நிறைமாத கர்ப்பிணியாக காட்சி தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன்
திருவள்ளூர் மாவட்டம், ராமாபுரத்தில் உள்ளது புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில். இக்கோயிலில் அம்பாள் நிறைமாத கர்ப்பிணியாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
ஒரு சமயம் சிவனும் பார்வதியும் மேல்மலையனூருக்கு இத்தலத்தில் அமைந்த வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தொலைவு நடந்து களைப்படைந்ததால் கர்ப்பிணியாக இருந்த பார்வதி தேவி அங்கிருந்த ஒரு வேப்ப மர நிழலில் அமர்ந்தார்கள்.
தாகமாக இருந்ததால் ஈசனிடம் தண்ணீர் வேண்டும் எனக் கேட்க,உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனித நீர் எடுத்து வந்தார்.
அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமானால் அந்த நதியைக் கடந்து வர இயலவில்லை.
எனவே, வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே உலகத்துக்கே படியளக்கும் அம்பிகை பசி, தாகம் தாங்க முடியாமல் அப்படியே தரையில் விழுந்துவிட்டாள்.
பார்வதி தேவியைச் சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான் புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான் தாண்டவராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதைப் பார்க்கலாம்.
மேலும், ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் மல்லாந்து படுத்திருப்பது போன்று அம்மனே இத்தலத்தில் இயற்கையாகத் தோன்றியுள்ளார். புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது.
இந்தத் தல நாயகி நவகிரக தோஷங்களை நீக்கி, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தந்தருள்கிறாள்.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண் புற்றாக பூங்காவனத்தம்மன் எழுந்தருளி காட்சி தருகிறாள்.
சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும் குங்குமம் துலங்க, அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசான மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலை வைத்து காட்சி தருகிறாள்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கோயிலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபடுகிறார்கள். இப்படி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்வதன் மூலமாக அவர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |