2026 மகாசிவராத்திரி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?
இந்துக்களில் மிக முக்கியமாக கொண்டாட கூடிய வழிபாடுகளில் மகா சிவராத்திரியும் ஒன்று. குறிப்பாக சிவ பக்தர்கள் இந்த தினத்தைமிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். மேலும் சிவராத்திரி என்ற சொல்லுக்கு சிவனுக்கு உரிய ராத்திரி என்று பொருள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த சிவராத்திரி என்பது மாசி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்த திதியில் கொண்டாடப்படுவது வழக்கம்.
மேலும், சிவராத்திரியை பற்றி புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுவது உண்டு. அதில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய இரவு தான் சிவராத்திரி என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு ஒரு கதைகளின் படி சிவபெருமான் அன்னை பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட இரவே மகா சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.

ஆக, மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நாம் பயபக்தியோடு வழிபாடு செய்யும்பொழுது நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்படியாக, 2026 ஆம் ஆண்டில் பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 5:34 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது. அதனால் பிப்ரவரி 15ஆம் தேதி மாலை துவங்கி இரவு முழுவதும் சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நள்ளிரவு 11.55 முதல் அதிகாலை 12:56 வரை நடைபெறும் நிஷித கால பூஜையாகும்.
நான்கு கால பூஜை நேரம் :
முதல் கால பூஜை - பிப்ரவரி 15 மாலை 06.11 முதல் இரவு 09.23 வரை
2ம் கால பூஜை - பிப்ரவரி 15 இரவு 09.23 முதல் அதிகாலை 12.36 வரை
3ம் காலை பூஜை - பிப்ரவரி 16 அதிகாலை 12.36 முதல் 03.47 வரை
4ம் கால பூஜை - பிப்ரவரி 16 காலை 03.47 முதல் 06.59 வரை

சிவராத்திரி அன்று இந்த நேரங்களில் கண் விழித்து சிவ பூஜை செய்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அவருடைய பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். அதே போல், மகா சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் மூன்றாம் கால பூஜையில் மட்டுமாவது கண் விழித்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இந்த காலம் தான் அன்னை பார்வதி தேவி சிவபெருமானை வேண்டி அவருடைய வரத்தைப் பெற்றுக் கொண்ட காலம் என்று சொல்லப்படுவதால் தவறாமல் வழிபாடு செய்வது அவசியம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |