பகவத் கீதை: உங்களுக்கு எப்பொழுது நல்லது நடக்கும் தெரியுமா?
பக்தி என்பது சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இவை எல்லாம் கடந்து பக்தி என்பது ஆனந்தத்தை தரக்கூடியது. அப்படியாக ஒருவருடைய பக்தி எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம். ஒருமுறை ஒரு கிருஷ்ண பக்தர் அவர் வாழ்க்கையில் நிறைய குழப்பங்களும், தடைகளும் பிரச்சனைகளும் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படியாக ஒரு நாள் என்ன இது? என் வாழ்க்கையில் இத்தனை பெரிய கஷ்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது? என்னால் இனி மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் உடனடியாக இப்பொழுதே கிளம்பி பகவானை சந்தித்து எனக்கு வேண்டும் வரத்தைக் கேட்கப் போகிறேன் என்று அவர் விவேகமாக கிளம்புகிறார்.
வீட்டிலிருந்து அவர் பகவானை பார்க்க கோவிலுக்கு செல்லும் பொழுது பகவானை பார்த்தவுடன் எனக்கு என்னவெல்லாம் வேண்டும்? தான் என்ன கேட்ப்பது? கட்டாயம் என் கேசவன் நான் கேட்டதை கொடுத்து விடுவார்.

அதனால் நான் சரியாக ஒரு விஷயத்தை கேட்க வேண்டும் என்று அவர் மனதிற்குள் என்ன வரம் வேண்டும் என்று கேட்பதில் ஆயிரம் குழப்பங்களுடன்பகவானை சேவிக்க ஆலயம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
கோவில் கோபுரம் வந்துவிட்டது. கோபுரத்தை பார்க்கிறார், அப்பொழுது அவர் மனதில் நிச்சயம் நான் ஒன்று கேட்க போகிறேன் அது கட்டாயம் பகவான் எனக்கு நடத்திக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கோபுர தரிசனம் செய்து முடித்து, கொடி மரத்தை நோக்கி செல்கிறார்.
கொடி மரத்தை பார்த்தவுடன் அவருக்கு மனதில் அத்தனை ஆனந்தம். இன்று பகவானிடம் எனக்கு வேண்டியதை கேட்கப் போகிறேன். இன்றோடு என் கவலையை பகவான் தீர்க்க போகிறார் என்று ஒரு குழந்தையை போல் அவர் செல்கிறார்.
ஆனால், அவர் போன நேரத்தில் சுவாமிக்குஅலகங்காரம் நடந்து கொண்டிருந்தது. அதனால் திரை சாற்றி மூடி வைத்திருந்தார்கள். ஒரு குழந்தை தன்னுடைய தந்தையிடம் எனக்கு ஒன்றை வாங்கி தாருங்கள் என்று அடம் பிடிப்பது போல் இவரும் நின்று கொண்டே இருக்கிறார்.

பகவானுக்கு அலங்காரம் முடித்து திரை விலகி பகவானை பார்த்தவர் தான், மெய் மறந்து, தான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்ன கேட்க வேண்டும் என்று பெருமாளை நோக்கி வந்தேன் என்பதை முற்றும் மறந்து பகவான் பாதத்தை சரணடைந்து சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று பகவானின் பார்த்து வாரே நின்று விட்டார்.
அப்பொழுது, அவர் மனதில் கேசவா! உன்னை பார்த்த கணத்தில் என்னை உணர்தேன். என் கவலை மறந்தேன். எனக்கு என்ன கிருஷ்ணா வேண்டும்? உன்னைத் தவிர எனக்கு என்ன வேண்டும்? உன்னை எப்பொழுதும் சேவிக்கும் பாக்கியத்தை கொடு என்று சரணாகதி ஆகிவிட்டார்.
ஆக ஒருவருடைய பக்தியானது இப்படித்தான் இருக்க வேண்டும். கோவிலுக்கு சென்று அதை கொடு! இதை கொடு என்று வேண்டுவதை விட , பகவானே நீ என்னுடன் மட்டும் இருந்தால் போதும் எனக்கு ஏது கவலை என்றுதான் நாம் இறைவனிடம் சரண் அடைய வேண்டும். இதைத்தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில்,
அனன்யாச் சிந்தயந்தோ மாம்
யே ஜனாஹ் பர்யுபாசதே
தேஷாம் நித்யாபியுக்தானம்
யோகம்-க்ஷேமம் வஹாமி அஹம்.

இதன் பொருள், எவர் ஒருவர் பகவான் கிருஷ்ணரை மட்டுமே நினைத்துக்கொண்டு அவனுடைய நாமத்தையே பாராயணம் செய்து கொண்டு, அவருடைய புகழை ஊராருக்கு சொல்லி வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நான் யோகத்தையும் மோட்சத்தையும் அருளுகிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பக்தன் பகவான் கிருஷ்ணரிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண் அடைந்து அவர் மீது பக்தியை செலுத்துகிறார்களோ, அவர்கள் துயரம் என்று என்னை நாடுமுன், அவர்களுடைய துயரை நான் தீர்த்து விடுவேன் என்கிறார் கிருஷ்ணர்.
ஆக, சரணடைவது மட்டுமே நம்முடைய வேலை, நடப்பதும், நடக்கப் போவது எல்லாம் கிருஷ்ணரின் செயல்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |