பூமியில் இருந்து திருமாலின் வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?
நாம் அனைவரும் பெருமாளின் இருப்பிடமான வைகுண்டம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.இருந்தாலும் அந்த வைகுண்டம் எங்கு இருக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும்.அப்படியாக திருமால் குடியிருக்கும் அந்த வைகுண்டம் பூமியில் தான் உள்ளதா?அல்லது விண்ணில் உள்ளதா என்பதை பற்றி பார்ப்போம்.
வைகுண்டம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி நமக்கு ஏற்பட்டது போல் ஒரு மன்னனுக்கும் வந்திருக்கிறது.அதை அவர் எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்றுஅரசவையைக் கூட்டி அனைவரிடமும் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல, அவற்றில் எதுவுமே அரசருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை மக்கள் கூட்டத்தில் இருந்து கவனித்து கொண்டு இருந்த ஒரு இளைஞர் ‘நான் பதில் சொல்கிறேன்’ என்று முன்வந்தான்.
மன்னனுக்கு ஒரே ஆச்சரியம்?பலரும் அறிந்திடாத பதிலை இந்த இளைஞர் சொல்கிறேன் என்று முன்வருகிறானே என்று,மன்னனும் சரி,சொல் வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது?என்றார். அதற்கு அந்த இளைஞன் மன்னா!வைகுண்டம் நாம் அனைவரும் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்றார்.
இதைக்கேட்ட அரசனுக்கு மட்டுமில்லாமல், அவையில் இருந்த எல்லோருக்குமே ஆச்சர்யம். மன்னனும்,அந்த இளைஞரிடம் மஹாவிஷ்ணு வசிக்கும் ஸ்ரீவைகுண்டம் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறாய்? நீ சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், ‘மன்னா! குளத்தில் இருந்த முதலை யானையின் காலை கடித்தது.அப்போது அந்த யானை,‘ஆதிமூலமே’ என்று அழைத்ததும் கூப்பிட குரலுக்கு திருமால் அங்கே வந்து முதலையின் பிடியிலிருந்து யானையை விடுவித்ததோடு, அதற்கு மோட்சம் தந்த கதை நம் அனைவரும் அறிந்ததே.
மன்னனும் ஆம் இதை நாம் அனைவரும் அறிந்திருப்போம் என்றார்.அதற்கு அந்த இளைஞர்,மன்னா யானை கூப்பிட குரலுக்கு உடனே வந்து பகவானால் காப்பாற்ற முடியும் என்றால்,அவர் இருப்பிடம் நம் அருகில் இருக்கிறது அல்லவா?என்றான்.
இந்த பதிலை கேட்ட அங்கு இருந்த அனைவருக்கும் சந்தோசம் பொங்கியது.மன்னன் சந்தேகம் தீர்ந்தது.இவ்வளவு புத்திசாலியாக பேசிய அந்த இளைஞருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கொடுத்தார் மன்னன்.
ஆக உண்மை பக்திக்கு இறைவன் எப்பொழுதும் அருகில் தான் இருக்கிறார்.கூப்பிட குரலுக்கு உடனே வந்து நிற்கிறார்.நம்மை ஆபத்தில் இருந்து விடுவிக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |