அதிகார பதவிகள் அருளும் ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணியன்
ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் சென்னையிலிருந்து பொன்னேரி போகும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எழும்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டார் குப்பம் முதலில் ஆண்டியார் குப்பம் என்று அழைக்கப்பட்டது. இங்குப் பல துறவிகள் தங்கி இருந்ததால் ஆண்டிகளின் குப்போம் எனப்பட்டது.
முருகனின் மூன்று நிலைகள்
ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் முருகனை பாலமுருகன் என்றோ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் என்றோ தண்டாயுதபாணி என்றோ அழைக்க இயலாது. ஏனெனில் அவர் மனித வாழ்வின் மாறி வரும் மூன்று நிலைகளில் காட்சி அளிக்கின்றார்.
அதிகாலையில் பாலமுருகனை போல குழந்தை முக பாவத்துடனும் மதியம் குமரப் பருவத்தில் இருக்கும் இளைஞனின் முக பாவத்துடனும் மாலையில் வயோதிகரின் தளர்ந்த முகத்துடனும் காட்சி அளிக்கின்றார்.
அதிகார முருகன்
ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி வேல், மயில், ஆறு முகங்கள் 12 கண்கள், கரங்கள் என முருகனுக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல் இங்கு இடுப்பின் இரண்டு பக்கமும் கை வைத்து அதிகார தோரணையில் காட்சியளிக்கின்றார்.
எனவே இவரை அதிகார முருகன் என்று அழைக்கின்றனர். இவ்வூர் முருகன் பிரம்மனின் அகம்பாவம் தொலைந்த முருகனாக வணங்கப்படுகிறான்.
உப சந்நிதிகள்
ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமியின் இணையர் வள்ளியும் தெய்வானையும் அவருக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். இக்கோவிலில் வேறு பல தெய்வங்களுக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன.
காசி விஸ்வநாதன் காமாட்சியம்மனும் தனிச் சன்னதியில் காட்சி தருகின்றனர். ஆடலரசன் நடராஜர் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளார். பக்தர்களுக்கு வரம் தரும் வர சக்தி விநாயகராக அவரும் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
விருட்சமும் தீர்த்தமும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை ஆகும் சரக்கொன்றை ஆகும். இம்மரம் பௌத்தர்களுக்கு உரிய விசேஷ மரமாகும். சொர்ண புஷ்பம் என்று பௌத்தர்கள் இம்மரத்தின் மலர்களைக் குறிப்பிடுவர்.
இம்மலர் தாய்லாந்தின் தேசிய மலராகும். பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த கேரளாவின் மாநில மலர் சரக்கொன்றை என்பதால் ஆண்டு தொடக்கத்தில் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் விஷு அன்று எல்லோரும் பூஜையில் இம்மலரை கண்ணாடி மற்றும் சித்திரை கனி வர்க்கங்களோடு வைத்து வணங்குவர்.
ஸ்ரீலங்காவின் வலது பகுதியில் குறிப்பாக பௌத்த கோவில்களில் மடாலயங்களில் இம்மரங்கள் அதிகமாக வளர்க்கப்படும். தூய்மையையும் செல்வத்தையும் குறிக்கும் சரக்கொன்றை பௌத்த துறவிகளின் சமயச் சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
பத்ம புத்தரும் நாரத புத்தரும் சரக்கொன்றை மரத்தின் கீழ் ஞானோதயம் பெற்றனர். எனவே இம்மரத்தை போதி மரத்துக்கு நிகராக போற்றினர். இதனை ஸ்வர்ண புஷ்பம் என்றே அழைத்தனர். (இதுவும் இக்கோயில் முதலில் பௌத்த கோயிலாக இருந்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது).
கதை 1
பிரமன் குட்டுப்பட்ட கதை சைவ சமய புரட்சி ஏற்பட்ட காலத்தில் பெயர் மாற்றப்பட்ட கோவில்களுக்குப் புதிய தலபுராணங்கள் உருவாக்கப்படும். அப்புராணக் கதைகளில் பழைய பௌத்த கடவுளரான இந்திரனும் பிரமனும் வழிபாட்டுத் தகுதியை இழப்பர்.
இக்கோவிலுக்குரிய ஸ்தலபுராணத்தில் பிரம தேவன் பாலமுருகனால் குட்டுப்படுகிறார். கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை கண்டுகொள்ளாமல் அவரை வணங்கிச் செல்லாமல் சிறுவன் தானே என்று அலட்சியம் செய்தார்.
முருகன் அவரை நிறுத்தி 'பிரம்மதேவா பிரணவத்திற்கு பொருள் சொல்லுங்கள், கேட்போம்' என்றார். பிரம்ம தேவனுக்கு பிரணவத்திற்கு பொருள் சொல்லத் தெரியவில்லை. முருகன் மக்குச் சிறுவர்களுக்கு தலையில் குட்டுவது போல பிரமனின் தலையில் குட்டி அவரை சிறையில் அடைக்கச் சொன்னார்.
முருகப்பெருமான் பிரம்ம தேவனை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டபோது இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அதிகார தோரணையோடு நின்றார் அந்த உருவத்தில் இக்கோவிலில் அவர் காட்சியளிக்கின்றார். இச்சம்பவம் நடைபெற்ற தலம் இத்தலம் ஆகும்.
அறு உருவாய் விளங்கும் பிரமதேவன்
பிரம்மனுக்கு எங்குமே கோயில் கிடையாது என்ற சாபம் அவருக்கு உண்டு. பிரமதேவன் குட்டுப்பட்ட இடம் என்பதை குறிக்கும் வகையில் இங்கு பிரம்மதேவன் சிவன் முருகனுக்கு நேர் எதிரே கல் வடிவில் காட்சி தருகின்றார். அவருக்கு உருவம் இல்லை என்ற சாபத்தின் காரணமாக அறு உருவாக (உருவமற்ற) இருக்கின்றார்.
அவருடைய அட்சர மாலை, கமண்டலம், தாமரை மலர் ஆகியவை அந்த நீள் வட்டக் கல்லில் காணப்படுகிறது. (பிரமன் கல்லும் இதில் காணப்படும் பொருட்களும் யாரோ ஒரு பவுத்த துறவிக்கான நினைவுக்கல்லாகத் தோன்றுகிறது. சுல்தான் கொடுத்த நிலத்தில் கோயில் கட்டப்பட்டது.
இந்தக் கல் இங்கு வாழ்ந்த புத்த துறவியை/ ஆண்டியைக் குறிக்கின்றது. இங்குப் பவுத்தர்கள் மொட்டையடித்து துறவு மேற்கொண்டிருப்பர். துறவுக்குரிய சரக் கொன்றையும் இங்கு வளர்க்கப்பட்டுள்ளது.)
கதை இரண்டு
தீர்த்தம் உருவான கதை ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் வேலாயுத தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உள்ளது. இதற்கும் ஒரு கதை உள்ளது. சம் வர்த்தனர் என்ற பக்தர் இப்பகுதிக்கு வந்து இங்கே உள்ள இறைவனைத் தரிசிக்க விரும்பினார்.
அதற்கு முன்பு குளித்துவிட்டு சுத்தமாக வந்துவிடலாம் என்று நினைத்து அங்கே இருந்த ஒரு சிறுவனிடம் 'தம்பி இங்கே குளிக்க நல்ல குளம் எங்கே இருக்கின்றது? கோவில் தீர்த்தம் எங்கே இருக்கின்றது' என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் 'இங்கே குளம் என்றும் தீர்த்தம் என்றும் எதுவும் இல்லை என்னுடன் வாருங்கள்' என்று சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டித் தன்னிடம் இருந்த வேலாயுதத்தை ஊன்றினான். அங்கே ஊற்றுக் கிளம்பியது.
சமவர்த்தனர் அவ் ஊற்று நீரில் குளித்துக் கோயிலுக்கு வந்தார். மக்கள் ஊற்று நீரை அழகான ஒரு குளம் வெட்டி சேகரித்தனர். அந்த குளத்துக்குப் பெயர் வேலாயுத தீர்த்தம் ஆகும். சிலர் இதனை பால நதி என்றும் அழைக்கின்றனர்.
வரலாறு
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலுக்குப் புராண கதைகளுடன் உண்மை வரலாறும் உள்ளது. இஸ்லாமிய சுல்தான் மன்னர் தன் படை பரிவாரங்களுடன் போருக்கு புறப்பட்டு போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு இடத்தில் பாசறை அமைத்து தங்கினார்.
அங்கு ஒரு சிறிய முருகன் கோவில் இருந்தது. முருகன் வீரத்தின் தெய்வம் என்பதாலும் தேவர்களின் சேனாதிபதி என்பதாலும் அவனை வணங்கிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்று படை வீரர்கள் சுல்தானிடம் எடுத்துரைத்தனர்.
அவரும் உடன்பட்டார். 'சரி வணங்கி செல்வோம் நமக்கு வெற்றி கிடைத்தால் இந்த முருகனுக்கு கோவில் கட்ட நிலம் தருவோம்' என்று சொல்லி வணங்கிச் சென்றார். அந்தப் போரில் சுல்தான் மாமன்னருக்கு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
உடனே அவர் சொன்ன சொல்லை காப்பாற்ற முருகன் கோவிலுக்கு நிலம் வழங்கினார். அந்த நிலத்தில் கட்டப்பட்டது தான் ஆண்டி குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இது உண்மை வரலாறாக இங்கு பெரியவர்களால் சொல்லப்படுகின்றது.
நேர்த்திக்கடன்கள்
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் மற்ற முருகன் கோவில்களில் இருப்பதைப் போலவே பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை தருகின்றனர். காவடி எடுப்பதாகவும் நேர்ந்து கொள்கின்றனர்.
வழிபாட்டின் பலன்
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் பரணி நட்சத்திரத்தன்று வந்து இரவில் தங்கி மறுநாள் காலையில் கார்த்திகை பூஜையை முருகனுக்கு சிறப்பாக நடத்தி வீடு திரும்பினால் தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும்.
இக்கோயிலில் முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் பாலபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் ஆகும். இவற்றைச் செய்த பக்தர்களுக்குப் பழவினை, புதுவினை என இருவினையும் அண்டுவதில்லை.
இழந்த அதிகாரத்தைப் பெற
ஆண்டார்குப்பத்தில் முருகன் இரண்டு கையையும் இடுப்பில் வைத்த படி அதிகார தோரணையுடன் நிற்பதால் இவரைத் தொடர்ந்து வணங்கி வந்தால் அதிகாரத்தை அருள்வார். நல்ல அதிகார பதவிகளை இழந்து அதிகாரமற்ற 'டம்மி போஸ்ட்களுக்கு' பதவி மாற்றம் அல்லது பதவி இறக்கம் பெற்றவர்கள் (டி பிரமோஷன்) ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்கினால் மீண்டும் பழைய அதிகாரம் உள்ள பதவியைப் பெறுவார்கள் அல்லது புதிய அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |