உங்களை காயப்படுத்துபவர்களிடம் இனி இப்படி நடந்து கொள்ளுங்கள்
இங்கு மனிதர்கள் நிறைய விஷயங்களை சக மனிதர்களிடத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. ஏன், பல நேரங்களில் விலங்குகளிடம் இருந்தும் கூட நாம் சில முக்கியமான நல்ல பண்புகளை எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையும் வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு விஷயத்தை யாரேனும் ஒருவர் வழியாக கொண்டு தான் ஆக வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் ஞானிகளுக்கு இயற்கையாகவே சில ஞானமும் சிந்தனைகளும் தோன்றினாலும் அவர்களும் இயற்கையின் வழியாக சில வழிகாட்டுதலால் மட்டுமே முக்தியும் அவர்கள் நினைத்ததையும் அடைய முடிகிறது. ஆக, இந்த உலகத்தில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உதவியாக மற்றொன்று தேவைப்படுகிறது.

அவர்களை நாம் ஆசிரியர் என்று சொல்லலாம் அல்லது வழிகாட்டி என்று சொல்லலாம். அப்படியாக இந்த உலகத்தில் மனிதனை வழிநடத்தக்கூடிய சிறந்த ஆசிரியர் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த உலகத்திற்கு பல கண்கள் இருக்கிறது. வெறும் சுவர்களுக்குள் யாருக்கும் தெரியாமல் வாழந்து விடலாம் என்று நினைத்தாலும் பிரபஞ்சம் என்கின்ற கண்களில் இருந்து நாம் எப்பொழுதும் தப்பிக்க முடியாது.
ஆக ஒரு மனிதன் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருக்கிறான் அல்லது அவன் இன்னும் சில விஷயங்களை புரியாமல் நடந்து கொண்டிருக்கிறான் என்றால் பிரபஞ்சத்தால் அவன் கவனிக்கப்பட்டு பிரபஞ்சத்தாலே பல நேரங்களில் கண்டிக்கப்படுகின்றான்.
சக மனிதர்கள் நம்முடைய தவறை திருத்திக் கொள்ளவும், சக உறவுகள் நம்மை மாற்றிக் கொள்ளவும் பல அறிவுரைகள் சொல்லி அதை நாம் மறுத்தாலும் பிரபஞ்சம் என்னும் உறவு நிச்சயம் ஒருவர் செய்த தவறை கட்டாயம் ஒரு நாள் தவறு என்று உணர வைத்து விடும். அது அவரவர் கர்ம பிராப்தம் பொருத்தும் அமைகிறது.
சிலருக்கு இந்த பிறவியில் செய்த தவறை உணரக்கூடிய வாய்ப்புகள் வழங்குகிறது. ஒரு சிலருக்கு பல பிறவிகளில் அவர்கள் செய்த தவறுகளை பல கோணங்களில் உணரச்செய்கிறது. இங்கு ஒருவர் செய்த தவறுகளில் இருந்தும் ஒருவர் செய்த புண்ணிய காரியங்களில் இருந்தும் அவர்கள் பதில் மொழி வாங்காமல் தப்பிக்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

ஆக நம்மை சுற்றி கண்காணிப்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலும் வழிநடத்துபவர்களை நாம் உதாசீனம் செய்தாலும் பிரபஞ்சம் என்கின்ற ஆசிரியரிடமிருந்து கட்டாயம் நாம் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நம்மால் தப்பிக்க முடியாது.
பிரபஞ்சம் என்கின்ற ஒற்றை தாய் தான் உலகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை தீமையை கற்பித்து ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இயங்குகிறது. ஆக ஒருவர் உங்களை ஏளனம் செய்கிறார், குறைவாக பேசுகிறார், துரோகம் செய்கிறார் என்றால் நீங்கள் கட்டாயம் உங்களுடைய ஆழ் மனம் வரை அதை எடுத்துச் சென்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை .
அந்த நொடியில் நீங்கள் உங்களால் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மறந்து விடுங்கள். தவறு செய்தவர்களை தண்டிப்பதற்கும் அவர்களுக்கு செய்தது தவறு என்பதை உணர்த்துவதற்கும் நேரம் என்கின்ற ஆசான் சரியான காலம் வரும் பொழுது அவர்களுக்கு உணர்த்தி விடுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |