எமதர்மனே சாப விமோசனம் பெற்ற கோயில் எங்கே இருக்கு தெரியுமா?
தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய மூன்றும் சோழர்களின் பெருமையைப் புகழ்ந்து கூறும் அழியாத பெருங்கோயில்களாகும். இவற்றுள் ஐராவதேஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் தாராசுரம் கோயிலின் சிறப்புகளையும் பெருமைகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரத்தின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பிற்காலச் சோழர் கலைப்பாணி கொண்டு சிறந்த கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது.
தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாப்பட வேண்டிய உலக மரபுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பெருமையுடைய கோயில்களுள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளமை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க இயலாத ஒன்று.
கும்பகோணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் தாராசும் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் இங்கு செல்கின்றன.
தல வரலாறு:
இரண்டாம் ராஜராஜ சோழனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் கோயில் முதலில் ராஜராஜேஸ்வரம் என்றும், சுவாமியின் பெயரைக் கொண்டு ராஜராஜப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இது ஐராவதேஸ்வரம் என்றும் ஐராவதேஸ்வரர் என்றும் பெயரிடப்பட்டது.
இந்திரனின் யானை ஐராவதம் வழிபட்ட தலம் என்பதால் இதை ஐராவதீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். ஆலயத்தின் முகப்பு, அர்த்த மண்டபம், முகமண்டபம், ராஜகம்பீர மண்டபம், விமானம், கருவறை மண்டபம் ஆகிய அனைத்தும் அழகு மற்றும் பிரமாண்டத்துடன் கட்டப்பட்டுள்ளது.
சிவப்பு கற்களால் ஆன இந்த கோயில் மனித முயற்சியின் சிறப்பான வெளிப்பாடாகும். தாரகாசுரன் வழிபட்டு வரம் பெற்ற தலம் என்பதாலும் இது ஐராவதேஸ்வரம் என்றும் கூறப்படுகின்றது. இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது.
இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது.
மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
தல அமைப்பு:
தேர் வடிவிலான இந்த கோயில் யானைகள் இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட யானை சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயில் கருவறையைச் சுற்றி 63 நாயன்மார்கள் சிற்பங்கள், திருச்சுற்று மாளிகையின் வடக்கே 108 சிவாசார்யர்கள் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
நடன அசைவுகள், போர்க்காட்சிகள் இங்கே சிற்பங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. விரல் நுனி அளவில் தொடங்கி எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என அனைத்து அளவுகோல்களிலும் சிற்பங்களை கொண்டுள்ள இக்கோயில் சோழர்களின் போர் முறை, சிற்பம், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் ஆகிய அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது.
இக்கோயில் அடி ஒன்றிற்கு 1000 சிற்பங்களை கொண்டுள்ளது. கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், தன்னுடைய தக்கயாகப் பரணியில், பெரும் சினம் கொண்ட வீரபத்திரரால் தக்கன் யாகம் அழிந்து சகலரும் தண்டிக்கப்பட்டனர்.
அப்போது அங்கே ஈசனார் தோன்றி, அன்னை சக்திக்கு போர்க்களம் காட்டி, இறந்துபோன உயிர்கள் யாவருக்கும் அருள்புரிந்து ராசராசபுரி இத்தலத்தில் எழுந்தருளினார் என்று குறிப்பிடுகிறார். இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்ற இந்த ஊர், பிறகு தெலுங்கு மன்னர்கள் காலத்தில் ராராசுரம் என்றாகி, அதுவே தாராசுரம் என்றானதாகவும் தகவல் உண்டு.
தக்கயாகப் பரணி இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்றும் கூறுவார். யமதர்மன் பெற்ற சாபத்தால் உடல் எரிச்சல் கொண்டான். அவன் இங்குள்ள குளத்தில் நீராடி நலம் பெற்றதால், இங்குள்ள குளம் எமதீர்த்தம் எனப்படுகிறது.
தெய்வநாயகி அம்மன் இங்குள்ள இறைவி. இங்கு 30 கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் கிழக்கு பிராகாரச் சுவரிலும், ராச கம்பீர மண்டபத்திலும் உள்ள கல்வெட்டுகள் இந்த கோயிலை இரண்டாம் ராஜராஜன் கட்டியதைக் கூறுகின்றன. இங்குள்ள துவாரபாலகர் சிலைகள் கல்யாணியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி மண்டபத்துக்கு அருகே உள்ள படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசைப் படிகளாக அமைந்துள்ளன. சாளக்கிராம லிங்கம், வீணையில்லாத வாணி, நாகராஜன், அன்னபூரணி, கண்ணப்பர், அர்த்தநாரீஸ்வரர், குழல் ஊதும் சிவனார் என இங்கே அபூர்வ சிற்பங்கள் ஏராளம்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஆலயம் வாழ்வில் ஒருமுறையேனும் காண வேண்டிய அற்புதமான தலம்.
கோயில் சிறப்புகள்:
சரித்திரத்தின் பிரமாண்டத்தை தன்னுள் கொண்ட தாராசுரம் கோயில், பார்ப்பவர்களை பிரமிக்கச் செய்கிறது. இங்கு காணவும் கற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.இக்கோவில் ஓர் ஆன்மிக கட்டிடக்கலை அதிசயம். பார்த்த முதல் பார்வையிலேயே மூச்சைக் கிறங்கடிக்கும் சில கட்டமைப்புகள் உலகில் உண்டு.
இங்கே அத்தகைய அதிசயம் ஒன்று உள்ளது. ஐராவதேஸ்வரர் கோயில் தமிழர் பெருமை, வரலாறு மற்றும் தெய்வீகத்தன்மை நிறைந்த வழிபாட்டுத் தலத்திற்கு ஓர் தலைசிறந்த முன்னுதாரணம். ஆஹா என்ன அழகு! - தாராசுரத்தில் உள்ள பிரமாண்டமான ஐராவஸ்தேஸ்வரர் கோவில்.
கும்பகோணத்தில் அமைந்துள்ள இக்கோவில் வரலாறு, யாருமறியா உண்மைகள் மற்றும் அற்புதமான கலைகளின் களஞ்சியம். இந்த கோவிலின் கட்டுமானம் கிபி 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. உலகப் புகழ்பெற்ற சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு - இவையனைத்தும் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், இந்திரனின் கம்பீரமான வெள்ளை யானை ஐராவதத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய சோழர் கோயில்களின் மூன்றில் ஒன்று ஐராவஸ்தேஸ்வரர் கோயிலும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
2004-ல் ஐராவதேஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. கோயிலின் கலை வேலைகள் விரிவானவை, நுட்பமானவை மற்றும் அழகானவை. இது கல்லில் செதுக்கிய கவிதை.
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயிலின் முக்கிய கல் வேலை ஒரு தேர் வடிவிலானது. முழு கோவில் வளாகமும் பண்டைய இந்திய புராணங்களின் கதைகளை விவரிக்கும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளது. கோயிலின் வசீகரத்தையும் சிறப்பையும் வர்ணிக்க வார்த்தைகள் போதாது
இது கண்டிப்பாக நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். கோவிலின் மற்றுமொரு மனதைக் கவரும் பகுதி இசைப் படிகள். பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் 7 இசைப் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன.
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பின் இவ்வளவு நுணுக்கமாக சமைக்கப்பட்ட கலைப் படைப்பு என்று எண்ணும்போது வியப்பாக உள்ளது. இத்தகைய அனைத்து அம்சங்களும் ஐராவதேஸ்வரர் கோவில் வளாகத்தை உங்கள் தமிழக பயணத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக்குகின்றன.
கோயில் சிற்பங்கள்:
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் பொதுவாக சிவபுராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர்.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி, கண்ணப்பர் போன்ற சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், மழுவும், கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிற்பம் எனப் பல சிற்பங்களும் உண்டு.
குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது .
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நடன முத்திரைகள் காட்டும் ஆடல் மகளிர் சிற்பங்களும், இசைக் கலைஞர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறை, மற்றும் மண்டபங்களின் புறச்சுவர்ப் பகுதியில் உள்ள வேதிகை கண்டப்படையில் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் புடைப்பு வடிவங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அட்ட திக்கு பாலகர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம், பௌர்ணமி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது.
கோயில் நேரம்:
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்களுக்காக கோயில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |