இறந்த குழந்தையை மூன்று வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பித்த சிவாலயம்
இறந்த குழந்தையை மூன்று வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பித்த சிவாலயம் எங்கு இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா? குடும்ப பிரச்சினைகளை நீக்கி குடும்ப உறவுகளை வலுவாக்கும் கோயிலை பற்றி தெரியுமா?
நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வரலாற்றையும் சிறப்புகளையும் அவர் அளிக்கும் வரங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
தல அமைவிடம்:
கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி என்னுமிடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து இந்த கோயிலுக்கு பேருந்தில் செல்லலாம்.
கோவையிலிருந்து 40 கி. மீ தொலைவிலும் திருப்பூரிலிருந்து 14 கி. மீ தொலைவிலும் திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ தொலைவிலும் இந்த பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ளது. கோவை டூ ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
தல பெருமை:
சைவ சமய குரவர்களுள் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனார் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து சென்று கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் தலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டில் சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் மற்றொரு வீட்டில் அழுகை ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்கான காரணத்தை சுந்தரர் அருகில் இருப்பவர்களிடம் கேட்டறிந்தார். பூணூல் அணிவிக்கும் எதிர்வீட்டுச் சிறுவனின் வயதினை ஒத்த குழந்தையை, முதலை ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கி விட்டது. அக்குழந்தை இருந்திருந்தால் அதற்கும் இதுபோல பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றிருக்குமே என்று எண்ணி பிள்ளையை இழந்த சோகத்தை பெற்றோர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
அந்தசமயம் சுந்தரர் அங்கு வருகை புரிந்திருந்ததை அறிந்து, குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து சோகத்தை வெளியே காட்டாமல் சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வரவேற்றனர். உண்மையை உள்ளத்தால் உணர்ந்து கொண்ட சுந்தரர், அந்தத் தாய் – தந்தையரின் துன்பத்தைத் துடைக்கத் திருவுள்ளம் கொண்டார்.
குழந்தையை பறிகொடுத்தவர்களிடம், “இறைவன் கருணை மிக்கவன். அவன் பேரருளால் எல்லா அற்புதங்களும் நடக்கும். கவலையை விடுங்கள்” என்று கனிவுடன் கூறி, முன்பு சிறுவனை, முதலை விழுங்கிய குளக்கரைக்கு குழந்தையில் பெற்றோரை அழைத்து சென்றார்.
(மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு: அவிநாசியப்பர் கோயில் குளத்தங்கரையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவனின் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னே ஒரு முதலையானது அந்த சிறுவனை விழுங்கிவிட்டது. )
“கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்று சிவனிடம் உருகி வேண்டினார். பத்து பதிகங்களைப் பக்திப் பரவசத்துடன் சுந்தரர் பாடி முடித்ததும், அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவனருளால் வறண்டு காய்ந்திருந்த குளத்தில் நீர் நிரம்பியது.
நீருக்குள்ளிருந்து திடீரென ஒரு முதலை வெளிப்பட்டது. முதலை வாயைத் திறக்க அதனுள்ளிருந்து மூன்றாண்டுகளுக்கு விழுங்கப்பட்ட சிறுவன் தற்போதைய வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் வெளியே வந்தான். பிள்ளையின் பெற்றோர் அளவிலா பேரானந்தம் கொண்டனர். அவர்கள் இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின்னர், அவனது பெற்றோர் அந்த சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கும் விழா செய்து மகிழ்ந்தனர்.
தல பெயர்க்காரணம்:
பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்த பெருமையை இந்த தலம் பெற்றது. எமன் வாயில் சென்றவனை கூட இந்த தலம் மீட்டுத்தரும் என்பதன் பொருளே அவிநாசி. அதாவது ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது எனபொருள்.
அதுவே ‘அவிநாசி’ என்றால் அழிவில்லாத எனப்பொருள். நீண்ட ஆயுளை கொடுப்பவர் அவிநாசியப்பர். சிவபெருமானுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அவ்வாறு வேண்டியவர்களுக்கு எளிதாக வரம் வழங்குபவரே அவிநாசியப்பராவார்.
தல அமைப்பு:
இந்த தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். தேவி கருணாம்பிகை, அவிநாசியப்பருக்கு வலதுபுறம் இருப்பது மற்ற கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பாகும். அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் வாசி அவிநாசி என்பார்கள்.
காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது.
சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இந்த தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்தர் வடிவிலானது. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார்.
குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இங்குள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது.
63நாயன்மார்கள் சன்னதியில் விநாயகர் அமர்ந்துள்ளார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சியும் உள்ளனர். இத்தலத்தில் 32 கணபதிகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் அமர்ந்துள்ளார்.
இவர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் சனி பகவான் அருள்பாலிக்கிறார்.கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் திருவிழாவின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது.
மற்ற காலங்களில் இந்த மரம் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. சரகா, சுஸ்ரதா, வராஹமித்ரா ஆகிய நூல்கள் பாதிரி விருட்ச மரத்தைக் குறித்து போற்றி கூறுகின்றன. அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மீட்டர் தொலைவில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது.
அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயில் இருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்குள்ளது.
பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்புகள்:
தேவாரத் திருத்தலங்களுள் அவிநாசி அப்பர் கோயிலும் அடங்கும். சுந்தரர் இத்தலத்தில் தான் தேவாரப் பாடல்களை பாடியுள்ளார். மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள்.
அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோயிலில் வைத்து பூஜை செய்த பின்னரே அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த தலத்திற்கு திருப்புக்கொளியூர் என்ற பழைய பெயரும் இருந்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.
சிவபெருமானின் அக்னித் தாண்டவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், இந்தத் தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதாகவும் (புக்கு ஒளி ஊர்- புக்கொளியூர்), பிறகு இறைவனின் அருளைப் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 205-வது தேவாரத்தலம் ஆகும். கொங்கு நாட்டில் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடைபெறும் கோயில்களில் அவிநாசிக்கு முக்கிய இடம் உள்ளது.
ஏனெனில் திருவாரூர்த் தேருக்கு அடுத்தப்படியாக அவிநாசியப்பரின் திருத்தேர் பிரம்மாண்டமானது. இந்தத் தலத்துக்கு வந்த பதஞ்சலி முனிவர், இங்குள்ள கிணற்று நீரை, காசியின் கங்கை என நிரூபிப்பதற்காக, தனது கைத் தண்டத்தை, கிணற்றில் போட்டாராம்.
பிறகு, சக முனிவர்களுடன் அவர் காசிக்குச் சென்ற போது, கங்கையில் நீராடும் வேளையில், பதஞ்சலி முனிவரின் கைத்தண்டம் நீரில் மிதந்து வந்து அவரை அடைந்துள்ளது. உடன் வந்திருந்த முனிவர்கள், காசிக்கு நிகரான தலம் அவிநாசி எனப் பூரித்தனர். இந்தத் தலத்து இறைவனை மனதாரப் பிரார்த்தித்தால், இழந்த பொன்- பொருள், சந்தோஷம் அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
தல அற்புதங்கள்:
தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.
திருவிழாக்கள்:
சித்திரையில் பிரமோற்சவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன.
தல நேரம்:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |