாடம் என்று ஏற்றுக் கொள்வதாலும், இறை அன்போடு கடந்து செல்வதால் மட்டுமே நாளைய தினம் இனிமையாக அமையும்.
மேலும், கர்ம வினையானது நம்மை பழி வாங்குவதற்கு அல்ல அவை நமக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு மிகச்சிறந்த பாடம். ஆக மனிதன் செயலாலும் சொல்லாலும் எண்ணத்தினாலும் செய்யக்கூடிய தவறுகள் கூட பிற்காலங்களில் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து விடுகிறது.
இன்றைய நாள் என்பதற்காக நாளைய தினத்தை நாம் மறந்து விடக்கூடாது. நாளைய தினம் என்பதில் பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. ஆதலால் இன்றைய தினத்தில் ஆணவம் கொண்டு தவறுகள் செய்து சந்தோஷத்தை பெற்று கொள்வதை விட நாளைய தினத்தை நம் மனதில் கொண்டு செயல்பட்டால்வாழ்க்கை இனிமையாகும்.
காரணம் இன்று உடலிலும் மனதிலும் தவறுகள் செய்வதற்கான வலிமை இருக்கலாம். ஆனால் நாளை என்பது நமக்கு பல ஆச்சரியங்களை தான் ஒளித்து வைத்திருக்கிறது. அந்த நாளை என்பதில் உடல் வலிமை இல்லாமல் போகலாம் மன வலிமை இல்லாமல் போகலாம்.
அதனால் வாழ்க்கையில் சிறிது அளவாவது பயம் என்ற ஒரு உணர்வு கொள்ள வேண்டும். கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டும். இவை இரண்டும் இருந்தால் ஒழுக்கமாக நடந்து கொள்வோம். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் வந்துவிட்டால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







