மகாபாரதம்: பிறர் எண்ணங்களுக்கு அதிக முக்கியம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
உலகில் சுயநலமில்லாமல் வாழ்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் பல நேரங்களில் சுயநலத்தோடு வாழ்வதும் அவசியம் ஆகிறது. அப்படியாக வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும் தர்ம அதர்மத்தின் அளவுகோலை மிகச் சரியாக எடுத்துக் காட்டக் கூடிய மகாபாரதத்தில் நடந்த ஒரு அற்புதமான சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
அதாவது பிறருடைய எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் பிறருக்காக வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கை எந்த நிலைக்கு செல்லும் என்பதை பற்றி ஒரு அற்புதமான வரலாறு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

பீஷ்மரின் விசுவாசம்:
மகாபாரதத்தில் பீஷ்மர் தியாகத்தின் மறு உருவமாகவே திகழ்ந்தார். அவர் தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரின் இறுதி மூச்சு வரை பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடித்தார். அதேபோல் அவருடைய உயிர் உள்ளவரை அரச பதவி ஏற்காமல் அஸ்தினாபுர அரசனுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் வாக்களித்தார்.
இதனால் அஸ்தினாபுரத்தை தகுதியற்ற அரசர்கள் ஆட்சி செய்த பொழுதும் தகுதி உள்ள பீஷ்மர் தள்ளி நின்றதால் பல்வேறு குழப்பங்கள் உருவானது. அதைவிட தன்னுடைய தந்தையின் சொல்லுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அஸ்தினாபுரம் சபையில் எல்லார் முன்னிலையிலும் திரௌபதி துகிலுரிக்கப்படும் பொழுது அவர் தட்டிக் கேட்காமல் அமைதியாக ஒதுங்கி நின்றார்.
அந்த நேரத்தில் அவருடைய விசுவாசம் அவரை அதர்மத்தின் வழியே தான் கூட்டி சென்றது. இதனால் பீஷ்மர் அவருடைய தந்தையை திருப்தி செய்துவிட்ட ஒரு மகிழ்ச்சியை பெற்று விடுகிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அவர் அங்கு முழுமையாக இழந்து விடுகிறார்.
பீஷ்மர் உடைய விசுவாசத்தின் காரணமாக அவருடைய தந்தையின் வம்சம் அழிவதையும் அவரால் தடுக்க முடியவில்லை. ஒருவேளை பீஷ்மர் அரியணை ஏறி இருந்தால் மகாபாரதம் போருக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன்:
நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கர்ணன். தன்னை அவமானத்திலிருந்து காப்பாற்றிய நண்பனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். பலர் முன்னிலையில் அவமானம் அடைந்த கர்ணனை துரியோதனன் காப்பாற்றி உதவிய காரணத்திற்காக அவனுக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டவன்.
இருப்பினும் கர்ணன் சேர்த்து வைத்த மொத்த புண்ணியத்தையும் தர்மத்தையும் அவன் தன்னுடைய நண்பனை திருப்தி செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இழந்தான். கர்ணன் அவனுடைய நண்பன் தீய செயல்கள் செய்த போது அவனை எதிர்த்து அவனை நல்வழி படுத்திருக்கலாம்.
ஆனால் துரியோதனன் நினைத்ததை செய்து முடித்து விட வேண்டும் என்று எண்ணம் மட்டுமே கர்ணனுக்கு இருந்தது. கர்ணன் அஸ்திரம் பெற அர்ஜுனனை போல் தவம் செய்திருக்கலாம். ஆனால் துரியோதனன் பேச்சைக் கேட்டு பொய் சொல்லி பரசுராமரிடம் பிரம்மாஸ்திரம் கற்றுக்கொண்டு இறுதியில் முக்கிய தருணத்தில் அவனுக்கு அஸ்திரம் மறந்து போனது.
இவ்வாறு மகாபாரதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு கதைகள் இருக்கிறது. அதில் முக்கியமான இரண்டு நபர்களின் கதையை நாம் தெரிந்து கொள்ளும்பொழுதே விசுவாசமாக இருப்பது அவசியமென்றாலும் அதை கடைபிடிக்கும் நேரம் மிகவும் முக்கியம் என்று புரிகிறது.
விசுவாசம் என்கின்ற பெயரில் நம் முன் நடக்கக்கூடிய அதர்மத்திற்கு நாம் துணை சென்றுவிட்டால் நிச்சயம் நம்முடைய அழிவை நம்மால் தடுக்க முடியாது என்பதற்கு மிகப்பெரிய சான்றாக மகாபாரதம் திகழ்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |