அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய மாசி மகம் வழிபாட்டின் முக்கியத்துவம்
வழிபாடுகளில் மாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்ய நம்முடைய பாவங்கள் கரையும் என்று நம்பப்படுகிறது. 12 மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே, 'மாசி மகம்' என்று கொண்டாடப்படுகிறது.
அதாவது,மாசி மாதத்தில் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் தினத்தையே மாசி மகம் என்கின்றோம். இந்த நாளில் நாம் ஆலயம் சென்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தையும் நல்ல பலனையும் கொடுக்கும்.
அதே போல் மாசி மகம் நாளில் மிக முக்கியமானதே கடலில் நீராடுவது தான். இதை தீர்த்தமாடும் நாள் என்றே சொல்லலாம். இதற்கு ஒரு புராண கதையும் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். ஒரு முறை வர்ண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டார்.
அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டது.. அதில் இருந்து விடுபட வர்ண பகவான் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அதே சமயம்,வர்ண பகவான் மழை கடவுள் என்பதால்,அவர் கட்டப்பட்ட சூழ்நிலையில் இருக்க உலகமும் வறட்சி சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் எல்லா உயிர்களும் துன்பப்பட்டது. இதனை சரி செய்ய தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாடி முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் வர்ண பகவானை விடுவித்தார்.
அவ்வாறு வர்ண பகவான் விடுதலை பெற்ற நாளையே மாசி மகம் என்று கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும்,வர்ண பகவான் தான் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுதலை பெற உதவிய சிவபெருமானை நோக்கி "ஈசனே நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிப்பட்ட பொழுதும் கடலில் இருந்து விடாது தங்களை பிராத்தனை செய்தேன்.
அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
சிவபெருமானும் அவ்வாறே ஆகட்டும்,என்று வரம் அருளினார். ஆதலால் மாசி மகம் அன்று விரதம் இருந்து புனித நீர்களில் நீராடினால் தீராத தோஷமும் நீங்கும். அதோடு வாழ்க்கையில் சந்தித்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல்,மாசி மகம் அன்று தான் தட்சனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. தட்சன் சிவபெருமானின் சரி பாதியான அவருடைய சக்தியே தனக்கு மகளாக பிறக்கவேண்டும் என்று கடும் தவம் இருந்தார்.
அந்த தவத்தின் முடிவாக உமாதேவி, தட்சனின் மகளாக அவதரித்தாள். பிறகு அவளுக்கு 'தாட்சாயிணி' என்று பெயர் சுட்டி சிவபெருமானுக்கு திருமணம் முடித்து கொடுத்ததாக புராணம் சொல்கிறது. இந்த நாளில் அம்பாளை வழிபடுவதும் சிறந்த பாக்கியத்தை வழங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |